முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஜான் லாக் (கி.பி.1632 - கி.பி.1704)
ஜான் லாக் (கி.பி.1632 - கி.பி.1704)

புகழ்பெற்ற ஆங்கிலத் தத்துவஞானியாகிய ஜான் லாக் அரசமைப்போடு இசைவுடைய மக்களாட்சி பற்றிய அடிப்படைக் கொள்கைகளை ஒருங்கிணைத்து முறைப்பட அமைத்துத் தந்த முதலாவது எழுத்தாளர் ஆவார். இவருடைய கொள்கைகள், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிறுவனத் தந்தையர்கள் (Founding Fathers) மீதும் ஃபிரெஞ்சு மறுமலர்ச்சி இயக்கத்தில் பல முன்னணித் தத்துவஞானிகள் மீதும் பேரளவுக்குச் செல்வாக்குச் செலுத்தியது எனில் மிகையன்று.
இங்கிலாந்திலுள்ள ரிங்ட்டன் என்னும் நகரில் 1632 ஆம் ஆண்டில் ஜான் லாக் பிறந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று, 1656 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டமும், 1658 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இளமையில் இவர் அறிவியலில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். 36 ஆம் வயதில் பிரிட்டனின் தேசிய அறிவியல் வளர்ச்சிக் கழகத்திற்கு (Royal Society) இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். புகழ்பெற்ற வேதியியல் அறிஞரான ராபர்ட் பாயிலுடன் நெருங்கிய நட்புக் கொண்டார். தமது வாழ்வின் பிற்காலத்தில் ஐசக் நியூட்டனுக்கும் உற்ற நண்பரானார். மருத்துவத்திலும் இவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. மருத்துவத்துறையிலும் இவர் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆனால், மிக அரிதாகவே மருத்துவத் தொழில் செய்தார்.
ஷாஃப்டஸ்பரி பிரபுவுடன் இவருக்குக் கிடைத்த நட்பு, இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முளையாக அமைந்தது. ஷாஃப்டஸ்பரி பிரபுவுக்கு இவர் செயலாளராகவும் குடும்ப மருத்துவராகவும் ஆனார். ஷாஃப்டஸ்வரி தம் காலத்தில் முற்போக்கான அரசியல் கொள்கைகளை வலியுறுத்திய முக்கியத் தலைவராக விளங்கினார். ஷாஃப்டஸ்பரி அரசியல் நடவடிக்கைகளுக்காக இரண்டாம் சார்லஸ் மன்னர் அவரை சிறிது காலம் சிறையிலடைத்திருந்தார். 1682 ஆம் ஆண்டில் ஷாஃப்டஸ்பரி ஹாலந்துக்குத் தப்பியோடினார். அதற்கு அடுத்த ஆண்டில் அங்கு அவர் காலமானார். ஷாஃப்டஸ்பரியுடன் நெருங்கிய தொடர்புக் கொண்டிருந்தமையால் ஜான் லாக் மீதும் அரசருக்கு ஐயம் எழுந்தது. அதனால், 1683 ஆம் ஆண்டில் லாக்கும் ஹாலந்துக்குத் தப்பிச் சென்றார். இரண்டாம் சார்லசுக்குப் பின்னர் அரசு பீடம் ஏறிய இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் 1688 ஆம் ஆண்டில் நடந்த வெற்றிகரமான இரத்தம் சிந்தாப் புரட்சியில் பதவியிலிருந்து அகற்றப்படும் வரையிலும் லாக் ஹாலந்திலேயே தங்கியிருந்தார். 1689 ஆம் ஆண்டில் லாக் தாயகம் திரும்பி, இங்கிலாந்திலேயே வாழ்ந்தார். திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்த லாக்., 1704 ஆம் ஆண்டில் காலமானார்.
