கேள்வி எண் 59 - சட்டக்கேள்விகள் 100
59. உயில் மூலம் சரிபாதியாக பிரித்து எழுதிய பத்திரங்கள் என் சகோதரனிடம் உள்ளது. அதை எவ்வாறு நான் பெறுவது?
எனது தந்தை தற்போது உயிரோடில்லை. இறக்கும் முன் அவரது சொத்துக்கள் அனைத்தும் என் அண்ணனுக்கும் எனக்கும் சரிபாதியாக சேர வேண்டும் என உயில் எழுதி வைத்து விட்டார். ஆனால் எனது அண்ணன் சொத்துக்கான அனைத்து பத்திரங்கள் மற்றும் லீகல் ஷேர் சர்டிபிகேட் உட்பட அனைத்தையும் தான் வைத்துக்கொண்டு, எனக்கு அவற்றின் நகலை கூட தரமறுக்கிறார். நான் என் தந்தையின் லீகல் ஷேர் சர்டி பிகேட் இன்னொரு காப்பி வாங்க முடியுமா? எனது அண் ணன் வெளி நாட்டில் வேலை செய்கிறார். தற்போது இந்தியா வந்துள்ளார். சொத்தில் எனக்கு சகல உரிமையும் இருந்தும், எனக்கு சரி பாதி சொத்தை தர மறுக்கும் அண்ணனிடம் எப்படி சொத்தை கேட்டு வாங்குவது? இந்த விஷயத்தில் என்னிடம் எந்த கோப்புகளும் இல்லாமல் என்னால் வழக்கு தொடர முடியுமா?
- S. மோகன்குமார், சென்னை
பதில் :
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். “ஐந்து வயது வரை அண்ணன் -தம்பி; பத்து வயதில் பங்காளி” என்று. எத்தனை அண்ணன்-தம்பிகளிடையே பங்காளி சண்டை வந்து சொத்துக்காக நீதிமன்றம் வருகிறார்கள் என்பது வழக்குரைஞர்களுக்கும் நீதிமன்றத்தில் பணி புரிவோருக்குத்தான் தெரியும்.
உங்கள் விஷயத்தில் உங்களுக்கு அனைத்து உரிமைகள் இருந்தும், அண்ணன் உங்களுக்கு சொத்தை தர மறுக்கிறார். தவறு முழுதும் அவர் மீதுதான். இவ்விஷயத்தில் நீங்கள் சொத்தை பிரித்துத் தருமாறு உங்கள் அண்ணன் மீது “பார்டிஷன் சூட்” (Partition Suit) போட வேண்டும். இந்த வழக்கு தொடர, சொத்து சம்பந்தமான தாக்கீதுகள் கூட தேவையில்லை.
உங்கள் பெயர், நீங்கள் வசிக்கும் முகவரி இவை இரண்டுக்குமான அடையாளங்கள் (ரேஷன் கார்டு போன்ற போட்டோ அடையாள அட்டை மற்றும் வீட்டு விலாசம் காட்டும் ஒரு தாக்கீது) இவை இருந்தாலே போதும். உங்கள் அண்ணன் எல்லா முக்கிய தாக்கீதுகளையும் தன் வசம் வைத்துக் கொண்டு இருப்பதால் உங்களால் அவற்றின் நகலை கூட சமர்ப்பிக்க முடியவில்லை என வழக்கில் சொல்லலாம். பிரச்னை இருக்காது.
உங்கள் சொத்து எங்கு இருக்கிறதோ அந்த எல்லைக்குட் பட்ட சிவில் நீதிமன்றத்தில் (சொத்தின் மதிப்பை பொறுத்து முன்சீப் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்) வழக்கு தொடர வேண்டும்.
அண்ணன் மீது வழக்கு தொடர யோசனையாக இருந்தால் இருவருக்கும் பொதுவான பெரியவர்கள் மூலமாக பேசிப் பாருங்கள். அதிலும் அவர் சரி வரவில்லையெனில் வழக்கு தொடர்வதைத் தவிர வேறுவழி இல்லை. அவர் வெளிநாட்டில் உள்ளார் என்கிறீர்கள். இதனை நீதிமன்றத்தில் கூறி அவர் வெளிநாடு செல்வதற்குள் இடைக்கால உத்தரவு (Interim Order) வேண்டும் எனக் கேட்டு வாங்கலாம். இப்படி வழக்கு இருக்கும்போது, வெளிநாடு செல்வது பிரச்னையாகும் என்பதால் உங்கள் அண்ணன் இறங்கி வர வாய்ப்பிருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, அண்ணன், உங்கள், வழக்கு, சொத்தை, நீதிமன்றத்தில், தொடர, அவர், வேண்டும், எனது, எனக்கு, விஷயத்தில், வெளிநாடு, சொத்து, மீது, உங்களுக்கு, கேட்டு, நீங்கள், முடியுமா, தற்போது, நான், பத்திரங்கள், சரிபாதியாக, அனைத்து, லீகல், உயில், நகலை, அவற்றின், ஷேர், இருந்தும்