சோழர் வரலாறு - கரிகாற் பெருவளத்தான் காலம்
சங்ககாலச் சோழர் வரையறை
இக்கால முறையைக் கொண்டு சங்க காலச் சோழர் காலங்களை ஒருவாறு வரையறை செய்வோம்.
தொகை நூல்களிலும் சிலப்பதிகார - மணிமேகலைகளிலும் கூறப்பட்டுள்ள பழைய சோழராவார் பலர். அவருள் மிக்க பழைமையானவர் (1) சிபி. (2) முசுகுந்தன் (3) காந்தன் (4) தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் (5) மநுநீதிச் சோழன் என்போர் ஆவர். இவருள் மதுநீதிச் சோழன் மகனைத் தேர்க் காலிலிட்டுக் கொன்ற வரலாறு கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இலங்கையைப் பிடித்தாண்ட சோழன் ஒருவனது வரலாற்றில் ஒரு பகுதியாகக் காணப்படலால், மநுநீதிச் சோழன் காலம் ஏறத்தாழக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டெனக் கொள்ளலாம். ஏனையோர் அனைவரும் அதற்கு முற்பட்டவர் ஆவர். என்னை? அனைவரும் மிக்க பழைமை வாய்ந்தவர் என்று சங்க நூல்களே கூறலால் என்க.
மோரிய - பிந்துசாரன் படையெடுப்பை எதிர்த்து நின்ற (வரலாறு பிறகு விளக்கப்படும்) செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவன் காலம் கி.மு. 298 - கி.மு. 272, என்னை? அதுவே பிந்துசாரன் காலமாதலின் என்க. முன் பக்கத்திற் சொன்ன முதற் கரிகாலன் காலம் ஏறத்தாழக் கி.மு. 120 - கி.மு. 90 எனக் கொள்ளலாம். இரண்டாம் கரிகாலன் காலம் கி.மு. 60 - கி.மு.10 ஆகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் கோச்செங்கட் சோழன் வாழ்ந்தான். அவனுக்கு முன் சிலப்பதிகாரத்தில் (கி.பி.150 - 200) நெடுமுடிக் கிள்ளி சோழ அரசனாக இருந்தான். இவனுக்கு முற்பட்டவரும் கரிகாலனுக்குப் பிற்பட்ட வருமாக நலங்கிள்ளி, கிள்ளிவளவன் முதலியோரைக் கொள்ளலாம். இந்தக் குறிப்புகளைக் கொண்டு சங்ககாலப் பட்டியலைக் காலமுறைப்படி (ஒருவாறு) தொகுப்போம்:[11]
1. கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சோழர்:
(1) சிபி. (2) முசுகுந்தன் (3) காந்தன் (4) துரங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்.
2. கி.மு. 3-ஆம் நூற்றாண்டுச் சோழன்:-
செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி.
3. கி.மு. 2-ஆம் நூற்றாண்டுச் சோழர்:
(1) மநுநீதிச் சோழன் (2) முதற் கரிகாலன்
4. கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழன் :
இரண்டாம் கரிகாலன் (இமயம் வரை சென்றவன்)
5. கி.பி. 1 முதல் கி.பி. 150 வரை இருந்த சோழர் :
(1) நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான் (2) கிள்ளி வளவன் (3) பெருநற்கிள்ளி (4) கோப்பெருஞ் சோழன் (5) வேறு சோழ மரபினர் சிலர்.
6. கி.பி. 150 - 300 வரை இருந்த சோழர் :
(1) நெடுமுடிக்கிள்ளி, இளங்கிள்ளி முதலியோர்.
- ↑ 11. இக்கால வரையறை முற்றும் பொருத்தமான தென்றோ, முடிந்த முடிபென்றோ கருதலாகாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிகாற் பெருவளத்தான் காலம் - History of Chola - சோழர் வரலாறு - சோழன், சோழர், கரிகாலன், காலம், இரண்டாம், எறிந்த, நூற்றாண்டுச், கொள்ளலாம், மநுநீதிச்