கேள்வி எண் 16 - சட்டக்கேள்விகள் 100
16. லஞ்சம் கொடுக்க தவறினால் பொய்வழக்கு போடுவதாக மிரட்டும் காவல்துறையை எவ்வாறு எதிர்கொள்வது?
ஐயா, எங்கள் குடும்பத் தகராறு ஒன்றில் கைகலப்பு ஏற்பட்டு அது பெரிய சண்டையில் முடிந்துவிட்டது. இதில் என்னுடைய மைத்துனரின் இடது கை மூட்டு எலும்பு உடைந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எங்கள் இரு குடும்பத்தாரின் மீதும் தவறு இருப்பதை உணர்ந்து நாங்களே சமாதானமாக போகும் வேளையில் தேவையில்லாமல் போலீஸார் தலையிட்டு எங்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிவிட்டனர். மேலும் காவல்துறையினைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி 1000 கொடு. 2,000 கொடு என்று துன்புறுத்துகிறார்கள். கொடுக்கத் தவறினால் உங்களிடம் வாங்கிய வாக்கு மூலத்தை வைத்து உங்கள் எல்லோரையும் ஜெயிலில் அடைத்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தயவு செய்து ஐயா அவர்கள் இதற்கான தீர்வு கூறினால் நன்றாக இருக்கும்.
- ஆ. பாசுரவள்ளி, மதுரை
பதில் :
உங்கள் கேள்வியிலேயே நீங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்கிறீர்கள் என்பது புரிகிறது. எனினும் ஒருவர் கை எலும்பு முறியும் அளவிற்கு அவரை தாக்கியது நிச்சயம் குற்றச்செயல்தான். மேலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை நிர்வாகமே காவல்துறைக்கு தகவல் அளிக்க கடமைப்பட்டுள்ளது. இதன் மூலம் காவல்துறையினர் உங்களிடம் விசாரணை மேற்கொண்டிருக்கக்கூடும், இது ஒரு நேர்மறையான செயல்தான். இதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ஆனால் நீங்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து மிரட்டுவது என்பது சரியான செயல் அல்ல. அப்படி மிரட்டும் பட்சத்தில் நீங்கள் அதற்கு பயப்படவேண்டிய அவசியமுமில்லை. ஏனெனில், சாட்சியச் சட்டப் பிரிவு 25-ன் படி எந்தவொரு வழக்கிலும் கைது செய்யப்பட்டவர் போலீசாரிடம் ஓர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் அது சட்டப்படி செல்லத்தக்கதல்ல. காவல்துறையினர் கைதியை அடித்து, மிரட்டி, ஆசை வார்த்தை கூறி வாங்கப்படும் வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது. மேலும் சாட்சியச் சட்டப்பிரிவு 27இன்படி ஏதேனும் பொருட்கள் ஒப்புதல் வாக்குமூலத்தில் சொல்லியுள்ளவாறு கைப்பற்றப்பட்டால் அதுமட்டுமே சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் காவல்துறையினர் உங்களிடம் பணம் வசூலிக்கும் நோக்கத்தில் செயல்பட்டால் இது பற்றி காவல்துறை உயர் அதிகாரிகளிடம், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியைப்பற்றி புகார் அளிப்பதன் மூலமே நல்ல தீர்வு கிட்டும், அங்கும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் ஒரு நல்ல வழக்குரைஞரை அணுகுவதன் மூலம் இதிலிருந்து விடை பெறலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, ஒப்புதல், மேலும், தீர்வு, நீங்கள், காவல்துறையினர், உங்களிடம், மூலம், என்பது, எங்கள், மிரட்டும், வாக்குமூலத்தை, நல்ல, சாட்சியச், பட்சத்தில், இதில், தெரியவில்லை, வாக்குமூலம், அவர், அனுமதிக்கப்பட்டுள்ளார், எலும்பு, கொடு, உங்கள், வைத்து, தவறினால், மருத்துவமனையில்