சோழர் வரலாறு - முதலாம் இராசராசன்
விழாக்கள் : இராசராசன் பிறந்த நாளான திருச்சதயத் திருவிழா திங்கள் தோறும் நடைபெற்றது. கார்த்திகை விழா நடைபெற்றது. இம்மாத விழாக்கள் அன்றி, ஆண்டு விழா ஒன்பது நாள் நடைபெற்றது. உடையார் உலாவிற் பின்வரும் சிவயோகியர் பதின்மர் உடையார் சாலையில் உணவு பெற்றனர். ஆண்டுவிழா வைகாசித் திங்களில் நடைபெற்றது. அப்பொழுது, பெரிய கோவிலில் இராச ராசேசுவர நாடகம் நடைபெறுதல் வழக்கம். நடிகன் ஆண்டு தோறும் 120 கல நெல் பெற்று வந்தான். இக்காலத்திற் குறவஞ்சி நாடகம் நடந்து வருகிறது.
சின்னங்கள் : இராசராசன் தான் வென்ற நாடுகளிலிருந்து கொணர்ந்த பொன்னால் காளங்கள் பல செய்தான்; அவற்றுக்குச் சிவபாத சேகரன், இராசராசன் எனப் பெயரிட்டான் அவற்றைப் பெரிய கோவிலுக்குத் தானமாக அளித்தான்.
அணிகள் : பொன்னால் அமைந்த திருப்பள்ளித் தொங்கல் மகுடம், முத்து மகுடம், திருக்கொற்றக் குடை மகுடம் முதலியனவும்; பொன்னிற் செய்து நவமணி பதித்த அணிகலன்கள் பலவும் இராசராசன் மனமகிழ்ச்சியோடு ஆடவல்லார்க்கு அளித்தான். இவனுடைய தமக்கையான குந்தவ்வையார் பல அணிகளும் பாத்திரங்களும் கொடுத்தனர்; அரசமாதேவியார் செய்த அறப்பணிகள் சில. அணிகலங்களை எவரும் மாற்றிடா வண்ணம் அரக்கு, செப்பாணி, சரடுகளை நீக்கிப் பொன்னை மட்டும் நிறுத்து விலை கண்டிருக்கிறது; அவற்றில் நவமணிகள் இருப்பின், அவை இத்துணைய, அவற்றின் நிறை இவ்வளவு, இன்னின்ன தன்மையன என்று குறிக்கப்பட்டு விலையும் கண்டிருத்தல் வியத்தற்குரியதே.
கோவிற் பணியாளர் : இராசராசேச்சரத்தில் கோவிற் பணியாளர் தலைவனாக இருந்தவன் பொய்கை நாட்டுக் கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்பவன். கோவிற்பணியைக் கண்காணி நாயகமாக இருந்து செய்தவன் பாண்டி நாடான இராசராச மண்டலத்துத் திருக்கானப் போர்க் கூற்றத்துப் பாளுர் கிழவன் அரவணையான் மாலரிகேவன் என்பவன். அருச்சகர் சிவாசாரியன் பவன பிடாரன் ஆவர். திருப்பதிகம் விண்ணப்பம் செய்பவர் 48 பேர்; இவரே பிற்காலத்தில் ‘ஒதுவார்’ எனப்பட்டனர். உடுக்கை வாசிப்பவன் ஒருவன்; கொட்டிமத்தளம் வாசிப்பான் ஒருவன். இவரன்றிக் கானபாடி, ஆரியம் பாடுவார், தமிழிசை பாடுவார் எனச் சிலரும் இருந்தனர். கோவிற்பணிகளைக் குறைவறச் செய்யப் பல இடங்களிலிருந்து 400 தேவரடியார் குடியேற்றம் பெற்றிருந்தனர். கோவிலை அடுத்து வடக்கிலும் தெற்கிலும் இவர்க்கு மனைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு வேலி நிபந்தம் கொடுக்கப்பட்டது. இப்பெண்மணிகள் பெயர்கட்குமுன்னர் நக்கன் எடுத்த பாதம், நக்கன்ராசராசகேசரி, நக்கன் சோழகுல சுந்தரி என்றாற்போல ‘நக்கன்’ என்னும் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. இசையில் வல்ல பெண்கள் காந்தர்விகள் எனப்பட்டனர். இசை வல்ல ஆடவர் காந்தர்வர் எனப்பட்டனர். காந்தர்வர் 75 பேர் இருந்தனர். கொட்டி மத்தளக்காரர், பக்கவாத்தியர், வீணை