ஓஷோ சொன்ன கதைகள் - கடவுளுக்கான சான்று
ராமகிருஷ்ணர் 19-தாவது நூற்றாண்டின் கடைசியில் வாழ்ந்தவர் மிகவும் வெகுளி. கேசவ் சந்திரசென் என்பவர் மிகவும் படித்தவர், பண்டிதர், அந்த கால கட்டத்தில் மிகவும் படித்த பண்டிதர்களில் ஒருவர். அவர்கள் இருவரும் அருகருகில்தான் வாழ்ந்தனர். கேசவ் கொல்கத்தாவில் இருந்தார், ராமகிருஷ்ணர் கொல்கத்தா அருகே கங்கை நதிகரையோரம் இருந்த தக்ஷ்ணேஷ்வரில் இருந்த சிறிய கோவிலில் பூசாரியாக வேலை செய்தார்.
கேசவ் சந்திரா அவருடைய புத்திசாலித்தனம், அவருடைய தர்க்க அறிவு, வாதத்திறமை, அவருடைய அறிவு, விவேகம், வேதநூல்களில் அவருக்கிருந்த புலமை ஆகியவற்றிற்க்காக நாடு முழுவதும் போற்றப்பட்டார். மக்கள் எல்லா இடங்களில் இருந்தும் வந்து அவர் காலடியில் அமர்ந்து அவர் பேச்சைக் கேட்டனர்.
இப்படி இவர் பேச்சைக் வருடக்கணக்கில் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் தக்ஷிணேஷ்வர் கோவிலில் இருக்கும் ராமகிருஷ்ணரிடம் செல்வதை பார்த்து அவர் மிகவும் குழப்பமடைந்தார். அவருக்கு படிப்பறிவில்லை, எந்த வேதபுத்தகத்தைப்பற்றியும் எதுவும் தெரியாது, அவருக்கு அறிவு ஏதும் இருப்பதாகவே தெரிவதில்லை, அவருக்கு தர்க்கம் ஏதும் செய்ய தெரியாது, எதைப் பற்றியும் பேசி யாருக்கும் அவரால் புரிய வைக்கவும் முடியாது.
என்ன நடக்கிறது இங்கே என்று மிகவும் குழப்பமடைந்தார் கேசவ். அவருடன் வருடக்கணக்கில் இருந்து அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் இப்போது அங்கே செல்கின்றனர். அவரிடம் கூட்டம் கூடிக் கொண்டிருந்தது. கேசவ் கேள்விப்பட்ட வகையில் ராமகிருஷ்ணர் கிட்டத்தட்ட அரைப்பைத்தியம் போன்றவர். திடீரென ஆடுவார், பாடுவார். நல்லதொரு பாடலை கேட்டவுடன் சமாதி நிலை அடைந்து விடுவார். பல மணி நேரங்களுக்கு அந்த சமாதி நிலை நீடிக்கும். அவர் அவருள் ஆழ்ந்து போய் விடுவார், அவரை யாராலும் எழுப்ப முடியாது. அது சாதாரண தூக்கமல்ல, அது கோமா போன்றது.
ஒரு முறை அவர் அது போன்று 6 நாட்களுக்கு இருந்தார். அவரை எழுப்ப எல்லோரும் இயன்றவரை முயன்று பார்த்தனர். ஆனால் எல்லாமே தோல்வியில்தான் முடிந்தது. அவரை யாராலும் எழுப்ப முடியவில்லை. 6 நாட்களுக்கு பின் எழுந்த அவர் கண்களில் கண்ணீருடன், “ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள் நான் என்னுள் ஆனந்தமாக இருந்தேன். என்னை வெளி உலகுக்கு இழுத்துக் கொண்டே இருந்தீர்கள், இங்கே ஒன்றுமே இல்லை. நான் எல்லாவற்றையும் அனுபவித்து பார்த்து விட்டேன். என்னுடைய சுயத்தை உணரவோ, முடிவற்ற ஆனந்தத்தை கொடுக்கவோ, அழிவற்ற பரவசத்தை அளிப்பதற்க்கோ இங்குள்ள எதனாலும் முடியாது. அதனால் நான் எப்போதெல்லாம் நான் உள்ளே சென்றாலும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள். என்னை விட்டு விடுங்கள்”. என்று கூறினார். 6 நாட்கள் என்பது மிகவும் அதிகமான நாட்கணக்குதான். அவர் கோமாவில் இருந்தால் சீடர்கள் கவலைப்படாமல் என்ன செய்வார்கள்!.
