சத்ய சோதனை - பக்கம் 67
மேற்கொண்டதால், படிப்பதற்கு எனக்கு நேரம் அதிகமாக இருந்ததோடு நான் பரீட்சையிலும் தேறினேன்.
இவ்விதம் வாழ்ந்து வந்ததால் என் வாழ்க்கை எந்த வகையிலும் இன்பமற்றதாயிற்று என்று வாசகர்கள் எண்ணிவிட வேண்டாம். இதற்கு மாறாக, இத்தகைய மாறுதல் என் அக வாழ்வையும், புற வாழ்வையும் ஒருமைப்படுத்தியது. அதோடு இந்த வாழ்க்கை, என் குடும்ப நிலைமைக்கும் ஒத்ததாக இருந்தது; முன்பு இருந்ததைவிட அதிகமான உண்மையோடும் கூடியதாயிற்று ; என் ஆன்மா அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.
17. உணவில் பரிசோதனைகள் |
மேலும் மேலும் ஆழ்ந்து, நான் ஆன்ம பரிசோதனை செய்யச் செய்ய, எனது அகவாழ்விலும் புறவாழ்விலும் அதிக மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்ற உணர்ச்சி என்னிடம் வளரலாயிற்று. என் செலவுகளிலும், வாழ்க்கை முறைகளிலும் மாறுதல்களைச் செய்தேன். இதற்கு முன்னாலேயே, என் உணவிலும் மாறுதலைச் செய்ய ஆரம்பித்திருந்தேன். சைவ உணவின் முக்கியத்துவத்தைக் குறித்து எழுதிய நூலாசிரியர்கள், அவ்விஷயத்தை வெகு நுட்பமாகப் பரிசீலனை செய்திருந்ததைக் கண்டேன். இவ்விஷயத்தின் மத, விஞ்ஞான, அனுபவ, வைத்திய அம்சங்களையெல்லாம் அவர்கள் ஆராய்ந்திருந்தனர். தருமக் கோட்பாட்டின் ரீதியில் அவர்கள் ஒரு முடிவுக்கும் வந்தனர். தாழ்வான உயிரினங்களிலும் மனிதன் உயர்வானவன் என்றால், தாழ்ந்த உயிரினங்களைத் தின்று மனிதன் உயிர் வாழ்வது என்பது அவ்வுயர்வின் நோக்கம் அல்ல. உயர்ந்த இனங்கள் தாழ்ந்த இனங்களைப் பாதுகாக்க வேண்டும். மனிதனுக்கு மனிதன் உதவிக் கொள்ளுவதைப் போல, அவ்விரு இனங்களும் தம்மிடையே பரஸ்பரம் உதவிக் கொள்ள வேண்டும் என்பது அந்நூலாசிரியர்கள் கண்ட முடிவு. மனிதன் உண்பது உயிர் வாழ்வதற்கேயன்றி, சுகானுபவத்திற்காக அல்ல என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தார்கள். இதை அனுசரித்து அவர்களில் சிலர், புலால் உண்ணாமல் இருப்பதோடு முட்டை, பால் சாப்பிடுவதும் கூடாது என்று சொன்னார்கள் ; அதன்படி சாப்பிடாமலும் இருந்தார்கள். மற்றும் சிலர், விஞ்ஞான ரீதியில் வேறு ஒரு முடிவுக்கும் வந்தனர். மனிதனின் உடலமைப்பை ஆராய்ந்தால், அவன் உணவைச் சமைத்துத் தின்னப் படைக்கப்பட்டவன் அல்ல என்பதும், பச்சையாகத் தின்று வாழவேண்டிய பிராணியே என்பதும் தெளிவாகின்றன என்றார்கள். மனிதன் ஆரம்பத்தில் தாய்ப்பாலை மட்டுமே அருந்த வேண்டும் ; பிறகு பல் முளைத்ததும் கடினமான உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்றும் இவர்கள் கருதினர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 65 | 66 | 67 | 68 | 69 | ... | 604 | 605 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனிதன், வேண்டும், அல்ல, வாழ்க்கை, அவர்கள் - Sathya Sothanai - சத்ய சோதனை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்