சோழர் வரலாறு - முதலாம் இராசராசன்
உள்ளறை ஒவியங்களும் சிற்பங்களும் : பெரியகோவில் உள்ளறைத் திருச்சுற்றுச் சுவர் மீது இருவகைப் படைகள் இருக்கின்றன. மேற்புறப் படை மீது நாயக்க மன்னர் கால ஒவியம் காணப்படுகிறது. அதன் உட்புறம் இராசராசன் காலத்து ஒவியங்கள் காண்கின்றன. அவற்றின் விரிவை இரண்டாம் பகுதியிற் காண்க
இராசராசனது அளவு கடந்த சைவப் பற்றும் விரிந்த சமயநோக்கும் இப்பெரிய கோவில் விமானத்திலும் மற்றும் பல பகுதிகளிலும் மலிந்து கிடக்கும் சைவ வைணவ புராண சம்பந்தமான சிலைகள், சிற்பங்கள் ஆகியவற்றால் அறிவுறுத்தப் பெறுகின்றன. கோவிலின் நாற்புறமும் உயர்ந்த மதில்களின் மேலிருந்து விழுந்தும் பிறர் எடுத்துப் போனவையும்போக, எஞ்சிநிற்கும் 343 நந்தி உருவங்களும் இதனையே வலியுறுத்துவன. கோவில் விமானத்தின் தென்புற மதில் பக்கத்தில் சோழவீரர்தம் உருவங்களும், பிள்ளையார், திருமால், பிச்சாடனர், சூலதேவர், தென்முகக் கடவுள், மார்க்கண்டேயர், நடராசர் சிலைகளும் . மேல் பக்கத்தில் லிங்கோற்பவர், அர்த்த நாரீசுவரர் சிலைகளும்; வட பக்கத்தில் கங்காதரர், கலியாணசுந்தரர், மகிடாசுர மர்த்தினி படிமங்களும் வனப்புடன் உள்ளன. மற்றும், திருச்சுற்று மாளிகையின் நாககன்னியர், சமயக்குரவர் படிமங்கள் முதலியன நிலைபெறச் செய்துள்ளமை காணலாம்.
கோவில் எடுப்பித்த காரணம் : உலகளந்த ஈசுவரர் என்கிற சிவலிங்கசாமி, சிவகங்கைக் கோட்டை, சிவகங்கைத் திருக்குளத்துக்குள் தென்புறத்துள்ள ஒரு மேடைமீதுள்ள சிவலிங்க பொருபமாக அமைந்துள்ளது. இதுவே அப்பர் சுவாமிகள் ‘தஞ்சைத் தனிக்குளத்தார்’ என்று அழைத்த சிவபெருமானாக இருக்கலாம். அல்லது அம்முற்காலத்திலிருந்தே இத்தலத்தில் ஒரு கற்கோவில் இருந்து, பின்பு அதனை இராசராசன் பரந்த சைவப் பற்றிற்கு இலக்காக இப்போது இருக்கும் நிலையில் கட்டியிருக்கலாம்.[45] அறுமுகன் கோவில் முதலியன : இது நாயக்க மன்னர் காலத்தது. இது யானை குதிரைகள் பூட்டிய இரதம்போல அமைந்திருத்தல் காணத்தக்கது. கணபதி கோவில் சரபோசி மன்னன் காலத்தது. நடராசர் சந்நிதியும் பிற்காலத்ததே.
வேளைக்காரப்படை : இப்படையைப் பற்றி விவரங்கள் அறிதல் இன்றியமையாதது. இப்படைவீரர் உற்ற விடத்து உயிர் வழங்கும் தன்மையோர். இவர் படைகள் 14 இருந்தன. இவர் ‘இன்னவாறு செய்வேன், செய்யா தொழியின் இன்ன கேடுறுவேன்’ என வஞ்சினம் மொழிந்து, சொன்னவாறு நடப்பவர், தம் சோர்வால் அரசர்க்கு ஊறுநேரின், தாமும் தன் உயிரை மாய்ப்பர். தம் அடியார்க்கும் கேடு உண்டாகாது காத்தலின் முருகனை வேளைக்காரன் என்பர் திருவகுப்பு நூலுடையார் எனின், இவர் தம் சிறப்பினை என்னென்பது![46] ‘வேல’ என்னும் வடசொல் ‘ஒப்பந்தம்’ முதலிய பொருள்களைத் தருவது. அது தமிழில் வேளை என வரும். அரசனிடத்தில் உண்டு உடுத்து அவனைக் காக்கவும் சமயம் நேரின் அவனுக்காக உயிர் விடுவதாகவும் ஒப்பந்தம் செய்து கொண்டு உடனுறைபவரே வேளைக்காரர் எனப்படுவர். இங்ஙனம் அமைந்த வேளைக்காரர் பல படைகளாக அமைந்திருப்பர்[47].
