ஜென் கதைகள் - குரு சிஷ்யன்
ஒரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர்.
ஒரு சீடன் கேட்டான், ‘குருவே, பூர்வாசிரமத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்… நிஜம்தானா?’
‘நிஜம்தான்.. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்…!’ என்றார் குரு.
‘ஏன் குருவே? போர் தவறா… ஆயுதங்களே வேண்டாமா?’
‘சரி தவறு என்பதல்ல என் வாதம்… ஒரு கட்டத்துக்குமேல் புத்திக் கூர்மையும் அமைதியையும் விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று புரிந்துவிட்டது எனக்கு!”
குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவரை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்து, ஒரு திட்டம் போட்டனர்.
‘நாளை குரு தியானத்தில் இருக்கும்போது, நாம் இருவரும் மறைந்திருந்து அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதங்களை எடுக்காமல் நம்மை எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்ப்போம்,’ என்று முடிவு செய்தனர்.
மறுநாள் வகுப்புகள் முடிந்ததும், குரு வழக்கம்போல தியானத்தில் ஆழந்துவிட, இந்த இரு சீடர்கள் மட்டும் ஓலை தட்டிகளுக்கு அப்பால் மறைந்து கொண்டனர்.
சில நிமிடங்கள் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்தனர். பேசி வைத்தபடி இருவரும் குருவின் மீது ஏக காலத்தில் இரு பக்கமிருந்தும் பாய்ந்தனர்.
குரு முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும்வரை கண்மூடி அமைதியாக இருந்த குரு, கடைசி விநாடியில் சற்று முன்னே வந்து குனிந்துகொண்டார். சீடர்கள் இருவரும் மடேர் என்று மோதிக் கொண்டு தரையில் விழுந்து உருண்டனர்.
எதுவும் நடக்காததுபோல் தியானத்தைத் தொடர்ந்தார் குரு!
குழப்பம் குருவே குழப்பம்!
புகழ்பெற்ற துறவி அவர்.
அவருக்கு ஏராளமான மாணவர்கள். ஒருநாள், அந்த துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.
பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘குருவே, எனக்கு ஒரு குழப்பம்,’ என்று ஆரம்பித்தார் மாணவர்.
‘என்ன?’
‘நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன். கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக்கூர்மையையும் தருகின்றன. அதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்!’
‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி… இதில் என்ன குழப்பம்?’
‘நான் தியானத்தில் இல்லாத வேளைகளில் முழுமையான நல்லவனாக இருக்கிறேனா என்ற சந்தேகம் இருக்கிறது. அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது. சில நாள்களில் நானும் ஒன்றிரண்டு தவறுகளைச் செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படிச் செய்வது சரிதானா? இதை யோசிக்கும்போது என் உள்ளம் குன்றிச் சிறுத்துவிடுகிறது!”
குருநாதர் சிரித்தார். ‘ஆக… நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே…?’
‘ஆமாம் குருவே. அது தவறில்லையா?’
‘இல்லை. நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!’
‘அய்யோ.. ஒருவேளை தவறு நிற்பதற்குப் பதில் தியானம் நின்றுவிட்டால்?’
‘அதுவும் நல்லதுதான். உன்னுடைய இயல்பு எது என்று புரிந்துவிடும் இல்லையா?!”
தேடல் தொடர்பான தகவல்கள்:
குரு சிஷ்யன் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - குரு, தியானம், இருவரும், தினமும், தவறு, செய், குழப்பம், தியானத்தில், குருவே, எனக்கு, சீடர்கள்