சோழர் வரலாறு - கிள்ளி வளவன்
இந்தச் செய்தியை நக்கீரர் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் குறித்துள்ளார்.[11] கிள்ளிவளவன் இப்போரில் வெற்றி பெற்றிருப்பானாயின், அவனைப் பற்றிய 18 பாடல்களில் ஒன்றிலேனும் குறிக்கப் பெற்றிருப்பான். அவனைப் பாடிய புலவர் ஒன்பதின்மருள் ஒருவரேனும் இதனைக் குறியாமை ஒன்றே, அவன் பாண்டிப் போரில் தோற்றிருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. கிள்ளிவளவன் இறந்த பிறகும் அவனைப் புலவர் நால்வர் பாடியுள்ளனர். அப்பாடல்களிலும் பாண்டிப் போர் குறிக்கப்பட்டிலது. இவற்றை நோக்கக் கிள்ளிவளவன் பாண்டி நாட்டுப் போரில் தோற்றானாதல் வேண்டும் என்பது தெரிகிறது. கரிகாலன் ஏற்படுத்திய சோழப் பேரரசிற்குத் தன்னைப் போல உட்பட்டிருந்த பாண்டியன், அக்கரிகாலன் மரபில் வந்த கிள்ளிவள வனைத் தோற்கடித்துத் தன் ஆட்சி பெற்றதைக் கான (சேரமான்) கோக்கோதை மார்பன் மகிழ்ந்தனன் என்பது இயல்பே அன்றோ?
சேரநாட்டுப் போர்: இத்துடன், இச்சோழன் ‘குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்’ என இறந்தபின் பெயர் பெற்றான். ‘குளமுற்றம் என்னும் இடத்தில் இறந்த’ என்பது இதன்பொருள். குளமுற்றம் என்பது சேரநாட்டில் உள்ளதோர் ஊர். இவன் சேரனோடு செய்த போரில் இறந்தானாதல் வேண்டும்[12] என்பது தெரிகிறதன்றோ?
முடிவு: இவன் பல இடங்களிற் போர் செய்தான்; கருவூரை ஆண்ட சேர மன்னனை முதலில் தாக்கினான்; மலையமானைப் பகைத்துக் கொண்டான்' என்ற முற்செய்திகளையும் இவற்றோடு நோக்க, இவனது ஆட்சிக் காலத்தில், கரிகாலன் காலமுதற் சிற்றரசரான அனைவரும் தம்மாட்சி பெற முனைந்தனர் என்பதும், இறுதியில் வெற்றி பெற்றனர் என்பதும் தெளிவாக விளங்குகின்றன.
இவை அனைத்தையும் சீர்தூக்கின், கரிகாலன் உண்டாக்கிய சோழப் பேரரசு கிள்ளிவளவன் காலத்தில் சுருங்கிவிட்டது என்பது நன்கு விளங்குதல் காண்க.
கிள்ளிவளவன் பேரரசன்: தமிழ்நாட்டிற்கு உரியராகிய மூவேந்தருள்ளும் ‘அரசு’ என்பதற்கு உரிய சிறப்புடையது கிள்ளிவளவன் அரசே[13] என்று வெள்ளைக் குடிநாகனார் வெளிப்படுத்துவதிலிருந்து, இவன் அக்காலத்தில் தலைமை பெற்றிருந்த தன்மையை நன்கறியலாம். “செஞ்ஞாயிற்றின் கண் நிலவு வேண்டினும், வேண்டிய பொருளை உண்டாக்கும் வலிமை உடையவன்'[14] என்று ஆவூர் மூலங்கிழார் அறைந்தமை அவனது பேரரசுத் தன்மையை அன்றோ புலப்படுத்துவது? மிக்க பெரிய சேனையையுடைய அறிஞர் புகழ்ந்த நல்ல புகழையும் பரந்த சுடரினையும் உடைய ஆதித்தன் வானத்தின் கண் பரந்தாலொத்த தலைமையை உடைய செம்பியர் மரபினன் கிள்ளிவளவன், கொடிகள் அசைந்தாடும் யானைகளையுடைய மிகப் பெரிய வளவன்[15] என்று ஐயூர் முடவனார் அருளிச் செய்தமை அறியற்பாலது.
சிறந்த போர் விரன்: இவன் செய்த பல போர்கள் முன்னர்க் குறிக்கப்பட்டுள. பெரும் படைகளைக் கொண்ட இவனே சிறந்த போர்வீரன் என்பதும் புலவர் சொற்களால் அறியலாம். ‘அருஞ்சமம் கடக்கும் ஆற்றலன்’ என்று இவனை எருகாட்டுர்த் தாயங் கண்ணனார்[16] பாடியுள்ளது நோக்கத்தக்கது.