இது போல கேசவ்வை வந்து சேர்ந்த செய்திகள் அனைத்துமே இந்த ராமகிருஷ்ணர் ஒரு கிறுக்கு, மறைகழன்றவர், லூசு என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அவரிடம் வந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த அனைவருமே மெத்த படித்தவர்கள், பேராசிரியர்கள், வேத விற்பன்னர்கள். அவர்கள் எப்படி இந்த ராமகிருஷ்ணரிடம் போனார்கள்?
இறுதியாக கேசவ் தானே போய் அவரை பார்ப்பது என்று தீர்மானித்தார். பார்ப்பது மட்டுமல்லாமல் அவரிடம் வாதிட்டு அவரை தோற்கடிப்பது என்றும் நினைத்தார். அவர் ராமகிருஷ்ணருக்கு, “நான் இந்த தேதியில் வருகிறேன். தயாராக இருங்கள். நான் இறுதியான விஷயங்களைப் பற்றி பேசி உங்களுடன் தர்க்கம் செய்யப் போகிறேன்.” என்று செய்தி அனுப்பினார்.
ராமகிருஷ்ணர் இதை கேள்விப்பட்டதும் சிரித்தார். “கேசவ் சந்திராவை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். அவர் மிகச் சிறந்த தர்க்கவாதி, புத்திசாலி. ஆனால் அவர் யாருடன் தர்க்கம் செய்யப்போகிறார் என்று அவருக்குத் தெரியவில்லை. வரட்டும், நான் இந்த போட்டியை ஒத்துக் கொள்கிறேன். இது ஒரு நல்ல காரணமாக இருக்கும்.” என்றார்.
அவரது சீடர்கள், “இது நன்றாக இருக்காது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இதுவரை யாருடனும் போட்டியிட்டதேயில்லை. அவர் அவரது சீடர்களுடன் வரப் போகிறார். அத்தனை பேர் முன்னிலையிலும் …….. வேண்டாம் இந்த விஷப்பரீட்சை”. என்றனர்.
ஆனால் ராமகிருஷ்ணர் கூறியது எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. அவர், “நான் வாதிடப் போவதில்லை, ஏனெனில் நான் வாதாடும் மனிதனல்ல. அவர் வரட்டும், எனக்கு சமய நூல்களைப்பற்றி தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு உண்மை என்னவென்று தெரியும், நான் எதற்கு கடன்வாங்கப்பட்ட தகவலறிவைப் பற்றி கவலைப்பட வேண்டும்? நான் படிக்கவில்லை, எனக்கு எப்படி நிரூபிப்பது, அல்லது நிரூபித்ததை உடைப்பது என்று தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய இருப்பே போதுமானது, அவர் வரட்டும்.” என்று கூறினார்.
கேசவ் சந்திரா இவருடைய இருப்பை எப்படி ஒரு வாதமாக ஏற்றுக் கொள்வார் என்று சீடர்களுக்கு தெரியாததால் அவர்கள் பயந்தனர். கேசவ் சந்திரா வந்தார். ராமகிருஷ்ணர் வெளியே வந்து இவரை அணைத்து உள்ளே கூட்டிச் சென்றார். கேசவ் இப்படி இவர் வெளியே வந்து காத்திருந்து அணைத்து உள்ளே கூட்டிச் செல்வார் என்று எதிர்பார்க்கவேயில்லை. “நீங்கள் வந்ததற்கு மிகவும் நன்றி. நான் நீங்கள் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எப்போதெல்லாம் உங்களுக்கு என்னிடம் வாதிட தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் என்னிடம் வரலாம். என்னிடம் போட்டியிட நீங்கள் எப்போதும் வரலாம். முன்கூட்டியே சொல்லிவிட்டு வர வேண்டிய அவசியம் இல்லை. நான் எப்போதும் ப்ரீதான். நான் 24 மணி நேரமும் இந்த கோவிலிலேயேதான் இருப்பேன். நீங்கள் இரவு பகல் எந்த நேரமும் வரலாம்”. என்றார் ராமகிருஷ்ணர்.
