சோழர் வரலாறு - கரிகாற் பெருவளத்தான் காலம்
இமயப் படையெடுப்பு
கரிகாலன் ஆட்சிக்காலம் என நாம் கொண்ட கி.மு. 60-கி.மு.10 ஆகிய காலத்தில் வடநாடு இருந்த நிலையைக் காணல் வேண்டும். மகதப்பெருநாடு சுங்கர் வசத்தினின்று ‘கண்வ’ மரபினர் கைக்கு மாறிவிட்டது. கி.மு.73-இல் ‘வாசுதேவ கண்வன்’ மகதநாட்டுக்கு அரசன் ஆனான். அவனுக்குப் பின் மூவர் கி.பி. 28 வரை ஆண்டனர். அவர் அனைவரும் வலியற்ற அரசரே ஆவர்.[7]அவர்கள் காலத்தில் கெளசாம்பியைத் தலைநகராகக் கொண்ட வச்சிர நாடும், உச்சையினியைக் கோ நகராகக் கொண்ட அவந்தி நாடும் தம்மாட்சி பெற்றனபோலும்; இன்றேல், கரிகாலன் இமயம் சென்று மீண்டபோது மகதநாட்டு மன்னன் பட்டி மண்டபமும், வச்சிர நாட்டு வேந்தன் கொற்றப்பந்தரும், அவந்திநாட்டு அரசன் தோரண வாயிலும் கொடுத்து மரியாதை செய்தனர் என்று சிலப்பதிகாரம் கூறலிற் பொருள் இராதன்றோ?[8] இந்நாட்டரசர் சந்திர குப்த மோரியன் கால முதல் சிற்றரசராகவும் அடிமைப்பட்டும் ஹர்ஷனுக்குப் பின்னும் இருந்து வந்தனர் என்பதற்கு வரலாறே சான்றாகும்.[9] கரிகாலன் வடநாட்டுப் படையெடுப்பைப் பற்றித் தமிழ் நூற் குறிப்பைத் தவிர வேறெவ்விதச் சான்றும் இதுவரை கிடைக்கவில்லை.
சங்ககாலக் கரிகாலர் இருவர்
கரிகாலன் என்று பெயர் தாங்கிய சோழர் இருவர் இருந்தனர் என்று ஆராய்ச்சியறிவு மிக்க திருவாளர் சிவராசப்பிள்ளை அவர்கள் கொண்டுள்ள முடிவு போற்றத்தக்கதே ஆகும். “இமயம் சென்ற கரிகாலனுக்கு முன்னிருந்த சோழர் இருவரைப்பாடியுள்ள பரணர், தமக்கு முன்னர் இருந்த கரிகாலன் ஒருவனைப் பற்றித் தம் பாக்களில் குறிப்பிட்டுள்ளார். பரணர், கரிகாலன் காலத்தினர் அல்லர். ஆனால் அவர் குறிக்கின்ற செய்திகள் அனைத்தும் செவிவழி அறிந்த செய்திகள். அவை அவருக்கு முன்னர் இருந்த கரிகாலன் ஒருவனைப் பற்றியன என்பனவே தெரிகின்றன. இந்நுட்பத்தை உணர்ந்த நான், கரிகாலன் என்ற பெயர் கொண்ட இருவரைப் பற்றிய செய்யுட்களையும் நன்கு ஆராய்ந்தேன்; இருவரைப் பற்றிய போர்கள் - போர் செய்த பகைவர், இவரைப் பாடிய புலவர்கள் வேறு வேறு என்பதை அறிந்தேன். முதற் கரிகாலனைப் பாடியவர் கழாத் தலையார், வெண்ணிக் குயத்தியார், என்பவர், பரணர் காலத்தவரான கபிலர், கழாத் தலையார் தமக்குக் காலத்தால் முற்பட்டவர் என்று தெளிவுறக் கூறுகிறார். இவ்விரு புலவரும், பெருஞ்சேரல் ஆதன் அல்லது பெருந்தோள் ஆதன் என்பவனைக் கரிகாலன் தோற்கடித்த செய்தியைக் கூறியுள்ளனர். பெருஞ்சேரலாதன் புறப்புண் நாணி வடக்கு இருந்தான். அப்பொழுது அவனைக் கழாத் தலையார் பாடினர். வென்ற கரிகால் வளவனை வெண்ணிக் குயத்தியார் பாராட்டியுள்ளனர்.
“இதுபோலவே வேறொரு ‘வெண்ணிப்போர்’ பொருநர் ஆற்றுப்படையுள் கூறப்பட்டுள்ளது. அதனைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார். அப்போர்கரிகாலனுக்கும் சேரன், சோழன் என்பார்க்கும் நடந்தது.போரில் கரிகாலன் அவ்விருவரையும் கொன்று வெற்றிபெற்றான். பொருநர் ஆற்றுப்படை என்பது கரிகாலனைப் பாராட்டிப் பாடப்பெற்ற நீண்ட அகவற்பா. அதனில், வெண்ணிப் போரில் மாண்ட சேரன் பெயரோ பாண்டியன் பெயரோ, குறிக்கப்படவில்லை. இப்போர், கழாத் தலையார் குறித்த போராக இருந்திருக்குமாயின், பாண்டியன் போர் செய்ததாக அவர் குறித்தல் வேண்டும். வெண்ணிக் குயத்தியாரும் பாண்டியனைப்பற்றி ஒன்றுமே குறித்திலர். இவ்விருவரும் குறித்த வெண்ணிப் போராக இஃது இருந்ததெனின் சேரன் புறப்புண் நாணி வடக்கிருந்ததை முடத்தாமக் கண்ணியார் குறித்திருத்தல் வேண்டும்.