புலவன்-நண்பன்: கிள்ளிவளவன் சிறந்த புலவன் என்பது இவன் பாடிய புறநானூற்றுப் பாடலால் நன்கறியலாம். அங்ஙனமே அப்பாடலால், இவன் பண்ணன் என்பானிடம் கொண்டிருந்த சிறந்த நட்பும் தெரியலாம். அப்பாடலின் பொருள் பின்வருமாறு:
‘பழுத்த மரத்தினிடம் பறவைகள் கூடி ஒசையிடும். அது போலப் பண்ணன் விடுதியில் உண்டியால் உண்டாகிய ஆரவாரம் கேட்டுக் கொண்டே இருக்கும். மழை பெய்யும் காலத்தை நோக்கித் தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்தை அடையும் சிற்றெறும்பின் ஒழுங்குப் போலச் சோற்றுத் திரளையைக் கையில் உடையராய் வெவ்வேறு வரிசையாகச் செல்கின்ற பெரிய சுற்றத்துடன் கூடிய பிள்ளைகளைக் காண்கின்றோம். அங்ஙனம் கேட்டும் கண்டும், எம்பசி வருத்தலால், பசி நோய் தீர்க்கும் மருத்துவனது மனை அண்மையில் உள்ளதோ? சேய்மையில் உள்ளதோ? கூறுங்கள்’ என்று இப்பாணன் கேட்கின்றான். பாணரே, இவன், வறுமையைக் காண்பீராக. என் வறுமையும் தீர்த்து இவன் வறுமையும் தீர்க்க இருக்கின்ற பண்ணன், யான் உயிர் வாழ்நாளையும் பெற்று வாழ்வானாக”[17]
இவ்வழகிய பாடலில், கிள்ளிவளவன் தன் புலமையையும் தனது நண்பனாகிய பண்ணனது கொடைத் திறத்தையும் அவன்பால் தான் கொண்டிருந்த சிறந்த நட்பையும் ஒருங்கே விளங்கியிருத்தல் படித்து இன்புறற்பாலது.
புரவலன்: இவனைப் பாடியுள்ள புலவர் ஒன்பதின்மர் ஆவர். அவர் ஆலந்துர் கிழார்’[18], வெள்ளைக்குடி நாகனார்,[19] மாறோக்கத்து நப்பசலையார்,[20] ஆவூர் மூலங்கிழார்,[21]கோவூர்கிழார்,[22] ஆடுதுறை மாசாத்தனார்[23] ஐயூர் முடவனார்,[24] நல் இறையனார்,[25] எருக்கூட்டுர்த் தாயங்கண்ணனார்[26] என்போராவார். இவருள் ஆடுதுறை மாசாத்தனாரும் எருக்கூட்டுர்த் தாயங் கண்ணனாரும் இவன் இறந்த பின் வருந்திப் பாடிய செய்யுட்களே புறப்பாட்டில் இருக்கின்றன. அவர்கள் அவன் உயிரோடிருந்த பொழுது கண்டு பாடிய பாக்கள் கிடைத்தில. இந்த ஒன்பதின்மரையும் இவர்தம் புலமையறிந்து போற்றிப் பாதுகாத்த வளவன் பெருமையை என்னென்பது! சிறந்த கொடையாளியாகிய பண்ணனைத் தன் நண்பனாகப் பெற்றவனும் புலவர் ஒன்பதின்மரைப் பாதுகாத்தவனுமாகிய இக்கிள்ளி வளவன், தன்னளவில் சிறந்த புரவலன் என்பதில் ஐயமுண்டோ? இவன் இத்தன்மையனாக இருந்தமை யாற்றான் புலவர் ஒன்பதின்மர் பாடும் பேற்றைப் பெற்றான், அறவுரை பல அறையப் பெற்றான்; இறந்த பின்னும் புலவர் பாடல்கள் கொண்டான். அவன் இறந்தபின் இவனைப் பாடியவர், மேற்குறித்த ஒன்பதின்மருள் நால்வர் ஆவர். அவர் கோவூர் கிழார், மாறோக்கத்து நப்பசலையார், ஐயூர் முடவனார், ஆடுதுறை மாசாத்தனார் என்போராவர்.
- ↑ 11. அகம் 349; K.A.N. Sastry’s ‘Cholas,’ Vol 1.p.54
- ↑ 12. N.M.V. Nattar’s “Choals', p.69.
- ↑ 13. புறம் 35.
- ↑ 14. புறம் 38.
- ↑ 15. புறம் 228.
- ↑ 16. புறம், 397.
- ↑ 17. புறம் 173.
- ↑ 18. புறம் 34, 36, 69
- ↑ 19. புறம் 35.
- ↑ 20. புறம் 37,39,226.
- ↑ 21. புறம் 38, 40.
- ↑ 22. புறம் 41,46,70,386.
- ↑ 23. புறம் 227.
- ↑ 24. புறம் 228.
- ↑ 25. புறம் 363.
- ↑ 26. புறம் 397.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிள்ளி வளவன் - History of Chola - சோழர் வரலாறு - இவன், கிள்ளிவளவன், என்பது, சிறந்த, புலவர், பாடிய, போர், வளவன், முடவனார், ஆடுதுறை, பண்ணன், பெரிய, ஐயூர், கரிகாலன், அவன், அவனைப், போரில், வேண்டும், பெற்றான், இறந்த, என்பதும்