சோழர் வரலாறு - பாராட்டுரை
நாவலர்
ச. சோமசுந்தர பாரதியார், M.A., B.L.,
25-1-'47
பசுமலை
To
சென்னை வித்துவான் மா. இராசமாணிக்கம் பிள்ளை
அவர்கள், B.O.L., L.T., M.O.L.,
அன்பார்ந்த ஐயா,
நலம். நானங்கு நாடுவதும் நலமே. தாங்கள் அன்போடனுப்பிய சோழர் வரலாறு - மூன்று பகுதிகளும் வரப்பெற்றேன்; படித்து மகிழ்வுற்றேன். இனிய எளிய நடையில், கனியு மதுர மொழியால், பொன்னி வளநாட்டுப் புகழ்ச் சோழர் பொன்கால வரலாறு தமிழருக்குத் தந்த பெருமை. தங்களதென்பதில் தடையில்லை. நடுநிலையில் நெடு நாளாய்ந்து, பழம் பாடல், இடைக்காலச் சான்றோர் நூல், கல்வெட்டு, செப்பேடுகள் அனைத்தும் துருவி, தற்கால ஆராய்ச்சியாளர் கருத்துகளை அலசி, நேர்மை வழுவாத நன்முடிபுகளைக் கண்டு வெளியிட்ட தமிழ்ச்சரித வரிசையிலே தங்கள் கட்டுரைகள் சிறப்பிடம் பெறுவதில் ஐயமில்லை. தங்கள் குலோத் துங்கன் வரலாறும், பிற உரைகளும் சோழர் வரலாற்றுக்குச் சார்பும் துணையும் தந்து வளம் நிறை பாராட்டுக்குரியது.
இளமையிலே தம் முயற்சியால் நிரம்பிய நூல் பயின்று, தாம் வரம்பறுத்த வரலாறுகள் எழுதி உதவிய அருந்திறனும் நுண் அறிவும் இளம்புலவர் பாராட்டிப் பின்பற்றிப் பயனடைய உதவுமென நம்புகிறேன். நடு வயதை அடையுமுனம், புலமையொடு புகழ் வளரப் பெற்றுள்ள தாம், நெடும் பல்லாண்டினிய தமிழ்த் தொண்டாற்றி, பொருளுரை நூல் பல இயற்றி, அறிவுடையார் அவையிலிடம் அடைந்து சிறந்து உயர்ந்திடுமாறு இறைவன் அருள் கூட்டிடுக. என்றும் தம் நட்பையும் பலனையும் விரும்பும்.
அன்பன்,
இளசைகிழான்
ச. சோமசுந்தர பாரதி
இளசைகிழான்
ச. சோமசுந்தர பாரதி
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாராட்டுரை - History of Chola - சோழர் வரலாறு - நூல், சோழர்