முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்
ஜென் கதைகள் - தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்
அந்த குருவுக்கு மிகவும் வயதாகிவிட்டது,
ஒருநாள் அவர் தனது சிறந்த சீடர்கள் மூன்று பேரை அழைத்தார். மூவரும் பணிவுடன் அவர் அருகில் வந்தனர். அவர் சொல்லப்போவதைக் கேட்கத் தயாராக நின்றனர். குரு அந்த மூன்று பேரையும் உற்றுநோக்கினார். பின்னர் சற்றுநேரம் ஏதும் பேசாமல் மவுனமாக இருந்தார்.
பிறகு மெல்லக் கூறினார், "எனக்கு வயதாகி விட்டது. நான் ஓய்வு பெற விரும்புகிறேன்."
மூவரும் அதற்கு எதுவுமே பதில் பேசவில்லை. மிகவும் மவுனமாக இருந்தனர்.
"நீங்கள் ஏறக்குறைய எல்லாவற்றையும் கற்றுவிட்டீர்கள் என்று கருதுகிறேன். எனினும் வெறும் தர்க்க அறிவு என்பது வேறு. அனுபவ அறிவு என்பது வேறு. அதுபோலவே தத்துவம் என்பதும், யதார்த்தம் என்பதும் வேறு வேறு." தான் சொன்னது அவர்களுக்கு விளங்க வேண்டும் என்பதற்காகச் சற்று நேரம் அமைதியாயிருந்த குரு, பிறகு தொடர்ந்தார்:
"மனிதன் இறையுனர்வு பெறவேண்டும். அதுதான் முக்கியமானது. அதனால் நீங்கள் மூவரும் தனித்தனியாகச் செல்லுங்கள். பல திசைகளிலும் ஓராண்டு பிரயாணம் செய்யுங்கள். திரும்பி வந்து உங்களுக்கு ஏற்பட்ட மெய்ஞ்ஞான அனுபவத்தைப்பற்றி என்னிடம் சொல்லுங்கள்."
உடனே மூவரும் புறப்பட்டனர். ஓரிடத்தில் அவர்கள் வெவ்வேறு திசைகளில் பிரிந்தனர். நாடெங்கும் பயணம் செய்தனர். பயணத்தில் அவர்களுக்குக் கிடைத்ததோ பலதரப்பட்ட அனுபவங்கள். அவர்கள் பலவகையான மக்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்களை பல்வேறு விதமான சம்பவங்களை எதிர்கொண்டன. மூவரும் திரும்பிவர ஒரு வருடத்திற்கு மேல் ஆயிற்று. அப்படித் திரும்பி வந்த மூவரும் சேர்ந்தே குருவிடம் போனார்கள்.
"குருவே! நான் இறைவனைக் கண்டேன். அவர் எங்கும் இருக்கிறார். அவருக்கு உருவம் கிடையாது. எல்லாவற்றிலும், எல்லா இடத்திலும் இறை வியாபித்துள்ளது," என்றான் முதலாமவன்.
"குருவே! இறைவனுக்கு உருவம் உண்டு. அவர் ஒளிவடிவமாகக் காணப்படுகிறார். மனக் கண்ணால் மட்டும்தான் அவரைக் காணமுடிகிறது. மனம் உருகிப் பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் அவர் பலவிதங்களில் உதவ ஓடி வருகிறார்." என்றான் இரண்டாமவன்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மூன்றாமவன் சங்கடத்துடன் தலையைக் குனிந்து கொண்டான். பின்னர் மெல்லச் சொன்னான். "எனக்கு ஒரே குழப்பாயிருக்கிறது. எதுவும் புரியவில்லை. திட்டவட்டமாக இதுதான் இறைவன் என்று ஊகிக்கவோ, முடிவுகட்டவோ என் அறிவு எனக்கு இடம்தரவில்லை," என்று கூறினான். இதைக் கேட்ட மற்ற இருவரும் அவனைக் கேலியாகப் பார்த்தனர்.
ஆனால் குருவின் முகத்தில் புன்னகை பளிச்சிட்டது. "நீ சொன்னதுதான் உண்மை!" என்றார் அமைதியுடன். அத்துடன், "எனக்குப் பின் இம்மடாலயத்தை நீயே நிர்வகித்து வா!" என்றார்.
நீதி: அறிவுக்கோ, விவாதங்களுக்கோ எட்டாதது ஞானம். தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள். தெரிந்ததாக வேடம் பூணாதே என்கிறது ஜென்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", மூவரும், அவர், வேறு, எனக்கு, அறிவு