கேசவ் தனக்குத்தானே எதற்காக வந்தோம் என நினைவு படுத்திக் கொண்டார். அது மிகவும் கடினமானதாக இருந்தது. இவர் மிகவும் அன்பானவராக இருந்தார், இவரது அதிர்வே மிகவும் பிடித்தமானதாக இருந்தது. மேலும் ராமகிருஷ்ணர், “முதலில் உங்களது வாக்குவாதத்தை ஆரம்பிக்கும் முன் உங்களை வரவேற்பதற்காக நான் நடனமாடுகிறேன்”. என்றார். அங்கே இருந்த அவரது இசைக்குழுவினர் வாத்தியங்களை வாசிக்க ஆரம்பித்தனர், இவர் நடனமாட ஆரம்பித்தார்.
கேசவ் சந்திரரால் நம்பவே முடியவில்லை. அவரது சீடர்களாலும் நம்ப முடியவில்லை. சந்திரா பலருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். நாடு முழுவதிலும் உள்ள பல பண்டிதர்களை போட்டியிட்டு வென்றிருக்கிறார். ஆனால் நடனம் மூலம் தன்னை வரவேற்ற ஒருவரை இதுவரை அவர் சந்திக்கவில்லை. மேலும் நடனம் மிகவும் அற்புதமாக இருந்தது. அது ஒரு பொங்கிப் பெருகும் அன்பின் அடையாளமாக இருந்தது. அது சாதாரணமானதாக இல்லை, அது வரவேற்பின் உச்சகட்டம். கேசவ் சந்திரர் கூட இவர் சத்தியமானவர் என்பதை உணர்ந்தார்.
நடனம் முடிந்த பின் ராமகிருஷ்ணர் “இப்போது நீங்கள் ஆரம்பிக்கலாம்” என்று கூறினார். கேசவ் சந்திரா, “நீங்கள் முதலில் கடவுள் இருக்கிறார் என்பதை எனக்கு நிரூபிக்க வேண்டும்” என்றார்.
ராமகிருஷ்ணர் சிரித்தார். “கடவுள் இருப்பதற்க்கு சான்றா ? நீதான் சான்று.! இல்லாவிடில் எங்கிருந்து இவ்வளவு விவேகம் வந்தது? இது உறுதியாக பிரபஞ்சத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும், பிரபஞ்சத்தால் கேசவ் சந்திரா போன்றவரை உருவாக்க முடியும் என்றால் அது தன்னுணர்வற்றது அல்ல, அது விவேகமற்றதுமல்ல. இதைத்தான் நாம் கடவுள் என்றழைக்கிறோம்.
எப்படி அழைக்கிறோம் என்பது பொருட்டல்ல. நீதான் சான்று. நீதான் சான்று என்பதை அறியாமல் நீயே சான்று கேட்பதுதான் இதில் விந்தை. நான் யாரை வேண்டுமானாலும் கொண்டு வந்து நிறுத்துகிறேன், நீதான் சான்று என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்வர். நாம் கடவுள் என்றழைப்பது பிரபஞ்சம் புத்திசாலித்தனத்தோடு இருப்பதுதான், பிரபஞ்சம் தன்னுணர்வின்றி இருப்பதில்லை. என்றார்.
கேசவ் சந்திராவின் சீடர்கள் கேசவ் சந்திரா இவ்வளவு அதிர்ச்சியடைந்து பார்த்தேயில்லை. அவர் மௌனமாகிவிட்டார், என்ன சொல்வதென்றே அவருக்கு தெரியவில்லை. ராமகிருஷ்ணரின் சீடர்கள்கூட அதிர்ச்சியடைந்து விட்டனர். அவர்கள், “அடக் கடவுளே, எப்படி இவர் அவருடன் வாதிடப் போகிறாரோ என நாம் நினைத்தோம், ஆனால் இவர் எந்த சிரமுமில்லாமல் அவரை வாயடைக்கச் செய்து விட்டாரே, எந்த புத்தகத்திலிருந்தும் மேற்கோள் எதுவும் காட்டவில்லை, கேசவ் சந்திராவே தனக்கு எதிரான வாதத்தை செய்து கொண்டு விட்டார்” என்று பேசிக் கொண்டனர்.