"மனிதனின் அறிவாற்றல் பற்றிய ஆய்வுரை" (An Essay Concerning Human Understanding) என்ற நூல்தான் ஜான் லாக்குக்கு முதலில் புகழ் தேடித் தந்தது. இந்த நூலில், மனித அறிவின் தோற்றம், இயல்பு, வரம்புகள் ஆகியவை குறித்து இவர் விரிவாக விவாதித்துள்ளார். லாக்கின் கொள்கைகள், அடிப்படையில், அனுபவ அறிவின்பாற்பட்டனவாகும். இவருடைய சிந்தனையில் ஃபிரான்சிஸ் பேக்கன், ரெனே டேக்கார்ட்டே போன்றோரின் செல்வாக்கினைத் தெளிவாகக் காண முடிந்தது. அதேசமயம் லாக்கின் கொள்கைகள் பிஷப் ஜார்ஜ் பொக்கிலே, டேவிட் ஹ’யூம், இமானுவேல் கான்ட் போன்ற தத்துவஞானிகள் மீது செல்வாக்குப் பெற்றிருந்தது. இந்த ஆய்வுரை நூல், லாக்கின் தலைசிறந்த தற்படைப்பாகவும், புகழ்பெற்ற தத்துவ நூல்களில் ஒன்றாகவும் கருதப்பட்ட போதிலும், இவருடைய அரசியல் எழுத்துகளை விடக் குறைந்த அளவிலேயே வரலாற்றுப் போக்கில் செல்வாக்குடையதாக இருந்தது.
"சகிப்புணர்வு பற்றிய கடிதம்" (A Letter Concerning Toleration) என்ற இவரது நூல் முதலில் 1689 ஆம் ஆண்டில் ஆசிரியர் பெயரின்றியே வெளி வந்தது. இந்நூலில், சமயத்தைச் சுதந்திரமாகப் பயிலுவதில் அரசு தலையிடலாகாது என்று இவர் வலியுறுத்தியிருந்தார். புரோட்டஸ்டான்டுப் பிரிவுகள் அனைத்தும் சமயச் சகிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய முதலாவது ஆங்கிலேயர் ஜான் லாக் என்று கூற முடியாது. எனினும் சமயச் சகிப்புணர்வுக்கு ஆதரவாக இவர் எடுத்துரைத்த வலுவாக வாதங்கள், இந்தச் கொள்கைக்கு மக்களின் ஆதரவு பெருகுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தன. மேலும், சமயச் சகிப்புணர்வுத் தத்துவத்தை ஜான் லாக் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கும் விரிவுப்படுத்தினார். "............. புறச் சமயவாதிக்கோ, இஸ்லாமியருக்கோ, யூதருக்கோ அவரது சமயம் காரணமாக மக்கள் பொதுவுரிமை அரசின் குடியியல் உரிமைகள் மறுக்கப்படுதல் ஆகாது. ஆயினும், இந்தச் சகிப்புணர்வைக் கத்தோலிக்கர்களுக்கு நீடித்தலாகாது என்று லாக் கருதினார். ஏனெனில், கத்தோலிக்கர்கள் ஓர் அயல்நாட்டு ஆட்சிக்குப் பற்றுறுதியுடையவர்கள் என அவர் நம்பினார். நாத்திகர்களிடமும் சகிப்புத் தன்மை காட்டலாகாது என்பது அவரது கொள்கை. இன்றையக் கண்ணோட்டத்தில் நோக்கும் போது ஜான் லாக் மிகவும் சகிப்புத்தன்மையற்றவராகத் தோன்றும். ஆனால், அவர் காலத்தில் நிலவிய கொள்கைகளின் அடிப்படையில் நோக்கும் போதும், அவர் எத்துணை சகிப்புணர்வுடையவராக இருந்தார் என்பது புலனாகும். உண்மையைக் கூறின், சமயச் சகிப்புணர்வுக்கு ஆதரவாக அவர் கூறிய வாதங்கள் விதிவிலக்குகளுக்கு அவர் காரணங்களை விட மிகவும் வலுவானவையாகவும் ஏற்புடையனவாகவும் இருந்தன. சமயச் சகிப்புணர்வை யாருக்குக் காட்டலாகாது என லாக் கூறினாரோ அந்தப் பிரிவினருக்கும் இன்று சகிப்புணர்வு நீடிக்கப்பட்டிருக்கிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் லாக்கின் எழுத்துகளேயாகும்.
