ஜென் கதைகள் - கோப்பை இறந்தது
ஸென் ஆசிரியர் இக்கியூ சிறுவனாக இருந்த போது நடந்த நிகழ்ச்சி இது. சிறுவனாக இருந்த இக்கியூ புத்திச்சாலியும் அதே சமயத்தில் துடுக்குத் தனம் கொண்டவனாக இருந்தான். ஜப்பானில் சீனாவில் இருந்து கொண்டு வந்த தேனீர் கோப்பைகள் மிகவும் அரிய கலைப் பொருட்களாக கருதப் பட்டன. ஒருவருடைய மதிப்பு அவருடைய சிறந்த கலைப் பொருட்களின் சேகரிப்பை பொருத்து இருந்தது. தங்கத்தை விடவும் மிக மதிப்புடையவையாக இவை கருதப் பட்டன.
இக்கியூவின் ஆசிரியரிடம் விலை மதிப்பில்லாத அரிதில் கிடைக்கக் கூடிய கலைப்பொருளான ஒரு தேனீர்க் கோப்பை இருந்தது. ஆசிரியர் இல்லாத சமயத்தில் ஒரு நாள் அதனை எடுத்து பார்த்துக் கொண்டிருந்த இக்கியூ கை தவற விட்டு உடைத்து விட்டான். உடைத்தவன் நெஞ்சம் படபடக்க என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தான். அசிரியர் அறையினுள் வரும் ஒசையைக் கேட்டதும் உடைந்த கோப்பையை கையில் எடுத்து தன் பின்புறமாக மறைத்துக் கொண்டான்.
ஆசிரியர் அருகில் வந்ததும், எதுவும் நடவாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு "ஐயா, எதற்காக மனிதர்கள் இறக்கிறார்கள்?" என்று கேட்டான்.
ஆசிரியர் சிறுவனுக்கு புரியும் படியாக, "எவ்வளவு நாட்கள் தான் வாழ்வது, சாவு என்பது இயற்கையான ஒன்று, உலகத்தில் பிறந்த எது ஒன்றும் இறந்துதான் ஆக வேண்டும்." என்றார்.
அதற்காகத் தான் காத்திருந்த சிறுவன் "இப்பொழுது உங்கள் தேனீர் கோப்பைக்கு சாகும் நேரம் வந்து விட்டது" என்று கூறி உடைந்த கோப்பையைக் காண்பித்தான்.
ஆசிரியர் அவனுடைய சமார்த்தியத்தை பார்த்து வியந்து சிரித்துக் கொண்டே சென்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோப்பை இறந்தது - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ஆசிரியர், ", இக்கியூ