சங்க காலம்
சங்க இலக்கியத்தின் காலவரையறை பற்றி அறிஞர்களுக்கிடையே இன்னும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இலங்கை அரசன் இரண்டாம் கயவாகு, சேர அரசன் செங்குட்டுவன் இருவரும் சமகாலத்தவர் என்ற செய்தி சங்க காலத்தை நிர்ணயிப்பதற்கு அடிப்படையாகத் திகழ்கிறது. இச்செய்தியை சிலப்பதிகாரம், தீபவம்சம், மகாவம்சம் ஆகிய நூல்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட ரோமானிய நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, இலக்கியம், தொல்லியல், நாணயவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு சங்க இலக்கியங்களின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை என்ற முடிவுக்கு வரலாம்.
அரசியல் வரலாறு
சங்க கால தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மரபுகள் ஆட்சி புரிந்தனர். இலக்கிய குறிப்புகளிலிருந்து இந்த மரபுகளின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ளலாம்.
சேரர்கள்
தற்காலத்திய கேரளப் பகுதியில் சேரர்கள் ஆட்சிபுரிந்தனர். அவர்களது தலைநகரம் வஞ்சி. முக்கிய துறைமுகங்கள் தொண்டி மற்றும் முசிறி. பனம்பூ மாலையை அவர்கள் அணிந்தனர். கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகலூர்க் கல்வெட்டு சேர ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது. சேர அரசர்களைப் பற்றி பதிற்றுப்பத்தும் கூறுகிறது. பெரும்சோற்று உதியன் சேரலாதன், இமயவரம்பன், நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் சேர மரபின் சிறந்த அரசர்களாவர்.
சேரன் செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அவனது இளவலான இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். செங்குட்டுவனின் படையெடுப்புகளில் அவன் மேற்கொண்ட இமாலயப் படையெடுப்பு குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறு வடஇந்திய ஆட்சியாளர்களை அவன் முறியடித்தான். தமிழ்நாட்டில் கற்புக்கரசி கண்ணகி அல்லது பத்தினி வழிபாட்டை செங்குட்டுவன் அறிமுகப்படுத்தினான். இமாலயப் படையெடுப்பின்போது பத்தினி சிலை வடிப்பதற்கான கல்லைக்கொண்டு வந்தான். கோயில் குடமுழுக்கு விழாவில் இலங்கை அரசன் இரண்டாம் கயவாகு உள்ளிட்ட பல அரசர்கள் கலந்து கொண்டனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்க காலம் , சங்க, வரலாறு, காலம், செங்குட்டுவன், இந்திய, இரண்டாம், அரசன், நூற்றாண்டைச், பற்றி, சேரர்கள், சேரன், அவன், பத்தினி, இமாலயப், மூன்றாம், கயவாகு, இந்தியா, இலக்கியத்தின், இலங்கை, முதலாம், பல்வேறு