"அரசு பற்றிய இரு ஆய்வுரைகள்" என்ற இவரது நூல் (1689) மேலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில், முற்போக்கான அரசமைப்புக்கு உகந்த மக்களாட்சிக்கு உயிர் நாடியான அடிப்படைக் கொள்கைகளை இவர் விளக்கியுள்ளார். ஆங்கிலம் பேசும் உலகம் முழுவதிலும் அரசியல் சிந்தனையில் இந்த நூல் கொண்ட செல்வாக்கு அளப்பரியதாகும். ஒவ்வொரு மனிதனுக்கும், இயற்கையான உரிமைகள் உண்டு என லாக் உறுதியாக நம்பினார். உயிர் வாழ்வதற்குரிய உரிமை மட்டுமின்றி, தனி நபர் சுதந்திரம், சொத்துரிமை ஆகியவையும் மனிதனுக்கு உண்டு என அவர் வலியுறுத்தினார். குடிமக்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாப்பதே அரசின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என அவர் உறுதியாகக் கூறினார். அவருடைய இந்தக் கொள்கை சில சமயம் "அரசு பற்றிய இரவுக் காவலர் கோட்பாடு" (Night Watchman Theory of Government) என்று அழைக்கப்பட்டது.
அரசர்களின் தெய்விக உரிமை பற்றிய கோட்பாட்டினை ஜான் லாக் அடியோடு மறுத்தார். ஆளப் படுபவர்களின் இசைவிலிருந்து தான் அரசுகள் தங்கள் ஆட்சியுரிமையைப் பெறுகின்றன என அவர் வலுயுறுத்தினார். "சமுதாயத்திலுள்ள மனிதனின் சுதந்திரம், மக்கள் பொதுவுரிமை அரசில், இசைவு மூலம் நிறுவப்பெற்ற அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டதாக இருக்க வேண்டுமேயன்றி வேறெந்தச் சட்டமியற்றும் அதிகாரத்திற்கும் அடிபணிந்ததாக இருக்கக் கூடாது" அரசியல் சமூகத்திற்கும், அரசுக்குமிடையே வெளிப்படையாகவோ குறிப்பாகவோ ஏற்படும் "சமூக ஒப்பந்த"க் (Social Contract) கொள்கையை லாக் தீவிரமாக வலியுறுத்தினார். இந்தக் கொள்கை ஓரளவுக்கு இவருக்கு முன் வாழ்ந்த தாமஸ் ஹாப்ஸ் (1588 / 1693) என்ற ஆங்கிலேயத் தத்துவஞானியின் எழுத்துகளிலிருந்தே பெற்றதாகும். ஆனால், ஹாப்ஸ் இந்தச் சமூக ஒப்பந்தக் கொள்கையை வரம்பற்ற ஆட்சி முறையை " (Absolutism) நியாயப் படுத்துவதற்காகக் பயன்படுத்தினார் லாக். இந்தச் சமூக ஒப்பந்தம் நீக்கப்படத் தக்கது எனக் கருதினார்.
"சட்டமியற்றுபவர்கள், மக்களின் சொத்தினைப்
பறிப்பதற்கும், அழிப்பதற்கும் முயலுகின்றபோது,
அல்லது மக்களை எதேச்சாதிகார ஆதிக்கத்தின்
கீழ் அடிமைப்படுத்த முயலுகின்ற போது,
மக்களுடன் போர்புரிவதற்கான நிலையில் அவர்கள்
தங்களை வைத்துக் கொள்கிறார்கள். அப்போது
அவர்களுக்கு மேற்கொண்டும் கீழ்ப் படிந்து
நடக்கும் கடமையிலிருந்து மக்கள் விடுபட்டு
விடுகிறார்கள். படை வலிமைக்கும், வன்முறைக்கும்
எதிராக இறைவன் அளித்துள்ள பொதுவான
புகலிடத்தை மக்கள் அடைகின்றார்கள்.
மேலும் "சட்டமன்றத்தின் நடவடிக்கையானது, அதனிடம் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு முரண்பட்டதாக இருக்கிறதென மக்கள் காண்கின்ற போது, அந்த சட்டமன்றத்தை அகற்றுவதற்குரிய அல்லது மாற்றுவதற்குரிய உயர் மேலதிகாரம் மக்களிடையே நிலை பெற்றுள்ளது" என்று லாக் கூறினார். இவ்வாறு புரட்சி செய்வதற்கான உரிமைக்கு லாக் அளித்த ஆதரவு தாமஸ் ஜெஃபர்சன் போன்ற அமெரிக்க புரட்சித் தலைவர்களுக்குத் தீவிரமான அகத்தூண்டுதலாக அமைந்தது.