வாசிப்பவர், வங்கியம்பாடவியம்-மொரலியம்-உடுக்கை முதலியன முழக்குவோர் பலர் இருந்தனர். கரடிகை, சகடை உவச்சுப்பறை முதலிய பறைகளை அடிப்பவர் பலர் இருந்தனர். கோவில் பண்டாரிகள் (பொக்கிஷத்தார்), கணக்கர், மெய்காப்பார், பரிசாரகம் செய்பவர், திருவிளக்கிடுவார், மாலைகட்டுவோர், வண்ணமிடுவோர் (கோலம் போடுவோர்), சோதிடர், தச்சர், தட்டர், கன்னார், குடியர், தய்யார் (தையற்காரர்), நாவிதர், வண்ணார் முதலியவரும் நியமனம் பெற்றிருந்தனர்.இவர்க்கு வழிவழி வேலை கொடுக்கப்பட்டு வந்தது. அவரனைவரும் பெற்றுவந்த சம்பளம் நெல்லாகும். பெரிய கோவில் மூல பண்டாரம் ‘தஞ்சை விடங்கன்’ எனப் பெயர் பெற்றிருந்தது. கோவில் மரக்கால் ‘ஆடவல்லான்’ எனப் பட்டது.
பெரிய கோவில் கல்வெட்டுகள் : இராசராசன் காலத்துக் கல்வெட்டுகளே மிகப் பல. அவை அக்காலத்துப் பலரும் எழுந்தருளுவித்த திருமேனிகள், அவற்றுக்காக அவர்கள் கொடுத்த விளைநிலங்கள், பாத்திரங்கள், சின்னங்கள், நகைகள் முதலியவற்றுக்கு விவரமும், உப்பு முதல் கற்பூரம் வரை உள்ள எல்லாப் பண்டங்கட்கும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளும் குறிப்பனவாகும். இராசராசன் கல்வெட்டுகளும் இவன் தமக்கையார் குந்தவ்வையார் கல்வெட்டுகளும் விமான நடுவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இராசராசன் மனைவியர், மக்களுடைய கல்வெட்டுகள் திருச்சுற்று மாளிகையில் வெட்டப்பட்டுள்ளன. இராசராசன் மனைவியர், மக்களுடைய கல்வெட்டுகள் திருச்சுற்று மாளிகையில் வெட்டப் பட்டுள்ளன. இக்குறிப்பால், இவன் தன் தமக்கையாரிடம் வைத்த பெருமதிப்பு நன்கு விளங்குகிறது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இராசராசன் காலத்தவை 64; இராசேந்திரன் காலத்தவை 29; முதல் குலோத்துங்கன் காலத்தது 1; விக்கிரம் சோழனது 1; கோனேரின்மை கொண்டான் காலத்தவை 3; பிற்கால நாயக்கர், மராட்டியர் கல்வெட்டுகள் சில ஆகும்.
தேவதானச் சிற்றூர்கள் 35 : இராசராசன் பெரிய கோவில் வேலைகள் குறைவின்றி நடைபெற 35 சிற்றூர்களை விட்டதாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன.பெரிய சிற்றூர் 1000 ஏக்கர்க்கு மேற்பட்டது. நான்கு சிற்றூர்கள் 500 முதல் 1000 ஏக்கர் பரப்புள்ளவை; மூன்று 300 முதல் 400 ஏக்கர் பரப்புள்ளவை ஏழு 200 முதல் 300 ஏக்கர் பரப்புள்ளவை: ஆறு 100 முதல்200 ஏக்கர் பரப்புள்ளவை மூன்று 50 முதல் 100 ஏக்கர் பரப்புள்ளவை; ஆறு 5 முதல் 50 ஏக்கர் பரப்புடையவை; 25 ஏக்கர்க்கும் குறைந்த பரப்புடையவை இரண்டு[44].
- ↑ 44. S.I.I. Vol. II. Nos. 4.5; Altaker’s ‘Rashtra kutas and their times,’ p.148. 1939
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதலாம் இராசராசன் - History of Chola - சோழர் வரலாறு - இராசராசன், பெரிய, ஏக்கர், பரப்புள்ளவை, கல்வெட்டுகள், கோவில், நடைபெற்றது, இருந்தனர், காலத்தவை, எனப்பட்டனர், எனப், மகுடம்