ஒவ்வொரு முறை கேசவ் சந்திரா எதையாவது மிக நன்றாக சொல்லும் போது ராமகிருஷ்ணர் ஒரு குழந்தை போல கை தட்டி பாராட்டுவார். ஆனால் தனக்கு எதிராக தானே விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறோம் என அவர் நினைக்கவேயில்லை.
சீடர்கள், “நான் அவருக்கு எதிராக வாதம் புரிந்து கொண்டிருக்கிறேன், அவர் மகிழ்ச்சியாக கை தட்டிக் கொண்டிருக்கிறார், அவருகென்ன பைத்தியமா என கேசவ் சந்திரா நினைத்தார்” என கூறிக் கொண்டனர்.
வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது இடையில் ராமகிருஷ்ணர் எழுந்துவந்து கேசவ்வை கட்டிதழுவிக் கொண்டு, “இது மிகவும் அற்புதமான பாயிண்ட். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்கள் தொடருங்கள்” என்று கூறினார். எந்த வாக்குவாதமும் செய்ய வேண்டிய தேவையேயில்லாமல் அவரிடம் இருந்த அந்த சந்தோஷம், அந்த அன்பு, அந்த அசைக்க முடியாத அமைதி இவைதான் அவருடைய வெற்றியாக அமைந்தன.
கேசவ் சந்திரா ராமகிருஷ்ணரின் பாதங்களில் வீழ்ந்து பணிந்து “என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களைப் பற்றி தவறாக புரிந்து கொண்டிருந்தேன்” என்றார்.
ராமகிருஷ்ணர், “என்ன இது நீங்கள் மிகவும் படித்தவர், நான் படிக்காதவன். படிப்பறிவில்லாதவன், வெகுளி, என்னால் எனது பெயரைக் கூட எழுத முடியாது. எனக்கு என்னைத் தெரியும், ஆனால் எனக்கு கையெழுத்திடத் தெரியாது, எனக்கு படிக்கத் தெரியாது. நீங்கள் இப்படி செய்ய வேண்டியதில்லை” என்றார்.
கேசவ் சந்திரா ராமகிருஷ்ணரின் பக்தர்களில் ஒருவராக மாறிவிட்டார். ராமகிருஷ்ணரிடம் எந்த கேள்விக்கும் பதில் இல்லை, அவரிடமும் எந்த கேள்வியும் இல்லை. ஆனால் அவரது வெகுளித்தனமும் எளிமையும் பல பேரை கவர்ந்தது, பலபேரை மாற்றியது. அவருடைய அன்பே மிகப்பெரிய இரசாயனமாற்றத்தை தந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடவுளுக்கான சான்று - ஓஷோ சொன்ன கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - கேசவ், அவர், நான், மிகவும், ராமகிருஷ்ணர், சந்திரா, நீங்கள், எனக்கு, இவர், என்றார், இல்லை, எந்த, தெரியாது, அவரை, வந்து, சான்று, வேண்டிய, அவருடைய, அவருக்கு, அந்த, அவரது, எப்படி, என்னை, சீடர்கள், இருந்த, கூறினார், அவரிடம், என்பதை, நீதான், முடியாது, எப்போதும், கடவுள், நடனம், கொள்ள, அவசியம், என்னிடம், ராமகிருஷ்ணரின், கொண்டு, நாம், எழுப்ப, இப்படி, கேட்டுக், கொண்டிருந்த, பேச்சைக், மக்கள், இருந்தார், அறிவு, ராமகிருஷ்ணரிடம், தர்க்கம், “நான், பற்றி, உள்ளே, முடியவில்லை, செய்ய, என்ன, வரட்டும்