சோழர் வரலாறு - சோழன் நலங்கிள்ளி
புலவன்: இப்பேரரசன் தமிழ்ப் புலமை நிரம்பியவன் என்பது இவனது பாடல் கொண்டு உணரலாம். அதன் செந்தமிழ் நடை, பொருட் செறிவு, உவமை நயம் இன்ன பிறவும் சுவைத்தற்கு உரியன. நெடுங்கிள்ளியைப் பொருமுன் சொன்ன வஞ்சினப் பாடல் அது. அதன் பொருள் முன்னரே கொடுக்கப் பெற்றது. பாடல் புறப்பாட்டில்[16] கண்டு மகிழ்க.
புரவலன்: இவன் கோவூர் கிழார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், ஆலத்துார் கிழார் முதலிய புலவர் பெருமக்களைப் பாராட்டி ஊக்கிய வள்ளல்; பாணர், கூத்தர், விறலியர் முதலியோரையும் பாதுகாத்து, அவர் வாயிலாக இசைத் தமிழையும், நாடகத் தமிழையும் நலனுற வளர்த்த தமிழ்ப் பெருமகன் ஆவன். “நமது சுற்றத்தினது அடுகலத்தை நிறைக்கும் பொருட்டு விலையாகக் கொடி கட்டிய வஞ்சிமாநகரையும் தருகுவன்; ‘விறலியர் பூவிற்கு விலையாகப் பெறுக’ என்று மாடத்தையுடைய மதுரையையும் தருவன்; ஆதலின், நாமெல்லாம் அவனைப் பாடுவோம், வாரீர் பரிசில் மாக்களே,”[17] என்று பஞ்சிலரைப் புரவலன் பால் அழைக்கும் கோவூர்கிழார் பாடல் இவனது வள்ளன் மையை விளக்கப் போதுமன்றோ?
புலவர் அறவுரை: போரில் சிறந்த நலங்கிள்ளிக்கு முதுகண்ணன் சாத்தனார் அளித்த அறவுரை சாலச் சிறந்ததாகும். அதன் சுருக்கம் பின்வருமாறு:
“என் இறைவ, சேட்சென்னி நலங்கிள்ளி, உலகில் தோன்றி மறைந்த மன்னர் பலராவர். அவருள் உரையும் பாட்டும் உடையோர் சிலரே. வளர்ந்தது குறைதலும், குறைந்தது வளர்தலும், பிறந்தது இறத்தலும், இறந்தது பிறத்தலும் கல்வியால் அறியப்படாத மடவோரையும் அறியக் காட்டி அறிவை ஊட்டி வரும் புலவரை என்றும் காப்பாயாக. நீ நல்ல வளநாட்டிற்குத் தலைவன். ஆதலால், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் நீ பெற்று வாழ்வாயாக நினது நாளோலக்கம் நின்னைத் தேடி வரும் பாண் மக்களால் சூழ்வதாகுக, பிறகு நினது மார்பம் நின் உரிமை மகளிர் தோள் சூழ்வதாகுக: நின் அரண்மனை முற்றத்தில் முரசு அதிரத் தீயோரை ஒறுத்து. நல்லோரை அருள் செய்து வரும் முறையை இனியும் கடைப்பிடிப் பாயாக. 'நல்வினை நலம் பயக்கும் தீவினை தீமை பயக்கும்’ என்பதை மறுப்பவர் உறவை நீ நாடா தொழிவாயாக நின்னை நாடிவரும் எளியார்க்கு உதவி செய்யும் இயல்பு என்றும் நின்பால் நிலைப்பதாக, நீ பாதுகாத்த பொருள் நின் புகழிடத்ததாக”
இப்புலவர் பெருமான் பொன்மொழிகள் அவன் உள்ளத்தை உருக்கின. இவரே அன்றிக் கோவூர் கிழாரும் முற்றுகையிட்ட காலங்களில் எல்லாம் அறிவுரை கூறித் தெருட்டியுள்ளமை மேலே கூறப் பெற்றது. நற்குணங்கள் ஒருங்கே பெற்ற நலங்கிள்ளி, இப் பெருமக்கள் அறிவுரைப்படி நடந்து வந்தான் என்று நாம் எண்ணுவதில் பிழை ஒன்றும் இல்லை.
