தென்னிந்திய வரலாற்றில் சங்க காலம் ஒரு சிறப்பான அத்தியாயம் ஆகும். தமிழ்ப் பழங்கதைகளின்படி பண்டைய தமிழ்நாட்டில் முச்சங்கம் என்றழைக்கப்பட்ட மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தன. பாண்டிய மன்னர்களின் ஆதரவில் இந்த சங்கங்கள் தழைத்தோங்கின. தென்மதுரையில் இருந்த முதற்சங்கத்தில் கடவுளரும், முனிவர்களும் பங்கேற்றனர் என்று கூறப்பட்டிருந்தாலும் இச்சங்கத்தைச் சேர்ந்த நூல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இரண்டாவது சங்கம் கபாடபுரத்தில் நடைபெற்றது. தொல்காப்பியம் தவிர ஏனைய இலக்கியங்கள் யாவும் அழிந்து போயின, மூன்றாவது சங்கத்தை மதுரையில் முடத்திருமாறன் என்ற பாண்டிய மன்னன் நிறுவினான். அதிக எண்ணிக்கையிலான புலவர்கள் இதில் பங்கேற்றனர். ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்பட்டன என்றாலும் ஒரு சிலவே எஞ்சியுள்ளன. இந்த தமிழ் இலக்கியங்கள் சங்க கால வரலாற்றை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன.
சங்க இலக்கியங்கள்
|
சங்க இலக்கியங்கள் |
சங்க இலக்கியத்தொகுப்பில் தொல்காப்பியம், எட்டுத்தொகை பத்துப்பாட்டு, பதினெண்கீழ் கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன இடம் பெற்றுள்ளன. காலத்தால் தொன்மை பெற்றதான தொல்காப்பியத்தை இயற்றியவர் தொல்காப்பியர். இது ஒரு இலக்கண நூல் என்றாலும், சங்க கால அரசியல் சமூக பொருளாதார நிலைமைகளைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. எட்டுத் தொகை என்பது ஐங்குறுநூறு, நற்றிணை, அகநாணூறு, புறநாணூறு, குறுந்தொகை, களித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து என்ற எட்டு நூல்களின் தொகுப்பாகும். பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற பத்து நூல்கள் உள்ளன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் அகம், புறம் என்ற இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பதினெண்கீழ்கணக்கில் அறத்தையும், ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் பதினெட்டு நூல்கள் உள்ளன. அவற்றில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் குறிப்பிடத்தக்கதாகும். இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரமும், சீத்தலைச்சாத்தனார் இயற்றிய மணிமேகலையும் சங்க கால சமூகம் மற்றும் அரசியல் குறித்த தகவல்களைத் தருகின்றன.
பிற சான்றுகள்
சங்க இலக்கியங்களைத் தவிர கிரேக்க எழுத்தாளர்களான பிளினி, டாலமி, மெகஸ்தனிஸ், ஸ்ட்ராபோ ஆகியோர் தென்னிந்தியாவிற்கும் மேலை நாடுகளுக்கும் இடையே நிலவிய வர்த்தகத் தொடர்புகளை குறிப்பிட்டுள்ளனர். மௌரியப் பேரரசுக்கு தெற்கேயிருந்த சேர, சோழ, பாண்டிய ஆட்சியாளர்கள் பற்றி அசோகரது கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கலிங்கத்துக் காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டும் தமிழ்நாட்டு அரசு
களைப் பற்றி குறிப்பிடுகிறது. அரிக்கமேடு, பூம்புகார், கொடுமணல் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளும் தமிழர்களின் வாணிப நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றன.