முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » சிறுவர் கதைகள் » பஞ்ச தந்திரக் கதைகள் » 12. மூன்று மீன்கள்
பஞ்ச தந்திரக் கதைகள் - 12. மூன்று மீன்கள்
ஒரு குளத்தில் மூன்று மீன்கள் இருந்தன. அவற்றின் பெயர் வருமுன்காப்போன், வருங்கால் காப்போன், வந்தபின்காப்போன் என்பனவாகும்.
அவை மூன்றும் ஒரு கவலையும் இல்லாமல் பல நாட்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தன். ஒரு நாள், வலைஞர்கள் வந்து நாளை இந்தக் குளத்தில் மீன் பிடிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்டவுடன் வருமுன்காப்போன் என்ற மீன், மற்ற மீன்களைப் பார்த்து, இப்பொழுதே நாம் மற்றோர் இடத்திற்குப் போய்விட வேண்டும்’ என்று சொல்வியது.
அதற்கு வருங்கால்காப்போன் என்ற மீன் என்ன அவசரம்? அந்தச் சமயத்திற்குப் பார்த்துக் கொள்ளலாம். சமயத்திற்குத் தகுந்தாற் போல் தந்திரம் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கூறியது.
வருமுன்காப்போன் என்ற மீன், இந்தக் கருத்தை ஒப்புக் கொள்ளாமல் அப்பொழுதே அந்தக் குளத்தைவிட்டு மற்றொரு குளத்திற்குப் போய் விட்டது. வருங்கால்காப்போன், வந்தபின்காப்போன் முதலிய மீன்களெல்லாம் அந்தக் குளத்திலேயே இருந்தன.
பேசிச் சென்றபடி மறுநாள் வலைஞர்கள் மீன் பிடிக்க வந்தார்கள். எல்லா மீன்களையும் வலை வீசிப் பிடித்தார்கள். அப்போது வலையில் அகப் பட்டுக் கொண்ட வருங்கால்காப்போன் செத்த மீன் போல், விரைத்துக் கிடந்தது. அதைக் கண்டு ஒரு செம்படவன் கரையில் தூக்கி எறிந்தான். அது யாரும் காணாமல் தண்ணிருக்குள் புகுந்து மறைந்து கொண்டது. வந்தபின் காப்போனும், மற்ற மீன்களும் வழி தெரியாமல் அகப்பட்டுக் கொண்டு செம்படவர்கள் கையிலே சிக்கி மடிந்து போயின.
முன்னாலேயே எதையும் நினைத்துப் பார்த்து முடிவு செய்பவன் உறுதியாகப் பிழைத்துக் கொள் வான். அவ்வப்போது சிந்தித்து வேலை செய்யும் அறிவுடையவனும் எப்படியாவது பிழைத்துக் கொள்வான். எதையும் எப்போதும் சிந்திக்காதவன் பிழைக்கவே மாட்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
12. மூன்று மீன்கள் - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - மீன், வருங்கால்காப்போன், வருமுன்காப்போன்