1. பிரம்ம புராணம் - பதினெண் புராணங்கள்
பிரம்ம புராணம் என்று கூறப்படும் இப்புராணம் ஆதிபுராணம் என்றும் சொல்லப்படும். பிரம்ம புராணம் என்பது, பரப்பிரம்மத்தைப் பற்றிக் கூறுவது என்று பொருள்தரும். இதன் மூலம் இப்பொழுது கிடைக்க வில்லை. கிடைத்துள்ள பகுதி மூலத்தோடு எவ்வளவு தொடர்புடையது என்று சொல்வதற்கில்லை. ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுதுள்ள பிரம்ம புராணத்தை உப புராணங்களில் ஒன்றே எனக் கருதுகின்றனர். இந்த பிரம்ம புராணம் பரப்பிரம்மத்தை விரிவாக விளக்கத் தொடங்குகிறது. தைத்திரிய உபநிடதத்தில் பிருகு வல்லி கூறும் பரப்பிரம்மம் பற்றிய இலக்கணத்தை அடியொற்றியே இந்த பிரம்ம புராணம் பேசுகிறது.
“எந்தப் பரப்பிரம்மத்திலிருந்து இந்த உயிர்கள் தோன்றுகின்றனவோ, எந்தப் பரப்பிரம்மத்தின் தயவால் இந்த உயிர்கள் உலகிடை நிலை பெறுகின்றனவோ, அந்தப் பரப்பிரம்மத்தினிடமே இந்த உயிர்கள் அனைத்தும் சென்று அடைகின்றன" - இதுவே பிருகுவல்லி கூறும் பரப்பிரம்மத்தின் இலக்கணம்.
“சத்தியம், ஞானம், ஆனந்தம், பிரம்மம் என்ற சுருதி வாக்கியத்தை அடியொற்றி, “அது என்றுமுள்ளது, ஆனந்த மயமானது, தூய்மையே வடிவானது, கருணை நிரம்பியது, ஞான வடிவானது என்று பிரம்ம புராணம் பேசுகிறது. வாழ்க்கையின் குறிக்கோள் தர்மமே என்று பேசுகிறது.
இப்புராணம் 246 அதிகாரங்களையும், 14,000 பாடல்களையும் கொண்டது. லோமஹர்ஷனரே இப் புராணத்தைக் கூறுவதாக பிரம்ம புராணம் தொடங்குகிறது. பிரபஞ்ச உற்பத்தி நிலைபேறு, அழிவு ஆகியவற்றை மற்ற புராணங்கள் கூறுவது போலவே பிரம்ம புராணமும் கூறுகிறது. இந்த ஸ்வேத வராக கல்பத்தில் பிருது முதன்முதலில் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான் என்ற கதை இப்புராணத்தில்தான் வருகிறது.
இந்தப் புராணத்தில் பாரத நாட்டின் வடகோடியிலிருந்து, தென்பகுதிவரை உள்ள ஆறுகள், தீர்த்தங்கள், புண்ணியத் தலங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து விவரிப்பதன் மூலம், இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு முதன்முதலாக வடிவு கொடுக்கின்றது. கங்கை, கோதாவரி, கோமதி ஆகிய ஆறுகள் நாட்டின் விளைச்சலை அதிகப்படுத்தி, பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்கும் செயல் விரிவாகக் கூறப்படுகிறது.
இந்தப் புராணத்தில், கங்கைச் சமவெளியில் கங்கை நதி பாயுமாறு பகிரதன் செய்த முயற்சியும், இந்தியாவின் தென்பகுதியில் கோதாவரி பாயுமாறு கெளதம முனிவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் இப்புராணத்தில் பேசப் பெறுகின்றன. கோதாவரி நதிக்கரையில் உள்ள புண்ணியத் தலங்கள் பற்றியும் இப்புராணத்தில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
(பிரம்மம், பிரம்மன் இரண்டு பெயர்களும் முற்றிலும் வெவ்வேறானவை. பிரம்மம் என்பது மூவப் பரம்பொருளைக் குறிக்கும் சொல் பிரம்மன் எண்டது மும்மூர்த்திகளில் ஒருவராகிய நான்முகனைக் குறிக்கும். இப்புராணம் பிரமன் + புராணம் = பிரம்ம புராணம் என்று பெயர் பெற்றுள்ளது.இது குறிப்பிடுவது பிரம்மனையே என்று அறிந்து கொள்ளவும்)
நைமிசாரண்ய வனம் மிகவும் வனப்பு வாய்ந்த ஒரு பகுதியாகும். பூத்துக் குலுங்கும் மரம், செடி, கொடிகள், பறந்து திரியும் பறவைகள், ஒடித் திரியும் விலங்குகள், சலசலத்தோடும் ஒடைகள் ஆகியவை நிறைந்துள்ள பகுதியாகும் நைமி சாரண்யம். யாருக்கும் உணவுப் பஞ்சமில்லாமல் இயற்கை வளங்களை வாரிக் கொடுக்கும் சிறப்புடையது நைமி சாரண்யம். இக்காரணங்களால் பல முனிவர்களும், ரிஷிகளும், துறவிகளும் இவ்வனத்தில் வாழ்ந்தனர். இயற்கை வளங்கள் நிறைந்திருந்தமையால் பல வேள்விகளும், யாகங்களும் அடிக்கடி இங்கு நடைபெற்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
1. பிரம்ம புராணம் - Brahma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பிரம்ம, புராணம், இப்புராணம், கோதாவரி, நாட்டின், பேசுகிறது, உயிர்கள், பிரம்மம்