2 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 6
2 யெருசலேமில் இருந்த கடவுள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தவும், அதற்கு யூப்பித்தர் ஒலிம்பியஸ் ஆலயம் என்று பெயரிடவும், காரீசிம் வாழ்ந்தவர்கள் இருந்தது போல, காரீசிம் ஆலயத்தையும் ~குடிவந்த யூப்பித்தர் ஆலயம்~ என்று பெயரிடவும் அனுப்பியிருந்தான்.
3 அப்போது அனைவருக்கும் எல்லாவிதமான கொடுந்துன்பங்களும் உண்டாயின.
4 ஏனென்றால், புறவினத்தாருடைய தீய நடத்தையாலும் விருந்துகளாலும் கடவுள் ஆலயம் நிறைந்திருந்தது. விலைமகளிரைச் சேர்ந்த மனிதர் அங்கு நிறைந்திருந்தார்கள். புனித இடங்களில் பெண்கள் வலிய நுழைந்தார்கள்@ (பலிக்கு) ஏற்காத பொருட்களை உள்ளே கொண்டு போனார்கள்.
5 கட்டளைகளால் விலக்கப்பட்ட (பலிப்) பொருட்களால் பீடமும் நிறைந்திருந்தது.
6 அவர்கள் ஓய்வு நாட்களைக் கடைபிடிக்கவில்லை. தம் தந்தையார் கொண்டாடிய திரு நாட்களைக் கொண்டாடவில்லை. தான் யூதனென்று முதலாய் எவனும் ஏற்றுக் கொள்ளவுமில்லை.
7 அரசன் பிறந்த நாளில் அவர்கள் கட்டாயத்தோடு பலிசெலுத்தக் கூட்டிக் கொண்டு போகப்பட்டார்கள்@ பாக்கஸ் திருநாள் கொண்டாடப்படுகையில், லியேர் கொடியாலான முடியணிந்து பாக்கசைச் சுற்றிவரக் கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.
8 அருகிலிருந்த புறவினத்தாரின் நகரங்களிலும் யூதர் அவ்விதமே பலியிடும்படியாய்க் கட்டாயப் படுத்தப்பட வேண்டுமென்று தோலெமேயர் தூண்டுதலால் கட்டளை பிறந்தது.
9 புறவினத்தாரின் வழக்கங்களை அனுசரிக்க மனமில்லாதவர்களைக் கொல்ல வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் இரங்கற்குரிய காட்சிகளே எங்கும் காணப்பட்டன.
10 ஏனென்றால், இரண்டு பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்கள். பிள்ளைகளை அவர்கள் மார்பில் தொங்க விட்டு, வெளிப்படையாய் நகரத்தைச் சுற்றி அவர்களைக் கொண்டு வந்த பிறகு, மதில்களின் மேலிருந்து அவர்களைத் தள்ளிக் கொன்றார்கள்.
11 அருகிலிருந்த குகைகளுக்குப் போய் மறைவாய் ஓய்வு நாளை அனுசரித்த சிலர், பிலிப்பு என்பவனிடம் காட்டிக் கொடுக்கப் பட்டபோது, (ஓய்வு நாளைப் பற்றிய) மறைக்கட்டளையை அனுசரித்து, தங்கள் கைகளைக் கொண்டு தங்களுக்கே உதவி செய்து கொள்ள அஞ்சியிருந்தமையால் நெருப்பில் எரிக்கப்பட்டார்கள்.
12 இத்தகைய துன்பங்களைப் பற்றி உள்ளத்தில் சோர்வடையாதபடிக்கு இப்புத்தகத்தை வாசிக்கிறவர்களை மன்றாடுகிறேன். ஆனால், நடந்தவையெல்லாம் நம்முடைய மக்களின் அழிவுக்கல்ல, தண்டனைக்காக மட்டுமே நடந்தனவென்று கொள்ளுங்கள்.
13 ஏனென்றால், பாவிகளை அவர்களுடைய எண்ணப்படி நீண்ட நாள் செயல்பட விடாது, அவர்களை உடனே பழிவாங்குவது (கடவுளின்) இரக்கப் பெருக்கத்தின் அடையாளமாய் இருக்கின்றது.
14 ஏனென்றால், மற்ற இனத்தாரைப் பொறுத்த மட்டில், ஆண்டவர் அவர்களைத் தண்டிக்கும் பொருட்டு அவர்கள் தங்கள் பாவங்களின் முழு அளவை எட்டும் வரையில் பொறுமையாய்க் காத்திருக்கிறார்@
15 ஆனால், அவர் நம்மோடு அவ்வாறு நடந்து கொள்வதில்லை. நம் பாவங்கள் தம் முழு அளவை அடைந்த பின் கடைசியில் நம்மைப் பழிவாங்கலாமென்று ஆண்டவர் காத்திருப்பதில்லை.
16 ஆகையால், நம் மீது இரக்கம் காட்ட ஒருபோதும் தவறுவதில்லை@ துன்பங்களால் தண்டித்தாலும், தம்முடைய மக்களைக் கைவிடுவதில்லை.
17 வாசகர்களின் கவனத்திற்கே இவ்வார்த்தைகளைக் கூறுகிறோம். இப்போது, வரவாற்று நிகழ்ச்சிகளைக் கூறுவோம்.
18 ஆதலால், மறைநூலறிஞருள் முதன்மையானவர்களில் ஒருவரான எலெயாசார் வயதில் தளர்ந்தவர்@ முக அழகு உள்ளவர். அவருடைய வாயைத்திறந்து பன்றி இறைச்சியை உண்ணும்படி அவரைக் கட்டாயப் படுத்தினார்கள்.
