கார் நாற்பது - ஆறாம் நூற்றாண்டு
இது முல்லைத்திணைக்குரிய ஆற்றியிருக்கும் ஒழுக்கத்தினை அழகிய நாற்பது வெண்பாக்களால் விளக்கும் நூலாகும். முல்லையின் பெரும்பொழுதான கார்காலம் ஒவ்வொரு பாட்டிலும் சிறந்த முறையில் பாடப்படுவதால் இது கார் நாற்பதாயிற்று.
இதன் ஆசிரியர் மதுரைக் கண்ணங் கூத்தனாராவார். கண்ணனார் என்பவர் இவர் தந்தையார் என்பர். தம் முதற்பாட்டிலேயே வானவில்லைத் திருமாலின் மார்பில் அசைந்தாடும் பல வண்ண மாலையோடு உவமித்தமையாலும், பத்தொன்பதாம் பாட்டில் கடப்ப மலர்களின் வெண்ணிறத்திற்குப் பலராமன் வெண்ணிறத்தை உவமையாகக் கூறலாலும் இவரை வைணவர் என அடையாளம் காட்டுவர்.
சிவபெருமானுக்காகப் பண்டைத் தமிழர் கொண்டாடிய கார்த்திகை விழாவையும் இவர் (பா. 26) சுட்டத் தவறவில்லை. இது இவருடைய சமயப் பொதுமைப் பண்பாட்டிற்கு சான்றாகும்.
அரசன் பொருட்டுப் போர்க்கடமை ஆற்றத் தன் காதலியைப் பிரிந்து போன தலைவன், தான் குறித்துச் சென்ற கார்காலம் வந்தும் திரும்பவில்லை. அதனால் பிரிவாற்றாமல் தலைவி வருந்தினாள். அவளை அவள் தோழி அன்பு மொழிகள் பல கூறித் தேற்றினாள். அப்பொழுது தலைவன் திரும்பி வந்தான். இதனை நாடகப் பாங்கில் கூறுவதே இந்த நூல்.
தலைவி பிரிவாற்றாமல் கூறுவது, அதற்குத் தோழி ஆறுதல் கூறுவது, தலைவன் தன் உள்ளத்து உணர்வுகளைத் தன் தேர்ப்பாகனிடம் வெளிப்படுத்துவது முதலியன இந்நூலில் இடம் பெறுவனவாகும்.
இந்நூலில் நெஞ்சைக்கவரும் உவமைகள் மலிந்துள்ளன. கார்கால மழையால் வழியெல்லாம் குமிழம் பூக்கள் கொத்துக் கொத்தாய் அசைந்தாடுகின்றன. அவை பொன்னால் செய்த குழைகளாகக் கவிஞர்க்குத் தோன்றுகின்றன.
இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப் பொன்செய் குழையின் துணர்தூங்கத் தண்பதம் செவ்வி உடைய சுரம் (28) |
நொச்சியின் பூவுக்கு நண்டின் கண்களும் (39) தளவ மலருக்குச் சிரல் பறவையின் அலகும் (36) உவமைகளாகக் கூறப்பட்டுள்ளன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கார் நாற்பது - Kar Narpatu - ஆறாம் நூற்றாண்டு - 6th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கார், நாற்பது, நூற்றாண்டு, ஆறாம், தலைவன், தகவல்கள், நூல்கள், தமிழ்நாட்டுத், இலக்கிய, தமிழ், பிரிவாற்றாமல், | , தலைவி, தோழி, கூறுவது, narpatu, இந்நூலில், கார்காலம், literatures, tamil, list, century, information, tamilnadu, இவர்