சோழர் வரலாறு - பிற சோழ அரசர்
3. வேல்பல் தடக்கைப் பெருநற்கிள்ளி
முன்னுரை: இவன் கழாத் தலையார், பரணர் என்பவ ரால் பாடப்பெற்றவன்; குடக்கோ நெடுஞ் சேரலாத னுடன் போர் செய்து இறந்தவன். இரண்டு அரசரும் போர்க்களத்தில் இறந்தமை கண்டு கழாத் தலையாரும் பாணரும் பாடி வருந்தினர். அப்பாடல்களாற் சில செய்திகள் அறியக் கிடக்கின்றன. அவையாவன:
பாடற் செய்திகள்: படைவீரர் பதினெண்பாடை மாக்கள் ஆவர். இறந்த அரசருடன் அவர் தம் மனைவியர் உடன்கட்டை ஏறினர். தேவர்கள் நாற்றமாகிய உணவைப் (போரில் பலர் இறந்தமையின்) பெற்றனர்.[13] யானை குதிரை யாவும் களத்தில் இறந்தன; கரிவீரர் அனைவரும் மாண்டனர்; தேரைச் செலுத்தினவர் எல்லாரும் இறந்தனர். மயிர் சீவாது போர்த்தப்பட்ட கண்ணையுடைய முரசங்கள் அடிப்பாரின்றிக் கிடந்தன. கழனிக் கண் ஆம்பல் தண்டால் செய்த வளையலைப் பெண்கள் அணிதல் மரபு.[14]
4. முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி
இவனைப்பற்றி உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்பவர் பாடிய பாட்டு ஒன்றே கிடைத்துள்ளது. இவன் ஒருநாள் தன் யானை இவர்ந்து செல்கையில், அது மதங் கொண்டு கருவூர்ப் பக்கம் விரைந்து சென்றது. அவனைக் கண்டு கருவூரை ஆண்ட சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறை என்பவன் தன்னுடன் இருந்து முடமோசியார் என்ற புலவரை, ‘இவன் யாவன்?’ எனக்கேட்டான். அப்போது புலவர் இவனது சிறப்பையும் யானை மதங்கொண்டு வழி கடந்து போதலையும் விளங்க உரைத்தார்.[15] இவன் வரலாறு தெரிந்திலது.
5. தித்தன்
சிறப்பு: இவன் உறையூரில் இருந்து அரசாண்ட பழைய வேந்தன். இவன் மகனே முன் கூறப்பெற்ற போர்வைக் கோப் பெருநற்கிள்ளி என்பவன். இத்தித்தன் பெருங்கொடையாளி என்பது,
“இழையணி பணைத்தோள் ஐயை தந்தை மழைவளம் தரூஉ மாவண் தித்தன்” |
என்னும் பரணர் அடிகளால் விளங்குதல் காணலாம். இவன் மகள் ஐயை என்ற கற்புடைப் பெண் ஆவள்.
உறையூர்: இவன் உறையூரைச் சிறந்த மதில் அரனும் காட்டரணும் உடையதாகச் செய்து பகைவென்று குடிகளை நன்கு புரந்த காவலன் என்பது பரணர், நக்கீரர் இவர்தம் பாடல்களால் அறியக் கிடக்கிறது.
போரில் பகைவன் ஒட்டம்: வடுக வேந்தனாகிய கட்டி என்பவன் இத் தித்தனுடன் போர் செய்ய வந்தான். அவனுக்கு உதவியாகப் பாண அரசன் (Bana King) ஒருவனும் வந்து உறையூரை முற்றுகை இட்டான். ஒருநாள் சோழன் அவைக்களத்தில் ஒலித்த கிளை ஒசை கேட்டு அச்சமுற்று இருவேந்தரும் ஒடிவிட்டனராம். இது,
“வலிமிகு முன்பிற் பாணனொடு மலிதார்த் தித்தன் வெளியன் உறந்தை நாளவைப் பாடின் றெண்கிளைப் பாடுகேட் டஞ்சிப் போரடு தானைக் கட்டி பொராஅ தோடிய ஆர்ப்பினும் பெரிதே”[16] |
என அகப்பாட்டிற் கூறப்பட்டுள்ளது.
சிறந்த புலவன்: இத்தித்தன் சிறந்த புலவன் என்பது தெரிகிறது. இவன் பாடிய பாட்டொன்று அகநானூற்றில் இருக்கிறது. அஃது இனிமை மிக்க பாடலாகும்.[17]
6. சோழன் நல் உருத்திரன்
புலவன்: இவனது வரலாறு ஒன்றும் தெரிந்திலது. இவன் பாடிய ஒர் அழகிய புறப்பாட்டே இன்று இருப்பது. அதைக் காணின், இவன் விரிந்த உள்ளமுடையாருடன் நட்புச் செய்தலில் மிக்க விருப்பம் உடையவன் என்பதும் செய்யுள் செய்தலில் வல்லவன் என்பதும் தெரிகின்றன. அச்செய்யுளின் பொருள் இதுவாகும்:
“தான் பெற்ற சிறிய கதிரைத் தன் வளையில் வைக்கும் எலிபோலும் சிறு முயற்சியினராகித் தம் செல்வத்தை இறுகப் பிடிக்கும் உள்ள மிகுதி இல்லாதாருடன் பொருந்திய நட்பு எனக்கு இல்லையாகுக; தறுகண்மையுடைய ஆண்பன்றி இடப்பக்கத்தே வீழ்ந்ததாகலின், அதனை உண்ணுதல் இழிவென்று கருதி அன்று அதனை உண்ணாதிருந்து, அடுத்த நாள் மலைக்குகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பெரிய ஆண் யானையை வலப்பக்கத்தே வீழச் செய்து உண்ணும் புலி பசித்தாற்போலும் மெலிவில்லாத உள்ளமுடைய உரவோர் நட்புடன் பொருந்திய நாள்கள் உளவாகுக”[18]
முல்லைக்கலி: இச்சோழ மன்னன் முல்லைக்கலி பாடிய பெரும் புலவன் ஆவன். எனின், இவனது புலமைச் சிறப்பை யாரால் அளவிட்டுரைக்கலாகும்?
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிற சோழ அரசர் - History of Chola - சோழர் வரலாறு - இவன், புலவன், பாடிய, என்பது, சிறந்த, பரணர், இவனது, என்பவன், யானை, பெருநற்கிள்ளி, செய்து