திருக்குறள் - இரண்டாம் நூற்றாண்டு
தமிழில் உள்ள அறநூல்களுள் காலத்தால் முந்தியதும் தன்மையால் தலைசிறந்ததும் திருக்குறளாகும். ஈரடி வெண்பா, குறள் வெண்பா எனப்படும். அவ்வெண்பாவால் ஆன நூலும் ஆகுபெயராகக் குறள் என்று பெயர் பெற்றது. அதன் சிறப்பு நோக்கித் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருக்குறள் என்று வழங்கி வருகின்றோம்.
நூல் அமைப்பு
திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பெரும்பிரிவிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. இவை இயல்கள் எனப்படும். இயல்களின் உட்பிரிவுகளாக அதிகாரங்கள் அமைகின்றன. ஒவ்வோர் அதிகாரத்தி்லும் பத்துப்பத்துக் குறட்பாக்கள் இடம் பெறுகின்றன. இதில் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் உள்ளன. மூன்று அதிகாரங்களிலும் அடங்கும் இயல்கள், அவற்றி்ற்குரிய அதிகாரங்கள் பற்றிய பட்டியலைக் கீழே காணலாம்.
பால்கள் | இயல்கள் | அதிகாரங்கள் |
அறத்துப்பால் | பாயிர இயல் இல்லற இயல் துறவற இயல் ஊழ் இயல் |
1 முதல் 4 = 4 5 முதல் 24 = 20 25 முதல் 37= 13 38 = 1 ----- 38 ----- |
பொருட்பால் | அரசியல் அங்க இயல் ஒழிபியல் |
39 முதல் 63 = 25 64 முதல் 95 = 32 96 முதல் 108 = 13 ----- 70 ----- |
காமத்துப்பால் | களவு இயல் கற்பு இயல் |
109 முதல் 115 = 7 116 முதல் 133 = 18 ----- 25 ----- |
திருவள்ளுவர் வரலாறு
பெரும்புகழ்க்குரிய திருவள்ளுவர் பற்றிய உண்மையான வரலாறு, அறிய முடியாததாக உள்ளது. இவர் மயிலையில் பிறந்தவர் என்று ஒருசாரார் கருதுகின்றனர். அவ்வூரில் அவர்க்குக் கோயில் ஒன்றும் எழுப்பியுள்ளனர். அவர் மதுரையைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர்.
இவர்க்குரிய இயற்பெயர் யாது என்றும் தெரியவில்லை. பிறந்த குடி பழம் பெருமை மிக்க வள்ளுவக்குடி என்பர். இக்குடியினர் இன்றும் சோதிடம் வல்லவர்களாக அறியப்படுகின்றனர். இவர்கள் பண்டை மன்னர்களுக்கு மிக அணுக்கமாக இருந்தவர்கள் என்று பெருங்கதை முதலிய தமிழ் நூல்கள் அறிவிக்கின்றன. வள்ளுவர் - வாசுகி கதை, வள்ளுவர் - ஏலேல சிங்கன் உறவு, வள்ளுவரின் நூல் அரங்கேற்றம் ஆகியன பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன. இவற்றை உண்மையெனக் கருத முடியவில்லை.
வள்ளுவர் காலம்
இவர் வாழ்ந்த காலம் பற்றியும் ஒருமித்த கருத்து இல்லை. கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 6ஆம் நூற்றாண்டுவரை, பல வேறு காலங்களை அறிஞர் கூறுகின்றனர்.
திருக்குறளில் வெளிப்படும் சில பண்பாட்டு நிலைகள், மொழிக்கூறுகள் ஆகியவை கொண்டு அது, சங்க இலக்கியங்களை அடுத்துத் தோன்றியது என்று பொதுவாகக் கூறலாம்.
திருக்குறள் உரையாசிரியர்கள்
திருக்குறளுக்குப் பத்துப்பேர் இடைக்காலத்தில் உரையெழுதி உள்ளனர். இவ்வுரையாசிரியர் பெயர்களைப் பின்வரும் வெண்பாவால் அறியலாம்.
தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர் பரிமேலழகர், பருதி, திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர், வள்ளுவர் நூற்கு எல்லை உரை செய்தார் இவர் |
இவர்களுள் மணக்குடவர், காளிங்கர், பரிப்பெருமாள், பரிதியார், பரிமேலழகர் ஆகியோர் உரைகளே இப்பொழுது கிடைக்கின்றன. இவற்றுள் பரிமேலழகர் உரையே பெரியோர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றது. இக்காலத்தில் எண்ணற்ற புதிய உரைகள் நாளும் தோன்றிக் கொண்டே உள்ளன.
நூலின் சிறப்பு
வடமொழியில் உள்ள மனுநீதி முதலிய நீதி நூல்கள் வருணங்களின் அடிப்படையில் அறம் உரைப்பவை. திருக்குறள் ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கருத்தின் அடிப்படையில் மனித குலம் அனைத்திற்கும் பொதுவான அறம் கூறுவது.
வள்ளுவர் காலத்தில் வைதீகம், சமணம், பௌத்தம் முதலான பல சமயங்கள் வழக்கில் இருந்தன. ஆனால் வள்ளுவர் எச்சமயத்தையும் சார்ந்து நின்று அறம் உரைக்கவில்லை. அதனால்தான் ‘சமயக்கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இது என்ற வள்ளுவர்’ என ஒரு புலவர் பாராட்டினர்.
சங்கத்தமிழர் விரும்பி உண்ட கள்ளையும் ஊனையும் வள்ளுவர் கண்டித்தார்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (260) |
என்றும்,
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எந்நாளும் நஞ்சுண்பார் கள் உண்பவர் (926) |
என்றும் கூறியுள்ளார்.
வேள்விகள் ஆயிரம் செய்வதனைவிட, ஓர் உயிரைக் கொன்று அதன் தசையை உண்ணாதிருத்தல் பெரிய அறம் என்றார்.
சங்கப்புலவர்கள் பரத்தைமை ஒழுக்கத்தை வெளிப்படையாகவே பாடினர். ஊடல் என்ற உரிப்பொருளை விளக்க அவர்களுக்குப் பரத்தையின் துணை தேவைப்பட்டது. வள்ளுவரோ, பரத்தைமை சமூகத்திற்குச் செய்யும் தீமையைக் கருதி, பரத்தையை அகத்திணையில் இருந்து விலக்கிப் புரட்சி செய்தார். மேலும் பொருட்பாலில் ‘வரைவின் மகளிர்’ என் அதிகாரம் அமைத்துப் பரத்தைமையைக் கண்டித்தார்.
ஈன்ற தாயும் பிறரும் துன்பமுறும் பொழுது, அறத்திற்கு மாறான செயல்களைச் செய்தாயினும் அவர்களைக் காக்க வேண்டும் என்று மநு முதலிய வடநூல்கள் கூறின. ஆனால் வள்ளுவரோ,
“ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க; சான்றோர் பழிக்கும் வினை” (656) |
என்றார்.
இங்ஙனம் வள்ளுவர் கூறும் நெறிகள் உலகப் பொதுமை உடையனவாக விளங்குவதனால் திருக்குறள் உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்பது பாரதியார் வாக்கு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குறள் - Tirukkural - இரண்டாம் நூற்றாண்டு - 2nd Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - வள்ளுவர், திருக்குறள், இயல், நூல்கள், என்றும், அறம், தமிழ், இரண்டாம், நூற்றாண்டு, பரிமேலழகர், முதலிய, அதிகாரங்கள், இவர், இயல்கள், உள்ள, தமிழ்நாட்டுத், தகவல்கள், இலக்கிய, | , கண்டித்தார், என்றார், பரத்தைமை, வள்ளுவரோ, காலம், செய்தார், அடிப்படையில், காளிங்கர், பரிப்பெருமாள், மணக்குடவர், எல்லா, வரலாறு, காமத்துப்பால், tamilnadu, information, வெண்பா, list, literatures, tirukkural, century, tamil, குறள், எனப்படும், பொருட்பால், மூன்று, பற்றிய, அறத்துப்பால், திருக்குறளில், சிறப்பு, என்னும், நூல், திருவள்ளுவர்