சீனர் உறவு : இராசராசன் கடல் வாணிகத்தைப் பெருக்கினான்; கி.பி.1015-இல் முத்துகள் முதலிய பல உயர்ந்த பொருள்களைக் கையுறையாகத் தந்து தூதுக் குழு ஒன்றைச் சீனத்துக்கு அனுப்பினான். அக்குழுவினர்பேச்சை அரசனுக்கு நடுவர் மொழி பெயர்த்தனர். அரசன் அவர்களைத் தன் அரண்மனைக்கு அடுத்திருந்த விடுதியில் தங்கவிட்டான். அவர்கள் சென்ற காலத்தில் சீன அரசனது பிறந்தநாள் விழா நடந்தது. அரசன் அவர்கட்குப் பல பல பரிசுகள் அளித்துப் பெருமைப் படுத்தினான். இக்குறிப்புச் சீனர் நூல்களிற் காணப்படுகிறது.
விருதுப்பெயர்கள் : இராசராசன் கொண்ட விருதுப் பெயர்கள் மிகப் பலவாகும். இராசராசன், மும்முடிச் சோழன்[48], மும்முடிச் சோழன்[49], சயங்கொண்ட சோழன்[50] என்னும் பெயர்கள் மண்டலப் பெயர்களாகவும் வளநாடுகளின் பெயர்களாகவும் வழங்கின. இவையன்றி, இராசராசற்குச் சோழேந்திர சிம்மன், சிவபாதசேகரன், க்ஷத்திரிய சிகாமணி, ஜனநாதன், நிகரிலி சோழன், இராசேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராசாச்ரயன், இராச மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய குலாசனி[51], கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுல மாணிக்கம், தெலுங்க குல காலன் முதலியனவும் வழக்கில் இருந்தன. இப்பெயர்கள் பல சேரிகட்கு[52] இடப்பட்டிருந்தன என்பதைக் கல்வெட்டுகளால் நன்கறிவோம். சான்றாகத் தஞ்சாவூர்க் கோட்டத்தில் உள்ள திருக்களித்திட்டையில் பின்வரும் பெயர்கொண்ட சேரிகள் இருந்தன; அருள்மொழிதேவச் சேரி, ஜனநாதச் சேரி, நித்தவிநோதச் சேரி, இராசகேசரிச் சேரி, நிகரிலி சோழச் சேரி, அழகிய சோழச் சேரி, சிங்களாந்தகச் சேரி, குந்தவ்வை சேரி, சோழகுல சுந்தரச் சேரி, இராசமார்த்தாண்டச் சேரி, இராசராசச் சேரி என்பன[53].
- ↑ 45. செப்டம்பரில் நான் இவற்றை நேரே பார்வையிட்டேன். எனக்கு உடனிருந்து உதவி புரிந்தவர் அக்கோவில் அதிகாரியான திரு. J.M. சோமசுந்தரம் பிள்ளை, பி.ஏ. பி.எல், அவர்கள். இவற்றை முதன் முதல் கண்டறிந்தவர் S.K. கோவிந்தசாமி பிள்ளை, எம்.ஏ, ஆவர்.
- ↑ 46. J.M.S. Pillai’s ‘Solar Koyil Panikal’, p.31.
- ↑ 47. Pandit, L. Ulaganatha Pillai’s ‘Rajaraja’ pp.39,40Vol. 14 Part II, pp. 97-111-இல் இவர்களைப்பற்றிய முழு விவரங்கள் காண்க.
- ↑ 48. மும்மடங்கு பலமுடையவன்; அஃதாவது தன் முன்னோர் பெற்றிருந்த அரசியல் வன்மைபோல மும்மடங்கு வன்மை பெற்றவன் என்பது பொருள்.
- ↑ 49. சேர, சோழ, பாண்டியர் முடிகளை ஒன்றாக அணிந்த பேரரசன்.
- ↑ 50. இப்பெயர் கொண்ட ஊர் திருச்சிக் கோட்டத்தில் இன்றும் இருக்கிறது.
- ↑ 51. பாண்டிய மரபிற்கு இடியேறு போன்றவன்.
- ↑ 52. Wards
- ↑ 53. 292 of 1908.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதலாம் இராசராசன் - History of Chola - சோழர் வரலாறு - சேரி, இராசராசன், கோவில், சோழன், இவர், பக்கத்தில், இருந்தன