சத்ய சோதனை - பக்கம் 1
முதல் பாகம் |
1. பிறப்பும் தாய் தந்தையரும் |
காந்தி வம்சத்தினர் வைசிய குலத்தைச் சேர்ந்தவர்கள். ஆதியில் மளிகை வியாபாரிகளாக இருந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனால்,என் தாத்தா காலத்திலிருந்து மூன்று தலைமுறைகளாக கத்தியவாரிலுள்ள சுதேச சமஸ்தானங்கள் பலவற்றில் முதன் மந்திரிகளாக இருந்திருக்கின்றனர்.ஓதா காந்தி என்ற உத்தம சந்திர காந்தி,என்னுடைய பாட்டனார். தாம் கொண்ட கொள்கையில் மிக்க உறுதியுடையவராக அவர் இருந்திருக்க வேண்டும். அவர் போர்பந்தரில் திவானாக இருந்தார். ராஜாங்கச் சூழ்ச்சிகளினால் அவர் போர்பந்தரை விட்டுப்போய் ஜூனாகட்டில் அடைக்கலம் புக நேர்ந்தது. அங்கு அவர் நவாபுக்கு இடது கையினால் சலாம் செய்தார். மரியாதைக் குறைவான இச்செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அப்படிச் செய்ததற்குக் காரணம் கேட்டதற்கு, “என் வலக்கரம் முன்பே போர்பந்தருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுவிட்டது” என்றார் உத்தம சந்திர காந்தி.
ஓதா காந்திக்கு மனைவி இறந்துவிடவே இரண்டாம் தாரம் மணந்து கொண்டார். மூத்த மனைவிக்கு நான்கு குழந்தைகள்; இரண்டாம் மனைவிக்கு இரு பிள்ளைகள். ஓதா காந்தியின் இப்பிள்ளைகளெல்லாம் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகளல்ல என்று என் குழந்தைப் பிராயத்தில் நான் உணர்ந்ததுமில்லை; அறிந்ததுமில்லை. இந்த ஆறு சகோதரர்களில் ஐந்தாமவர் கரம்சந்திர காந்தி என்ற கபா காந்தி; ஆறாம் சகோதரர் துளசிதாஸ் காந்தி. இவ்விரு சகோதரர்களும் ஒருவர் பின் மற்றொருவராகப் போர்பந்தரில் பிரதம மந்திரிகளாக இருந்தனர். கபா காந்தியே என் தந்தை ராஜஸ்தானிக மன்றத்தில் இவர் ஓர் உறுப்பினர். அந்த மன்றம் இப்பொழுது இல்லை. ஆனால், அந்தக் காலத்தில் சமஸ்தானாதிபதிகளுக்கும் அவர்களுடைய இனத்தினருக்கும் இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து வைப்பதில் இந்த மன்றம் அதிகச் செல்வாக்குள்ள ஸ்தாபனமாக விளங்கியது. என் தந்தை ராஜ்கோட்டில் கொஞ்சகாலமும் பிறகு வாங்கானேரிலும் பிரதம மந்திரியாக இருந்தார். இறக்கும் போது ராஜ்கோட் சமஸ்தானத்திலிருந்து உபகாரச் சம்பளம் பெற்று வந்தார்.
ஒவ்வொரு தரமும் மனைவி இறக்க, கபா காந்தி நான்கு தாரங்களை மணந்தார். அவருடைய முதல் இரண்டு மனைவிகளுக்கும் இரு பெண் குழந்தைகள். அவருடைய கடைசி மனைவியான புத்லிபாய், ஒரு பெண்ணையும் மூன்று ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். நானே அதில் கடைசிப் பையன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காந்தி, அவர் - Sathya Sothanai - சத்ய சோதனை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்