19 ஆனால், அவர் நிந்தைக்குரிய வாழ்வை விட மாட்சி நிறைந்த மரணத்தைத் தேடி,
20 வேதனைப்பட வலியச் சென்றார். தாம் எவ்வளவு பாடுபட வேண்டுமென்று அறிந்து, பொறுமையாய் ஏற்று, விலக்கப்பட்டவைகளுக்கு வாழ வேண்டுமெனும் ஆசையினால் இணங்காமலிருக்கத் தீர்மானித்துக் கொண்டார்.
21 அருகில் நின்றவர்கள் அவர் மீது தாங்கள் ஏற்கனவே கொண்டிருந்த நட்பால் அவர் மீது தவறான முறையில் இரக்கம் கொண்டு, அவரைத் தனியே அழைத்துத் தாங்கள் அவர் உண்ணக்கூடிய இறைச்சியைக் கொண்டு வருவதாகவும், அவரும் அரசன் கட்டளைப்படி பலியிடப்பட்ட இறைச்சியை உண்பது போல நடிக்கும்படியும் சொன்னார்கள்.
22 இப்படிச் செய்வாராகில் மரணத்தினின்று காப்பாற்றப்படுவாரென்று கூறி, அவர் மீது அவர்கள் கொண்டிருந்த பழைய நட்பால் மனிதத் தன்மையுடன் இவ்வாறு நடந்து கொண்டார்கள்.
23 ஆனால், அவர் தமது வயதுக்கும் முதுமைக்கும் தகுந்த மேன்மையையும், நரைத்தலையினால் இயல்பாக வரும் மாண்பையும், சிறுவயது முதல் தமது நல்வாழ்க்கையின் செய்கைகளையும், புனிதமானதும் கடவுளால் உண்டானதுமான கட்டளையின் ஏற்பாடுகளையும் எண்ணத்தொடங்கி, தாம் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதற்கு மனம் கொண்டிருப்பதாக உடனே மறுமொழி சொன்னார்.
24 ஏனென்றால்: பாசாங்கு செய்வது நம்முடைய வயதுக்குத் தகுதியன்று. இளைஞரில் பலர் தொண்ணுறு வயதுள்ள எலெயாசார் அன்னியருடைய நெறிக்குப் போய்விட்டார் என்று நினைப்பார்கள்.
25 என்னுடைய பாசாங்கை முன்னிட்டும், அழிந்துபோகும் குறுகிய வாழ்வை முன்னிட்டும், அவர்கள் மோசம்போவார்கள். இதனால் என் முதுமையில் குற்றமும் அவமானமுமே என்னைச் சாரும்.
26 ஏனென்றால், மனிதர்களுடைய வேதனைகளினின்று நான் இப்பொழுது விடுவிக்கப்பட்ட போதிலும், உயிரோடு இருந்தாலும் இறந்தாலும் எல்லாம் வல்லவருடைய கையினின்று நான் தப்பிக் கொள்ளமாட்டேன்.
27 ஆதலால், துணிவுடன் உயிரை விடுவதால் நான் முதுமைக்கு உகந்தவனாகத் தோன்றுவேன்.
28 நான் சுறுசுறுப்பான மனத்தோடு முதன்மையானவைகளும் புனிதமானவைகளுமான கட்டளைகளுக்காகத் தயக்கமின்றி நேர்மையான மரணம் அடைந்தால், இளைஞருக்கு நான் நன்மாதிரியாய் இருப்பேன் என்றார் இவையெல்லாம் சொன்ன பிறகு, துன்புறுத்தப்படுவதற்கு உடனே இழுத்துக் கொண்டு போகப்பட்டார்.
29 அவரைக் கூட்டிக்கொண்டு போனவர்கள் முதலில் சாந்தமுள்ளவர்களாய் இருந்த போதிலும், அவர் அகந்தையாய்ப் பேசினாரென்று எண்ணிக் கோபமடைந்தார்கள்.
30 ஆனால், அவர் அடிப்பட்டுக் காயமுற்ற போது: ஆண்டவரே மரணத்தினின்று நான் மீட்கப்படக் கூடுமானாலும், நான் இக்கொடிய உடலின் பாடுகளை ஏற்றுக்கொள்கிறேன். உமக்குப் பயந்து இவைகளை மனமகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். உமது புனித ஞானத்தினால் இவை யாவையும் நீர் அறிவீர் என்றார்.
31 அவர் இவ்வாறு உயிர் விட்டார். இளைஞருக்கு மட்டுமன்று, மக்கள் அனைவருக்கும் புண்ணியத்தினுடையவும் துணிவினுடையவும் மாதிரியைத் தம்முடைய மரணத்தின் நினைவாக விட்டுச் சென்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
2 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, அவர், கொண்டு, நான், ஏனென்றால், ஏற்பாடு, பழைய, தங்கள், மீது, ஓய்வு, உடனே, புனித, பிறகு, ஆகமம், அரசன், வேண்டுமென்று, மக்கபே, அவரைக், இறைச்சியை, தம்முடைய, இரக்கம், வாழ்வை, ஆதலால், எலெயாசார், தாங்கள், தமது, இவ்வாறு, முன்னிட்டும், போதிலும், இளைஞருக்கு, மரணத்தினின்று, நட்பால், தாம், என்றார், கொண்டிருந்த, நடந்து, சென்றார், இதனால், ஆலயம், பெயரிடவும், காரீசிம், அனைவருக்கும், யூப்பித்தர், கடவுள், திருவிவிலியம், ஆன்மிகம், இருந்த, நிறைந்திருந்தது, பெண்கள், அவர்களைத், நம்முடைய, ஆண்டவர், முழு, கட்டாயப், புறவினத்தாரின், நாட்களைக், ஏற்றுக், அருகிலிருந்த, அளவை