சோழர் வரலாறு - சோழரது இருண்ட காலம்
2. கோச் செங்கணான் எழுபது சிவன் கோவில்கள் கட்டினான் எனத் திருமங்கையாழ்வார் குறித்துள்ளார்.[10] சங்க காலத்தில் எந்த அரசனும் சிவன் கோவிலோ, திருமால் கோவிலோ கட்டியதற்குச் சான்றில்லை. சிவன் கோவில்கள் பலவாக ஒரே அரசனால் கட்டப்பட்ட காலம் சைவ உணர்ச்சி வேகம் மிகுதிப்பட்ட காலமாதல் வேண்டும். சங்க காலத்தில் அத்தகைய உணர்ச்சி வேகம் மிக்கிருந்ததாகக் கூறச் சான்றில்லை. சங்க காலத் தமிழகத்தில் பல சமயங்களும் அமைதியாக இருந்தன என்பதே அறியக் கிடக்கிறது. அவ்வமைதியான நிலையில் ஒர் அரசன் 70 கோவில்கள் கட்டுதல் அசம்பாவிதம். ஆயின், சங்க காலத்திற்குப் பின்னும் அப்பர்க்கு முன்னும் களப்பிரர்-பல்லவர் போன்ற வேற்றரசர் இடையீட்டால் பெளத்தமும் சமணமும் தமிழகத்தில் மிகுதியாகப் பரவலாயின. சங்க காலப் பாண்டியன் அளித்த பிரம்மதேயவுரிமையையே அழிக்கக்கூடிய நிலையில் களப்பிரர் சமயக் கொடுமை இருந்தது என்பது வேள்விக் குடிப்பட்டயத்தால் தெரிகிறது. அக்களப்பிரர் காலத்திற் நான் மதுரையில் மூர்த்தி நாயனார் துன்புற்றார். சோழ நாட்டில் தண்டியடிகள், நமி நந்தியடிகள் போன்ற சிவனடியார்க்கும் சமணர்க்கும் வாதங்கள் நடந்தன. இத்தகைய சமயப்பூசல்கள் நடந்து, சைவசமய வுணர்ச்சி மிகுந்து தோன்றிய பிற்காலத்தேதான் கோச்செங்கணான் போன்ற அரசர் பல கோவில்கள் கட்டிச் சைவத்தை வளர்க்க முற்பட்டிருத்தல் வேண்டும்.
3. கோச்செங்கணானைப் பற்றித் திருமங்கை யாழ்வார் வெளியிடும் கருத்துகள் இவையாகும்[11];
(1) உலகமாண்ட தென்னாடன்[12] குடகொங்கன் சோழன்.
(2) தென் தமிழன் வடபுலக்கோன்.
(3) கழல் மன்னர் மணிமுடிமேல் காகம் ஏறத் தெய்வ வாள் வலங்கொண்ட சோழன்.
(4) விறல் மன்னர் திறல் அறிய வெம்மாவுய்த்த செங்கணான் கோச் சோழன்.
(5) படைமன்னர் உடல் துணியப் பரிநாவுய்த்த தேராளன் கோச்சோழன்.
இக்குறிப்புகளால் இவன் (1) வலிபொருந்திய அரசர் பலரைப் போரில் கொன்றவன்-வென்றவன் என்பதும், (2) கொங்குநாடு வென்றவன் என்பதும், (3) சோழ நாட்டிற்கு வடக்கிருந்த நிலப்பகுதியை (தொண்டை நாட்டை) வென்றவன் என்பதும், (4) சிறந்த யானைப்படை, குதிரைப்படைகளை உடையவன் என்பதும் தெரிகின்றன.
