சோழர் வரலாறு - சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள்
கம்பராமாயணம் தமிழின் வளமையை வளமுறக் காட்டுக் பெருங்காப்பியமாகும். ஒட்டக் கூத்தர் பாடிய மூவர் உலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப் பரணி என்பன சோழ அரசர் மூவரைப் பற்றியவை. அவை வரலாற்றுக்குத் துணை செய்வன ஆகும். சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி வரலாற்றுச் சிறப்புடையது. கலிங்கப் படையெடுப்பு, சோழர் பரம்பரை, குலோத்துங்கன் சிறப்பு, அவனது தானைத் தலைவனான கருணாகரத் தொண்டைமான் சிறப்பு இன்ன பிறவும் இனிதறிய இந்நூல் உதவி செய்கிறது. வைணவ நூல்களான திவ்ய சூரி சரிதம், குருபரம்பரை என்பன எழுதப்பட்ட காலமும் சோழர் காலமே ஆகும். இவை இராமாநுசர் காலத்தை உறுதிப் படுத்தவும் அக்காலத் தமிழ்நடை, வைணவ சமயநிலை முதலியவற்றை அறியவும் உதவுகின்றன. ஆழ்வார் பாசுரங்கட்கு விரிவுரை வரைந்த காலமும் ஏறக்குறைய இதுவே ஆகும். புத்தமித்திரர் என்பவர் செய்த வீரசோழியம் வீர ராசேந்திரன் காலத்ததே ஆகும். யாப்பருங்கலக் காரிகை, விருத்தி என்பனவும் இக்காலத்தேதான் செய்யப்பட்டன. சைவ சித்தாந்த சாத்திரங்களிற் பல இக்காலத்தேதான் செய்யப்பட்டன.
வெளிச் சான்றுகள்
சாசனங்கள்: சோழர் காலத்தில் சோழப் பெரு நாட்டைச் சூழ இருந்தாண்ட மேலைச் சாளுக்கியர், கீழைச் சாளுக்கியர், இராட்டிரகூடர், கங்கர் முதலிய பலதிறப்பட்டோர் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் சோழர் வரலாற்றையும் காலங்களையும் அறிய ஒரளவு துணை புரிகின்றன. சோழர்க்கு அடங்கிச் சிற்றரசராக இருந்து ஆண்டவர் பட்டயங்களும் வேண்டற் பாலனவே ஆகும்.
வெளிநாட்டார் குறிப்புகள் : சீனர் சிலர் எழுதி வைத்துள்ள செலவு (யாத்திரை)க் குறிப்புகள், அராபியர் குறித்துள்ள செலவுக் குறிப்புகள், மார்க்கோபோலோ போன்றோர் எழுதியுள்ள குறிப்புகள், மகாவம்சம் முதலியன இக்காலத் தமிழக நிலைமையை நன்கு விளக்குவனவாகும்.
சோழர் வரலாற்று நூல்கள்
இதுகாறும் கூறிய பலவகைச் சான்றுகளின் துணையைக் கொண்டு வரலாற்றுத் துறையிற் புகழ் பெற்ற பேராசிரியர் K.A. நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் விரிவான முறையில் சோழர் வரலாற்றை வரைந்து அழியாப் புகழ்பெற்றுள்ளனர். இவர்க்கு முன்னமே நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் (சங்ககாலச்) ‘சோழர் சரித்திரம்’ என்றொரு நூலை வரைந்துளர், அறிஞர் பலர் பல வெளியீடுகளில் சோழர்களைப் பற்றிப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரைந்துள்ளனர். பண்டித உலக நாத பிள்ளை அவர்கள் கரிகாலன், இராசராசன்வரலாறுகளைத் தனித்தனி நூல்களாக வெளியிட்டுளர். பி.நா. சுப்பிரமணியன் என்பவர் இராசேந்திரன் வரலாற்றைத் தனி நூலாக வரைந்துள்ளார். பண்டிதர் சதாசிவப் பண்டாரத்தாரும் L. சீனிவாசன் என்பவரும் முதற் குலோத்துங்கன் வரலாற்றைத் தனி நூலாக எழுதியுள்ளனர். வரலாற்று ஆசிரியர் திருவாளர் இராமசந்திர தீக்ஷிதர் அவர்கள் மூன்றாம் குலோத்துங்கன்வரலாற்றைத் தனி நூலாக வெளியிட்டனர். இந்நூல் ஆசிரியர் இரண்டாம் குலோத்துங்கன் வரலாற்றைத் தனி நூலாக வரைந்துள்ளனர்.
திருவாளர் கோட்டாறு - சிவராஜப் பிள்ளை அவர்கள் ‘பண்டைத் தமிழ்க் கால நிலை’ என்னும் அரிய ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் வெளிப்படுத்தி உள்ளனர். திருவாளர் J.M. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் ‘சோழர் கோவிற் பணிகள்’, ‘தஞ்சைப் பெரிய கோவில்’ என்னும் ஆராய்ச்சி நூல்கள் இரண்டை வரைந்துள்ளனர்.
‘ஆராய்ச்சி’ என்பது முடிவற்றது; நாளும் வளர்ந்து வருவது. ஆதலின், மேற்கண்ட நூல்கள் வெளிவந்த பிறகு சில வரலாற்றுச் செய்திகள் புதியனவாக அறிஞரால் வெளியிடப் பெறுதல் இயல்பே அன்றோ? அங்ஙனம் இன்றளவும் வெளிவந்துள்ள குறிப்புகளும் பிறவும் வரலாற்று முறைக்கும் தமிழ் முறைக்கும் மாறுபடா வகையில் நன்கு ஆய்ந்து வெளியிடலே இந்நூலின் நன்னோக்கம் ஆகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள் - History of Chola - சோழர் வரலாறு - சோழர், ஆகும், நூலாக, குலோத்துங்கன், குறிப்புகள், வரலாற்றைத், திருவாளர், நூல்கள், வரலாற்று, வரைந்துள்ளனர், பிள்ளை