சோழர் வரலாறு - முதற் பராந்தக சோழன்
தக்கோலப் போர்: இராட்டிரகூட அரசனான மூன்றாம் கிருஷ்ணனுக்கும் சோழர்க்கும் கி.பி. 949-இல் தக்கோலத்திற்கும் கடும் போர் நடந்தது. அதற்கு முன் ஒரு முறை இராசாதித்தன் கிருஷ்ணனை முறியடித்தான். ஆனால் பின்னர் நடந்த தக்கோலப்போர் கடுமையானது.தக்கோலம் அரக்கோணத்திற்குத் தென்கிழக்கில் ஆறுகல் தொலைவில் உள்ளது.இராசாதித்தன் பகைவரைக் கடுமையாகத் தாக்கிப் போர் புரிந்தான். ஆனால், புதிய கங்க அரசனான இரண்டாம் பூதுகன், யானைமீதிருந்த இராசாதித்தன் மீது திடீரெனப் பாய்ந்து கொன்றான்.இதனால் சோழர் சேனை போரில் தோற்றது. மூன்றாம் கிருஷ்ணன் தன் மைத்துனனுக்கு வனவாசி பன்னிராயிரமும் பெள்வோலம் முன்னூறும் தந்து பெருமைப்படுத்தினான்.இப்போரினால் பராந்தகன் தான் வென்ற பாணப்பாடி, தொண்டை நாடு, வைதும்ப நாடு இவற்றை இழந்தான். இந்த இடங்களில் கிருஷ்ணனுடைய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இரண்டாம் பூதுகன் சோணாட்டிலும் புகுந்து அல்லல் விளைத்ததாகச் சில பட்டயங்கள் செப்புகின்றன. கிருஷ்ணன் தன்னை, ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட’ என்று கூறிக் கொண்டதாகச் சில பட்டயங்களிலிருந்து தெரிகிறது. பூதுகன் இராமேசுவரத்தில் வெற்றித்துரண் ஒன்றை நாட்டியதாகக் கூறிக் கொண்டான். ஆயின், புதுச் சேரிக்குத் தெற்கே இதுகாறும் பூதுகனுடைய அல்லது கிருஷ்ணனுடைய கல்வெட்டோ- பட்டயமோ கிடைத்தில. இஃது எங்ஙனமாயினும், ஆதித்தனும் பராந்தகனும் அரும்போர் செய்து சேர்த்த பேரரசு துகளாயது என்பதில் ஐயமே இல்லை.[9]
விருதுப் பெயர்கள் : பராந்தகன் பல பெயர்களைக் கொண்டவன். இவன் மதுரையை அழித்தமையால் மது ராந்தகன் எனப்பட்டான், சிங்கள நாட்டை வென்றமை யால் சிங்களாந்தகன் எனப்பட்டான். இவன் முதலில் நடந்த போரில் கிருஷ்ணனை வீரம் காட்டி வென்றமை யால் வீர சோழன் எனப்பட்டான் என்று கன்னியா குமரிக் கல்வெட்டு கூறுகிறது. இவனுக்குச் சோழகுலப் பெருமானார், வீர நாராயணன், சமர கேசரி, விக்கிரம சிங்கன், குஞ்சரமல்லன், சோழ சிகாமணி, சூரசிகாமணி என்னும் விருதுப் பெயர்களும் உண்டு.
சமயப்பணி: பராந்தகன் வீரநாராயணபுரம் போன்ற பல கிராமங்களை வேதம் வல்லார்க்கு முற்றூட்டாக அளித்தனன். இவன் சிறந்த சிவபக்தன். புலியூர்ச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தவன் என்று லீடன் பட்டயம் கூறுகிறது. இதனை விக்கிரம சோழன் உலாவும் ஆதரிக்கிறது.[10] இவன் நாட்டை 46 ஆண்டு அரசாண்டவன்; உத்தரமேரூர் அவையிற் பல சீர்திருத்தங்களைச் செய்தவன் ஏமகர்ப்பம், துலாபாரம் செய்து புகழ் பெற்றவன். இவன் ‘சிவனது பாத தாமரையில் உறையும் வண்டு’ என்று திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகிறது. இவன் காலத்தில் பல கோவில்கள் கட்டப்பட்டன. ஆதித்த சோழன் கட்டாது விட்ட பல கோவில்கள் இவன் காலத்தில் முற்றுப் பெற்றன. இவன் மகனான இராசாதித்தன் காளத்திக்கு அருகில் கோதண்ட ராமேச்சரமும் (கோதண்டராமன் என்று இராசாதித்தன் பெயர்) அரக்கோணத்திற்கு அருகில் கீழைப் பாக்கத்தில் உள்ள ஆதித்தேச்சரமும் கட்டினான். இவன் மனைவி பெயர் ஈராயிரவன் தேவி அம்மனார் என்பது. இவன் தன் பெயரால் காட்டுமன்னார் குடிக்கு அடுத்த ‘வீரநாராயண ஏரி’ (வீரான ஏரி-வீராநத்தம் ஏரி) எடுப்பித்தான், வீர நாராயணநல்லூர் (வீரான நல்லூர்), வீர நாராயண சதுர்வேதி மங்கலம் இவற்றை உண்டாக்கினான்; காட்டு மன்னார்குடியில் அளந்தேச்சுரர் கோவிலைக் கட்டினான்.[11]
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதற் பராந்தக சோழன் - History of Chola - சோழர் வரலாறு - இவன், இராசாதித்தன், சோழன், கூறுகிறது, எனப்பட்டான், பராந்தகன், பூதுகன், போர்