'கழல் மன்னர், விறல் மன்னர், படை மன்னர்’ என்றதால் சோழனை எதிர்த்தவர் மிக்க வலிமையுடைய பகையரசர் என்பது பெறப்படும். அவர்களைச் செங்கணான் 'தெய்வ வாள்' கொண்டு வென்றான் என்பதாலும் பகைவரது பெருவலி உய்த்துணரப்படும். சங்க காலத்தில் இத்தகைய மன்னர் பலருடன் செங்கணான் போரிட்டது உண்மையாயின், அப்போரைப்பற்றிய சில செய்யுட்களேனும் அக்கால நூல்களில் இருந்திருக்க வேண்டும். இல்லையாயின் அவர்கள் இன்னவர் என்ற குறிப்பாவது இருத்தல் வேண்டும். கோச்செங்கணான் செங்குட்டுவனுக்குப் பிற்பட்டவன் (கி.பி. 200 - 250) என்பது வரலாற்று ஆசிரியர் கருத்து. அங்ஙனமாயின், அக்காலத்தில் அவனுடன் போரிட்ட கழல்-விறல்-படை மன்னர்’ யாவர்? சங்க காலத்தில் தொண்டை நாடும் சோழர் ஆட்சியில் இருந்தமை மணிமேகலையால் அறியலாம். அதற்கும் அப்பாற்பட்ட வடபுலத்தை இவன் வென்றான் எனக் கொள்ளின், அப்பகையரசர் யாவர் எனக் கூறுவது? சுருங்கக் கூறின், (1) இவன் அரசன் பலரை வென்றான் என்பதற்குச் சங்க நூல்களிற் சான்றில்லை; (2) இவன் அரசர் பலரை வென்றவனாகக் காண்கிறான்; (3) சங்க இறுதிக்காலத்திலேனும் இங்ஙணம் ஒர் அரசன் இருந்தான் என்று கூறத்தக்க சான்றுகள் இல்லை; (4) இவன் சிவன் கோவில்கள் பல கட்டினவன். இந்நான்கு காரணங்களால் கோச்செங்கணான் சங்க காலத்திற்குப் பிற்பட்டவனாக இருத்தல் கூடும் என்ற எண்ணமே பலப்படும்.
4. கோச்செங்கணான் தில்லையில் சமயத் தொண்டு செய்தவன் என்பது சேக்கிழார் கூற்று. 'தில்லை ஒரு சிவத்தலமாகச் சங்கச் செய்யுட்களில் கூறப்படாமை நோக்கத்தக்கது. அது கோச்செங்கணான் காலத்திற் சிறப்புப் பெற்றது. அவன் அங்கு மறையவரைக் குடியேற்றி மாளிகைகள் பல அமைத்தான்[13]. இங்ஙனம் தில்லை சிவத்தலமாகச் சிறப்புற்றமை சங்க காலத்திற்குப் பிறகே என்பது தவறாகாது.
5. கோச்செங்கணானது தந்தை பெயர் சுபதேவன் என்பது. தாய் பெயர் கமலவதி என்பது[14]. இப்பெயர் களைச் சோழப் பேரரசின் முதல் அமைச்சரான சேக்கிழார் தக்க சான்று கொண்டே கூறினராதல் வேண்டும். இப்பெயர்கள் தூய வடமொழிப் பெயர்கள். இவ்வாறு சங்க காலத்து அரச குடும்பத்தினர் வடமொழிப் பெயர்களை வைத்துக் கொண்டனர் என்பதற்குப் போதிய சான்றில்லை. சம்பந்தர் காலத்திற்கு முற்பட்ட சுமார் 6 அல்லது 5-ஆம் நூற்றாண்டினர் என்று கருதத்தக்க காரைக்கால் அம்மையார்க்குப் புனிதவதி என்பது பெயர். அப்பெயருடன் மேற்சொன்ன கமலவதி” என்ற பெயர் ஒப்பு நோக்கத்தக்கது.
இத்தகைய பல காரணங்களால் கோச்செங்கணான் சங்க காலத்தவன் ஆகான் எனக் கொள்ளலாம். ஆயின், அவன் அப்பர் சம்பந்தராற் பாடப்பட்டவன். ஆதலின், அவன் காலம் மேற்சொன்ன சங்க காலத்திற்குப் பிறகும் அப்பர் சம்பந்தர் காலத்திற்கு முன்னும் ஆதல் வேண்டும்; அஃதாவது, அவன் காலம் ஏறத்தாழ கி.பி. 300 - 600 - க்கு உட்பட்டது எனக்கூறலாம். இப்பரந்துபட்ட காலத்துள் அவன் வாழ்ந்திருக்கத் தக்க பொருத்தமான காலம் யாதெனக் காண்போம்.
- ↑ 10. திருநறையூர்ப் பதிகம், 8.
- ↑ 11. திருநாறையூர்ப் பதிகம், 3,4,5,6,9.
- ↑ 12. ‘தென்னவனாய் உலகாண்ட செங்கணான்’ என்ற சுந்தரர் தொடர் இதனுடன் ஒப்புநோக்கத் தக்கது.
- ↑ 13. கோச்செங்கட் சோழர் புராணம், 15,16.
- ↑ 14. கோச்செங்கட் சோழர் புராணம், 7.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோழரது இருண்ட காலம் - History of Chola - சோழர் வரலாறு - சங்க, என்பது, வேண்டும், கோச்செங்கணான், மன்னர், இவன், கோவில்கள், அவன், பெயர், காலத்தில், என்பதும், செங்கணான், சான்றில்லை, காலத்திற்குப், சிவன், காலம், எனக், வென்றவன், வென்றான், சோழன், அரசன், இத்தகைய, அரசர், கழல், விறல்