சோழர் வரலாறு - நெடுமுடிக்கிள்ளி
புகார் அழிவு: புகார் நகரில் கம்பளச் செட்டி என்றொருவன் இருந்தான். அவன் நாகநாடு சென்றிருந்த பொழுது பீலிவளை, தான் பெற்ற மகனை அவனிடம் ஒப்புவித்தாள். அவன் அக்குழந்தையுடன் கப்பலில் வரும் பொழுது, கப்பல் தரை தட்டி உடைந்து விட்டது. வணிகன் உயிர் பிழைத்துப் பூம்புகாரை அடைந்தான். குழந்தை என்ன ஆயிற்று என்பது அவனுக்குத் தெரியாது. வந்த வணிகன் நடந்ததை அரசனுக்கு அறிவித்தான். சோழர் பெருமான் அது கேட்டு ஆற்றொனாத் துயர் அடைந்து, அக்குழந்தையைத் தேடி அலையலானான்; அவனது துன்ப நிலையில் இந்திர விழாவை மறந்தான். உடனே இந்திரன் - மணிமேகலா தெய்வம் இவர் தம் சாபங்களால் பூம்புகாரைக் கடல் கொண்டது[11] இந்த அழிவினால், மாதவி, அறவண அடிகள் முதலியோர் காஞ்சியை அடைந்தனர்.[12]
முடிவு: இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இந் நெடுமுடிக்கிள்ளியைப் பற்றி ஒன்றும் தெரிந்திலது. இவனுக்குப் பிள்ளைப் பேறு இன்மையால், இவனுக்குப் பின் சோழ அரசன் ஆனவன் இன்னவன் என்பது தெரியவில்லை.
கடல் வாணிகம்: மணிமேகலை, சிலப்பதிகாரங்களை நன்கு ஆராயின், கி.பி.2ஆம் நூற்றாண்டில் சோணாடு மேனாடுகளுடன் கிழக்கு நாடுகளுடனும் சிறந்த முறையில் கடல் வாணிகம் நடத்தி வந்தது என்பதை அறியலாம். இதனைப் பற்றிய விளக்கம் அந்நூல்களிலும் பரக்கக் காணலாம். இவற்றோடு, அவ்விரு நூற்றாண்டுகளிலும் இந்நாடு போந்த மேனாட்டுச் செலவினர் (யாத்ரிகர்) எழுதியுள்ள குறிப்புகளும் நோக்கத் தக்கனவாகும்.
பெரிப்ளூஸ்-பிளைநி-தாலமி: கி.மு.3-ஆம் நூற்றாண்டிலிருந்து தென் இந்தியா - சிறப்பாகத் தமிழகம் மேல் நாடுகளுடன் வாணிகம் நடத்தி வந்ததை அவ்வக்கால மேனாட்டு ஆசிரியன்மர் குறிப்பிட்டுள்ளனர்.[13] கி.பி. முதல் நூற்றாண்டின் கடைப் பகுதியில் (கி.பி. 70-100) இருந்த அலெக்ஸாண்டிரிய வணிகர் ஒருவர் குறித்த பெரிப்ளுஸ் என்னும் நூலில் தமிழ் நாட்டுத் துறைமுகப்பட்டினங்கள், தமிழ்நாட்டுப் பிரிவுகள், ஏற்றுமதிப் பொருள்கள், இறக்குமதிப் பொருள்கள் முதலியன குறிக்கப்பட் டுள்ளன. அக்காலத்தில் சோழ நாடு இரண்டு மரபினரால் ஆளப்பட்டு வந்தது. ஒரு பகுதி புகாரைத் தலைநகராகக் கொண்டது; மற்றது உறையூரைத் தலைநகராகக் கொண்ட உள்நாட்டுப் பகுதி. இக்கூற்று உண்மை என்பதை ‘உறையூர்ச் சோழர்’, ‘புகார்ச் சோழர்’ என வரும் சங்க காலப் பாக்களில் வரும் செய்திகளைக் கொண்டு நன்கறியலாம். காவிரிப்பூம்பட்டினம் எனப் பட்ட புகார் நகரம் குறிக்கப்பட்டுள்ளது. உறையூர் குறிக்கப்பட்டுள்ளது. மரக்காணம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது.[14] ஏறக்குறையக் கி.பி.80இல் பிளைநி என்பார் குறித்துள்ள குறிப்புகளுள் சில சோழநாட்டைக் குறிக்கின்றன. அவர் குறித்துள்ள பல பொருள்கள் புகாரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டனவாகக் காண்கின்றன.[15]
புகார் நகரம், நாகப்பட்டினம் ஆகிய இரண்டும் சோழர் துறைமுகங்களாக இருந்தன என்று கி.பி.140-இல் வாழ்ந்த தாலமி என்பார் குறித்துளர்; உறையூரையும் குறித்துளர்; ஆர்க்காடு குறிக்கப்பட்டுளது; அவ்விடத்தே நிலைத்து வாழாத குடிகள் இருந்தனர் என்று தாலமி கூறியுள்ளார்.[16]
- ↑ 11. இந்தக் காலத்தில் நகரத்தின் ஒரு பகுதியே அழிந்து விட்டது.கி.பி.450-இல் புத்ததத்தர்பூம்புகாரில் இருந்தார் என்பதும், கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலும் புகார் நகரம் சிறப்புடன் இருந்தது என்பதும் அறியத் தக்கன.
- ↑ 12. மணி, காதை, 29.
- ↑ 13. Vide Kennedy's article in J.R.A.S. 1898 pp. 248-287; Cholas, Vol.I.p.29.
- ↑ 14. Rawlinson’s Intercourse bet. India and the W.World', pp. 120-130 and ‘Periplus’ (Tamil) by S. Desikar.
- ↑ 15. Pliny, XXI; Kanakasabai Pillai’s ‘Tamils 1800 years ago’ pp.25-32.
- ↑ 16. Coldwelt’s ‘Comparative Grammar’, pp.92 - 100; Tamils 1800 yars ago, pp.29-32.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெடுமுடிக்கிள்ளி - History of Chola - சோழர் வரலாறு - புகார், பொருள்கள், தாலமி, கடல், வரும், வாணிகம்