“மேலும், வெண்ணிவாயிலில் நடந்த பெரும் போரில் கரிகாலன் வேந்தரையும் பதினொரு வேளிரையும் வென்றான் என்று பரணர் பாடியுள்ளார். அவரே பிறிதொரு செய்யுளில், “அரசர் ஒன்பதின்மர் ‘வாகை’ என்னும் இடத்தில் கரிகாலனோடு நடத்திய போரில் தோற்றனர்” என்று குறித்துள்ளார். இப்போர்ச் செய்திகள் பிற்காலக் கரிகாலனை (இமயம் சென்று மீண்ட கரிகாலனை)ப்பற்றிய நீண்ட பாக்களாகிய பொருநர் ஆற்றுப்படையிலும் பட்டினப்பாலையிலும் குறிப்பிடப்பட்டில. மேலும், சோழன் ஒரிடத்தில் பதினொரு வேளிருடனும் அரசருடனும், மற்றோர் இடத்தில் ஒன்பது அரசருடனும் போரிட வேண்டிய நிலைமை மிகவும் முற்பட்டதாகவே இருத்தல் வேண்டும் அன்றோ? சோழநாடு ஒரரசன் ஆட்சிக்கு உட்படாமல் - பல சிறு நாடுகளாகப் பிரிந்து பலர் ஆட்சியில் இருந்த காலத்திற்றான் இத்தகைய குழப்ப நிலைமை உண்டாதல் இயல்பு. பிற்காலக் கரிகாலன் பொதுவர், அருளாளர் என்பவருடனும் பாண்டியன் முதலியவருடனும் போர் செய்து வென்றதாகத்தான் பொருநர் ஆற்றுப்படை கூறுகிறது. பதினொரு வேளிர் ஒன்பது அரசர் என்பது நன்கு சிந்திக்கத்தக்க எண்கள் ஆகும். தொகை நூற் பாடல்களில் சோழர் என்னும் பன்மைச் சொல் பல இடங்களில் வருதலைக் காணலாம்; உறந்தை, வல்லம், குடந்தை, பருவூர், பெருந்துறை முதலிய பல இடங்களில் சோழ மரபினர் இருந்தனர் என்று தெரிகிறது. இக்குறிப்புகளால், தொடக்க காலமுதல் ஏறக்குறைய இரண்டாம் கரிகாலன் காலம் வரை சோழநாட்டில் சோழ மரபினர் பலர் பல இடங்களில் இருந்து ஆட்சி புரிந்தனர்; அவருள் மண்ணாசை கொண்ட ஒருவன் மற்றவரை வென்றடக்க முயன்றனன்.இதனால் பல இடங்களில் போர் நடந்தன என்பன ஒருவாறு அறியலாம். இம்மரபினருள் முதற் கரிகாலன் அழுந்துரை ஆண்ட சென்னி மரபினனாக இருக்கலாம்."
இந்நுட்பமான ஆராய்ச்சியால், இமயம் சென்ற கரிகாலன் இரண்டாம் கரிகாலன் என்பதும், வெண்ணிக் குயத்தியாரால் பாடப்பெற்றவன் முதற் கரிகாலன் என்பதும் அறியக்கிடத்தல் காண்க.[10] இதனால், ஆராய்ச்சியாளர் கணக்குப்படி, முதற்கரிகாலன் ஏறத்தாழ இரண்டாம் கரிகாலனுக்கு இரண்டு தலைமுறை முற்பட்டவன் ஆவன்; ஆகவே, அவன் காலம் ஏறத்தாழ, கி.மு. 120 - 90 எனக் கொள்ளலாம்.
- ↑ 7. V.A. Smith's ‘Early History of India,’ pp. 215-216.
- ↑ 8. இந்திரவிழவூரெடுத்த காதை, வரி, 99-104.
- ↑ 9. V.A. Smith’s ‘Early History of India’, p.369.
- ↑ 10. K.N.S. Pillai's ‘Chronology of the Early Tamils’, pp. 91-98.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிகாற் பெருவளத்தான் காலம் - History of Chola - சோழர் வரலாறு - கரிகாலன், கொண்ட, தலையார், கழாத், வெண்ணிக், போரில், இடங்களில், பொருநர், போர், வேண்டும், இருந்த, பரணர், பாண்டியன், பதினொரு, சேரன், இரண்டாம், மரபினர், முதற், சோழர், இமயம், அவர், செய்திகள்