சோழர் வரலாறு - சோழரது இருண்ட காலம்
சோழரும் பெரிய புராணமும்: இந்த இருண்டகாலச் சோழரைப் பற்றிய குறிப்புகள் கூறத்தக்க சிறப்புடைய நூல்கள் பெரிய புராணமும் திருமுறைகளுமே ஆகும். தேவாரக் குறிப்புகளும் வழி வழியாகச் சோணாட்டில் பேசப்பட்ட குறிப்புகளும் அக்காலத்திலிருந்து இன்று கிட்டாமற் போன வரலாற்றுக் குறிப்புகளும் கொண்டே சேக்கிழார் பெருமான் பெரிய புராணம் பாடி இருத்தலால், நாம், தாராளமாக அந்நூற் குறிப்புகளை இவ்விருண்டகாலத்தனவே எனக் கோடலில் தவறில்லை.
(1) களப்பிர அரசருள் ஒருவரான கூற்றுவ நாயனார் அப்பர்க்கு முற்பட்டவர்[36]. அவர் பல நாடுகளை வென்று, தமக்கு முடிசூட்டுமாறு தில்லைவாழ் அந்தணரை வேண்ட, அவர்கள் 'பழைமையான சோழற்கே முடி புனைவோம் - புதியவர்க்கு முடி புனையோம்' எனக்கூறி மறுத்து, அவர் சீற்றத்துக்கு அஞ்சிச் சேரநாடு சென்றனர்.[37]
(2) ஏறத்தாழக் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் தண்டி அடிகள் நாயனார் திருவாரூரில் சமணருடன் வாதிட்ட பொழுது நடுவனாக இருந்தவன் சோழ அரசன், ஆவன். அவன் திருவாரூரில் இருந்தான். அவன் தண்டியடிகட்குத் தோற்ற சமணரை அவர் சொற்படியே திருவாரூரை விட்டுப் போகச் செய்தான்.[38]
(3) பழையாறை என்பது கும்பகோணத்திற்கு அண்மையில் இருப்பது. அங்குச் சோழவேந்தன் அரண்மனை இராசேந்திரன் காலத்திலும் இருந்தது. திருநாவுக்கரசர் காலத்தில் அந்நகரில் சோழன் இருந்தான். அவனுக்கு அமைச்சர் இருந்தனர். அவன் அப்பரது உண்ணாவிரதத்தை அறிந்து, சமணரை விரட்டி, அவர்கள் மறைத்திருந்த சிவலிங்கத்தை அப்பர் கண்டு தரிசிக்குமாறு செய்தான்.[39]
(4) அப்பர் காலத்தவரான குங்கிலியக் கலய நாயனார் திருப்பனந்தாளுக்குச் சென்றார். அங்குள்ள சிவலிங்கம் ஒரு பால் சாய்ந்திருந்தது. சோழ மன்னன் யானைகளைப் பூட்டி லிங்கத்தை நேரே நிறுத்த முயன்றும் பயன்படாமையைக் கண்டார்; தாம் முயன்று அதை நிறுத்தினார். அது கேட்ட சோழன் அப்பெரியவரைப் பணிந்து மகிழ்ந்தான்.[40]
(5) பெரும்பாலும் இந்தச் சோழ அரசன் மகளாகவே நெடுமாறன் மனைவியாரான மங்கையர்க்கரசியார் இருத்தல் வேண்டும். என்னை? இந்நிகழ்ச்சி அப்பர் காலத்தே நடந்ததாகலின் என்க.
(6) ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்பவர் காவிரியின் வடகரையில் உள்ள திருப்பெரு மங்கலத்தவர். அவர் முன்னோரும் அவரும் தொன்று தொட்டுச் சோழ அரசன் படைத் தலைவராக இருந்தவர். அவர் சுந்தரர் காலத்தவர்.[41]
(7) சுந்தரர் காலத்திலே கோட்புலியார் என்னும் வேளாளர் இருந்தார். அவரும் சோழர் சேனைத் தலைவரே ஆவர். அவர் தம் அரசனுக்காகப் பெருஞ் சேனையுடன் சென்று போரிட்டார் என்று பெரிய புராணம் புகல்கின்றது.[42]
(8) சுந்தரர் சேரமான் பெருமாள் நாயனாருடன் பாண்டியனிடம் சென்றார். அங்கு அவன் மருமகனான சோழன் இருந்தான். நால்வரும் பல தளிகளைத் தரிசித்தனர்.[43]
சோழரும் வைணவ நூல்களும்
(1) தொண்டர் அடிப்பொடியாழ்வார் திருமங்கையாழ்வார் காலத்தவர். அவர் உறையூருக்கு வந்திருந்தார். அவரைத் தேவ தேவி என்பவர் தாம் உறையூரில் சோழர் அரண்மனையிலிருந்து வெளிவந்தபோது தான் முதல் முதலிற் கண்டதாகத் திவ்விய சூரி சரிதம் கூறுகிறது.
(2) திருமாலை அன்றி வேறு எவரையும் மணக்க இசையாதிருந்த உறையூர் நாச்சியார் 'தரும வருமன்' என்னும் சோழ அரசன் மகளார் ஆவர்.
(3) திருமங்கை என்பது சோழநாட்டின் கண்ணதோர் ஊர். திருமங்கை ஆழ்வார் கள்ளர் மரபினர். அவர் முதலில் சோழன் சேனைத் தலைவராகவே இருந்தனர்.[44]
முடிபு: இதுகாறும் பட்டயங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் என்பவற்றிலிருந்து கூறிவந்த குறிப்பு களால், சோழர் சிற்றரசராக உறையூர், பழையாறை, திருவாரூர் முதலிய இடங்களில் அரண்மனைகளை அமைத்துக் கொண்டிருந்தனர்; சிறந்த சமயத் தொண்டு செய்து வந்தனர்; அமைச்சர், படைத் தலைவர்களைப் பெற்றிருந்தனர்; பாண்டியர்க்குப் பெண் கொடுத்துப் பெண்பெற்று வந்தனர்; இந்த இருண்ட காலத்தில் வலியிழந்து சிற்றரசராக இருந்தும் கோவிற் பணிகளைக் குறைவின்றிச் செய்து வந்தனர் என்பன போன்ற பல செய்திகளை நன்கு அறியலாம் அன்றோ?
- ↑ 36. C.V.N. Iyer's Saivism in S. India', p.181.
- ↑ 37. கூற்றுவர் புராணம், 4.
- ↑ 38. தண்டியடிகள் புராணம், செ. 13-24.
- ↑ 39. அப்பர் புராணம், செ. 296-299.
- ↑ 40. குங்கிலியக்கலயர் புராணம், செ, 23-31
- ↑ 41. ஏயர்கோன் புராணம், செ. 5.
- ↑ 42. கோட்புலி நாயனார் புராணம், செ. 1.4.
- ↑ 43. கழறிற்றறிவார் புராணம், செ. 92-95.
- ↑ 44. K.A.N. Sastry's Cholas, “Vol.I.p.121.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோழரது இருண்ட காலம் - History of Chola - சோழர் வரலாறு - அவர், பெரிய, சோழன், அரசன், அவன், நாயனார், சோழர், வந்தனர், சுந்தரர், அப்பர், இருந்தான், குறிப்புகளும்