அதிகாரப் பிரிவினைக் கொள்கையில் (Principale of Separation of Powers) லாக் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். எனினும், நிருவாகத் துறைக்கும் (Executive), நிருவாகத் துறையின் ஒரு பிரிவாக தாம் கருதிய நீதித் துறைக்கும் (Judiciary) மேம்பட்டது சட்டமன்றம் (Legistature) என இவர் கருதினார். சட்டமன்றத்தின் மேலாண்மை உரிமையில் நம்பிக்கை கொண்டிருந்த லாக், சட்டமன்றம் இயற்றிய சட்டங்களை அரசமைப்புக்கு விரோதமானவை என விளம்புவதற்கு நீதிமன்றங்களுக்குள்ள உரிமையை நிச்சயமாக எதிர்த்திருப்பார் எனலாம்.
பெரும்பான்மையினரின் ஆட்சிக் கொள்கையில் லாக் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த போதிலும் வரம்பற்ற உரிமைகளை ஓர் அரசு கொண்டிருக்கவில்லை என்பதை அவர் திட்டவட்டமாகக் கூறினார். மனிதரின் இயற்கையான உரிமைகளை மீறி நடப்பதற்குப் பெரும்பான்மையினருக்கு உரிமையில்லை. மக்களிள் சொத்துரிமைகளைப் பறிப்பதற்கும் அவர்களுக்கு உரிமை கிடையாது. ஆளப் படுபவர்களின் இசைவுடன் சட்டப்படியாக மட்டுமே ஓர் அரசு, சொத்தினை எடுத்துக் கொள்ளலாம். (அமெரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக எழுப்பப்பட்ட "பிரதி நிதித்துவம் இல்லையெனில் வரியும் இல்லை" என்ற முழக்கத்தில் லாக்கின் இந்த கொள்கை பொதிந்திருப்பதைக் காணலாம்.
மேற்சொன்னவற்றிலிருந்து அமெரிக்கப் புரட்சியின் முக்கியக் கொள்கைகள் அனைத்துமே அந்தப் புரட்சிக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஜான் லாக்கினால் கூறப்பட்டவை என்பது தெளிவாகத் தெரிகிறது. தாமஸ் ஜெஃபர்சன் மீது லாக் கொண்டிருந்த செல்வாக்கு முக்கியமாக குறிப்பிடத்தக்கதாகும். லாக்கின் கொள்கைகள், ஐரோப்பா கண்டத்தினுள் முக்கியமாக ஃபிரான்சுக்குள் ஊடுருவிப் பாய்ந்தன. ஃபிரெஞ்சு புரட்சிக்குப் ஃபிரான்சின் மனித உரிமைகள் பிரகடனத்திற்கும் லாக்கின் கொள்கைகள் மறைமுக காரணங்களாக அமைந்தன. வால்ட்டேர், தாமஸ் ஜெஃபர்சன் போன்ற தலைவர்கள் ஜான் லாக்கைவிட அதிகப் புகழ்பெற்றவர்களாக விளங்கிய போதிலும், லாக்கின் எழுத்துகள் அவர்களுக்கு முந்தியவை என்பதையும், அவருடைய எழுத்துகள் அவர்கள் மீது மிகுந்த செல்வாக்குச் செலுத்தின என்பதையும் மறந்துவிடலாகாது. எனவே, இந்தப் பட்டியலில் அவர்களுக்கு முன்னதாக ஜான் லாக்குக்கு இடமளிக்கப்பட்டிருப்பது முற்றிலும் பொருத்தமேயாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 56 | 57 | 58 | 59 | 60 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜான் லாக் (கி.பி.1632 - கி.பி.1704), லாக், ", ஜான், அவர், ஆண்டில், இவர், லாக்கின், மக்கள், அரசு, பற்றிய, கொள்கைகள், அரசியல், மிகுந்த, சமயச், இந்தச், தாமஸ், அவர்களுக்கு, கொள்கை, கொண்டிருந்த, நூல், இவருடைய, ஷாஃப்டஸ்பரி, மீதும், சமூக, கூறினார், புகழ்பெற்ற, கொள்கைகளை, நம்பிக்கை, ஜெஃபர்சன், உரிமை, போது, இரண்டாம், மேலும், முக்கிய, உரிமைகள், கருதினார், போதிலும், என்பது, மீது, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்