அக்காலச் செய்திகள் சில : ‘ஞாயிற்றினது வீதியும் அந்த ஞாயிற்றின் இயக்கமும் அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார்வட்டமும் காற்று இயங்கும் திக்கும், ஒர் ஆதாரமும் இன்றித்தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டு போய் அளந்து அறிந்தவரைப் போல நாளும் இத்துணை அளவை உடையன என்று சொல்லும் கல்வியை உடையவரும் உளர்.’[18] ........ இக்கூற்றால், அக்காலத்தில் விண்ணுரல் அறிஞர் இருந்தனர் என்பதை அறியலாம். நாளும் தம் கல்வியை வளர்த்து வந்த பேரறிஞர் இருந்தனர் என்பதை உணரலாம்.
‘கூம்புடனே மேல் பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல் அதன் மேல் பாரத்தையும் பறியாமல் ஆற்றுமுகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தைப் பரதவரும், அளவரும் முதலாகிய தகுதி இல்லாதோர் தம் புலத்திற்கு இடையாகிய பெருவழிக்கண்னே சொரியும் கடலால் வரும் பல பண்டத்தையுடைய நாட்டை உடையாய்!’[19] ............ இதனால், நலங்கிள்ளியின் காலத்தில் நடந்து வந்த கடல் வாணிகம் இத்தன்மைத்தென்பதை ஒருவாறு அறியலாம் அன்றோ?
‘கைவல்லோனால் புனைந்து செய்யப்பட்ட, எழுதிய, அழகு பொருந்திய அல்லிப்பாவை ‘அல்லியம்’ என்னும் கூத்தை ஆடும்’[20] ..... இதனால், ஒவியக்கலை சோணாட்டில் இருந்து வந்தமை அறியலாம், கூத்து வகைகள் பல இருந்தன; அவற்றில் அல்லியம் என்பது ஒன்று என்பதும் அறிந்தின்புறலாம்.
‘பலர் துஞ்சவும் தான் துஞ்சான் உலகு காக்கும்’[21] என்பதனால், நலங்கிள்ளி அரசியல் பொறுப்பை அழுத்தமாக உணர்ந்த செங்கோல் அரசன் என்பது செவ்விதின் விளங்கும் அன்றோ?
தம்பி மாவளத்தான்: இவனைப்பற்றி விவரமாக ஒன்றும் தெரியவில்லை. இவன் தாமப்பல் கண்ணனார் என்ற புலவரை ஆதரித்த வள்ளல், ஒருநாள் இவன் அவரோடு வட்டாடினான். அவன் கைகரப்ப, இவன் வெகுண்டான்; வட்டை அவர்மீது வீசி எறிந்தான். உடனே அவர் வெகுண்டு,‘நீ சோழன் மரபினன் அல்லை; அம்மரபில் வந்திருப்பின் நீ இங்ஙணம் செய்யாய்’ எனக்கடிந்தனர். அதுகேட்ட மாவளத்தான் தான் சினத்திற் செய்த சிறு செயலை எண்ணி வருந்தி நாணி நின்றான். அவனது உள்ள நிலையை நன்கு உணர்ந்த புலவர், தாம் அவனை வெகுண்டு கூறியதற்கு வருந்தி, அவனைத் தேற்றி மகிழ்வித்தார். இந்நிகழ்ச்சியை அப்புலவரே அழகாகப் பாடியுள்ளார்.[22]
- ↑ 16. புறம், 73
- ↑ 17. புறம் 32.
- ↑ 18. புறம் 30.
- ↑ 19. புறம்
- ↑ 20. புறம் 33.
- ↑ 21. புறம் 400.
- ↑ 22. புறம், 43.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோழன் நலங்கிள்ளி - History of Chola - சோழர் வரலாறு - இவன், வரும், பாடல், நின், அறியலாம், என்பதை, புலவர், பொருள், என்பது, நலங்கிள்ளி