சோழர் வரலாறு - சங்க காலம்
தொல்காப்பியர்க்கு முற்பட்ட நூல்கள்
தொல்காப்பியர் தமது பேரிலக்கண நூலில் 100-க்கு 16 வீதம் உள்ள சூத்திரங்களில் தமக்கு முன் இருந்த இலக்கண ஆசிரியரைச் சுட்டிச் சொல்கின்றார். “யாப்பென மொழிவர் யாப்பறி புலவர்” “... புலவர் ஆறே" என்றெல்லாம் கூறுதலை நன்கு சிந்திப்பின், தொல்காப்பியர்க்கு முன் இலக்கணப் புலவர் பலர் இருந்தனர் என்பது வெள்ளிடைமலை, எண்ணிறந்த இலக்கண நூல்கள் இருந்தன எனின், - 'இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்’ என்பது உண்மை எனின் அப்பல இலக்கண நூல்கட்கு உணவளித்த இலக்கிய நூல்கள் எத்துணை இத்தமிழகத்தில் இருந்திருத்தல் வேண்டும்! ஆதலின், ஏறத்தாழக் கி.மு.1500 முதல் தமிழில் இலக்கண இலக்கிய நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் எனக் கோடல் மிகையாகாது அன்றோ? இம்முடிவு மொழி ஆராய்ச்சிக்கும் வரலாற்று ஆராய்ச்சிக்கும் பொருந்தி நிற்றலை நடுவு நிலையாளர் நன்குணர்தல் கூடும்.[7]
முடிவு : இதுகாறும் கூறிய செய்திகளால், தமிழ் நூல்கள் பல நூற்றாண்டுகள் கால எல்லையை உடையன என்பதை நன்கறியலாம். அறியவே, அவ்வக் காலப் புலவர் பாடிய செய்யுட்களை எல்லாம் தம்மகத்தே கொண்டுள்ள புறம், அகம் முதலிய நூல்களைக் ‘கடைச்சங்க நூல்கள்’ எனக் கோடலே தவறாம். முதல்-இடை-கடைச் சங்கங்கள் என்பன இருந்தன என்பதற்குக் களவியல் உரை தவிர வேறு சான்றுகள் இன்மையால், வேறு சான்றுகள் கிடைக்கும் வரை அக்கூற்றை விடுவிப்பதே நன்றாகும்; விடுத்துப் பொதுவாகச் ‘சங்கநூல்கள்’எனக் கூறலே பொருத்தம் ஆகும். ஆகவே, சங்ககாலம் மிகப் பரந்து பட்ட கால எல்லையை உடையது; அதன் இறுதிக் காலம், வரலாற்றாசிரியர் முடிவுப்படி, ஏறக்குறைய கி.பி. 3-ஆம் நூற்றாண்டாகும், எனக் கோடலே இன்றைய ஆராய்ச்சி அளவிற்குப் பொருந்துவதாகும். இனி இப்பரந்து பட்ட காலத்தில் இருந்து சோழர்களைப் பற்றிய குறிப்புகளைக் காண்போம்.
நமக்குள்ள துன்பம்
நமக்குக் கிடைத்துள்ள சங்கச் செய்யுட்களைக் கொண்டு. சோழர் அரச மரபினர் மன்னவர் எனக்கூறலாமேயன்றி, ‘இவர்க்குப் பின் இவர் பட்டம் பெற்றனர்’ என்று தக்க சான்றுகளுடன் கூறத்தக்க வசதி இல்லை. சங்கச் செய்யுட்களைப் பலபட ஆராய்ந்து, அரசர் முறைவைப்பை அரும்பாடு பட்டு அமைக்க முயன்ற பலர் செய்துள்ள பிழைகள் பல ஆகும். ஆதலின், முடியாத இந்த வேலையை மேற்கொண்டு இடர் உறாமல், நன்றாகத் தெரிந்தவரைப் பற்றி மட்டும் விளக்கமாகக் கூறி, பிறரைச் சங்கச் செய்யுட்கள் கூறுமாறு கூறிச் ‘சங்ககாலச் சோழர் வரலாற்’றை ஒருவாறு எழுதி முடித்த நாவலர் பண்டிதர் நாட்டார் அவர்களும் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்களும் நமது பாராட்டுக் குரியவரே ஆவர். தக்க சான்றுகள் கிடைக்கும்வரை, இப்பேரறிஞர் கொண்டுள்ள முறையே சிறந்ததாகும் என்பது சாத்திரீய ஆராய்ச்சி உணர்வுடையார்க்கு ஒப்ப முடிந்த ஒன்றாகும்.
நமது கடமை
சங்ககாலச் சோழ அரசருள் நடுநாயகமாக விளங்கியவன் கரிகாலன். அவன் காலத்தை ஏறக்குறைய ஒருவாறு முடிவு கட்டலாம். அவனைப்பற்றிக் கூறும் சங்கச் செய்யுட்களும் பிற்காலச் சோழர்காலத்துச் செய்யுட்களும் சில கல்வெட்டுகளும் இம்முயற்சியில் துணைசெய்யற்பாலன. பிற்காலச் சோழர் நூல்களிலும் கல்வெட்டுகளிலும் கரிகாலனைப் பற்றிக் கூறும் செய்திகள் பல சங்கச் செய்யுட்களில் இல்லை. இக்காரணம் கொண்டே வரலாற்றாசிரியர் சிலர் ‘அவை நம்பத்தக்கன அல்ல’ என உதறிவிட்டுக் கரிகாலன் வரலாற்றைக் கட்டி முடித்துள்ளனர். சங்க காலத்துச் செய்யுட்கள் அனைத்தும் நமக்குக் கிடைத்தில, பிற் காலத்தார் தொகுத்து வைத்தவையே ‘சங்க நூல்கள்’ எனப்படுவன. தொகுத்தார் கண்கட்கு அகப்படாத பழைய செய்யுட்கள் பல இருந்திருத்தல் இயலாதென்று யாங்வனம் கூறல் இயலும்? அப்பழைய பாடற் செய்திகளையும் சோழர் மரபினர் வழிவழியாகக் கூறிவந்த செய்திகளையும் உளங்கொண்டே சயங் கொண்டார் போன்ற பொறுப்பு வாய்ந்த புலவர்கள்’ தம் நூல்களில் பல செய்திகளைக் குறித்திருப்பர் என்றெண்ணுவதே ஏற்புடையது; அங்ஙனமே பிற்காலச் சோழர் தம் பட்டயங்களிற் குறித்தனர் எனக் கோடலே தக்கது. அங்ஙனம் தக்க சான்றுகளாக இருப்பவற்றை (அவை பிற்காலத்தன ஆயினும்) மட்டும் கொண்டு நேர்மையான வரலாறு கட்டலே நற்செயலாகும். இந்த நேரிய முறையைக் கொண்டு கரிகாலன் காலத்தைக் கண்டறிய முயன்ற திரு. T. G. ஆராவமுதன் அவர்கள் நமது பாராட்டிற்கு உரியர் ஆவர்.[8]
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்க காலம் - History of Chola - சோழர் வரலாறு - சோழர், சங்கச், நூல்கள், இலக்கண, எனக், தக்க, நமது, பிற்காலச், கரிகாலன், செய்யுட்கள், சான்றுகள், புலவர், என்பது, இருந்திருத்தல், கோடலே, கொண்டு