சோழர் வரலாறு - கி.மு. இரண்டாம் நூற்றாண்டுச் சோழர்
இலங்கைப் படையெடுப்பு நடந்திருக்குமா?
‘கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழ் அரசன் ஒருவன் இலங்கையை வென்று 45 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்று இலங்கை வரலாறே கூறுதல் மெய்யாகத்தானே இருத்தல் வேண்டும்? ஆயின், அப்பழங்காலத்தில், கடல்சூழ் இலங்கையைக் கைப்பற்றத் தக்க கப்பற் படை சோழரிடம் இருந்ததா? அதற்குச் சான்றுண்டா?
கி.மு. 6 அல்லது 7-ஆம் நூற்றாண்டு முதலே சோழர் முதலிய தமிழரசர் மேனாடுகளுடன் கடல் வாணிகம் நடத்தினர் என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மையாகும். மேனாடுகளுடன் கடல் வாணிகம் நடத்திக் கொண்டிருந்த நாட்டாரிடம் கடற்படை இருந்தே தீர வேண்டும் என்பது கூறாதே அமையும். இன்றுள்ள ஆங்கிலேயர், ஜப்பானியர், அமெரிக்கர் முதலியோர் கடல் வாணிகத்திற்காகவன்றோ, கப்பற்படை வைத்துள்ளனர். இஃதன்றி, அப்பழங் காலத்தே கடல் கடந்து நாடு பிடித்தல் வேண்டும் என்ற வேட்கையும் சோழ மன்னரிடம் இருந்தது. நாம் முதற் கரிகாலன் காலம் ஏறத்தாழக் கி.மு. 120 முதல் கி.மு. 90 எனக் கொண்டோம் அன்றோ? அம்முதற் கரிகாலனைப் பாடவந்த வெண்ணிக் குயத்தியார் என்ற பெண்பாற் புலவர்,
“நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிப் போர் செய்வதற்குக் காற்றின்றி நாவாய் ஒடவில்லை. அதனால் காற்றுக் கடவுளை அழைத்து ஏவல் கொண்ட (காற்று வீசச் செய்து மரக்கலம் செலுத்திச் சென்று வெல்ல விரும்பிய நாட்டை வென்ற) வலிய அரசன் மரபில் வந்தவனே!” என்று ஒரு செய்யுளிற் பாடியுள்ளார். இதனால் ஏறத்தாழக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் ஈற்றுப் பகுதியில் இருந்த முதற் கரிகாலனுக்கு முற்பட்ட சோழ மன்னருள் ஒருவன் (பாட்டனாக அல்லது முற்பாட்டனாக இருக்கலாம்) கடல் கடந்து நாடு வென்றமை[6]அறியப்படுகிறது.
அந்நாடு எது?
சிறப்பாகத் தமிழகத்தை அடுத்து இருப்பது இலங்கைத் தீவேயாகும். பிற நெடுந்தொலைவில் இருப்பன. அவை கி.பி. 11-ஆம் நூற்றாண்டினனான இராஜேந்திர சோழனால் வெல்லப்பட்டவை; அதற்குமுன் எத்தமிழரசரும் சென்று வென்றதாக வரலாறு பெறாதவை. கி.மு.2-ஆம் நூற்றாண்டு முதல் பன்முறை வெல்லப் பெற்றும் ஆளப்பெற்றும் வந்தது இலங்கை ஒன்றே என்பது வரலாறு அறிந்த உண்மை. ஆதலின் புதிய சான்றுகள் கிடைக்கும் வரை, மேலே குறிப்பிடப்பெற்ற படையெடுப்பு இலங்கை மேற்றே எனக் கோடலில் தவறில்லை. அங்கனமாயின், அதன் காலம் யாது?[7]
‘சோழர் இலங்கைமீது படையெடுத்த முதற்காலமே கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி’ என்று மகாவம்சமே கூறலால், அதுவே, மேற்குறித்த படையெடுப்பு நிகழ்ந்த காலம் எனக் கோடல் பொருத்தமாகும், அஃதாயின், ஏறத்தாழக் கி.மு. 160-கி.மு. 140 எனக் கூறலாம். அக்காலம் முதற் கரிகாலனுடைய தந்தை அல்லது பாட்டன் இருந்த காலமாகும்.[8] இது மேலும் ஆராய்தற்குரியது.
- ↑ 6. புறம் 66.
- ↑ 7. இந்த இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரவேலன் என்ற கலிங்க அரசன், தனக்கு முன் 113 ஆண்டுகளாக இருந்த தமிழரசரது கூட்டு எதிர்ப்புத் திட்டத்தைச் சிதற வடித்ததாகக் கூறிக் கொள்கிறான். ஆயின் அவன் காலச் சோழன் இன்னவன் என்று கூறக் கூடவில்லை.
- ↑ 8. முதற் கரிகாலனது உத்தேச காலம் கி.மு. 120- கி.மு. 90 எனக் கொள்ளின், அவன் தந்தையின் காலம் கி.மு. 150 - கி.மு. 120 ஆகும்; பாட்டன் ஆட்சி கி.மு. 180-150 ஆகும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடையில் படையெடுப்பு நிகழ்ந்தது’ என மகாவம்சம் கூறலால், அந்த இடைப்பட்ட காலம் கி.மு. 160 கி.மு. 140 எனக்கோடல் பொருத்தமாகும். அஃதாயின், தந்தையைவிடப்பாட்டனே படையெடுத்தவன் எனக் கோடல் நல்லது. என்னை? ‘தந்தை’ எனின், இவ்வளவு அண்மையில் இருந்தவனைப் புலவர் தெளிவாகக் குறித்திருப்பார் ஆதலின் என்க.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுச் சோழர் - History of Chola - சோழர் வரலாறு - கடல், எனக், முதற், காலம், ஏறத்தாழக், என்பது, படையெடுப்பு, இலங்கை, வேண்டும், அல்லது, நூற்றாண்டின்