சத்ய சோதனை - பக்கம் 519
வேலை நிறுத்தம் சம்பந்தமாக ஆலை முதலாளிகள் விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்து வந்ததற்கு மூலகாரணமாக இருந்தவர், சேத் அம்பாலால். அவருடைய தளராக உறுதியும், கபடமற்ற இயல்பும் அற்புதமானவை. அவை என் உள்ளத்தைக் கவர்ந்தன. அவரை எதிர்த்துப் போராடுவது என்பதே மகிழ்ச்சி அளிப்பதாகும். ஆகவே, அவரைத் தலைவராகக் கொண்ட எதிர்க்கட்சிக்கு என்னுடைய உண்ணாவிரதம் உண்டாக்கிய சங்கடமான நிலைமையைக் குறித்து நான் அதிக மனவேதனை அடைந்தேன். அவருடைய மனைவி சரளாதேவி, உடன் பிறந்த சகோதரியைப்போல் என்னிடம் அன்பு கொண்டிருந்தார். என்னுடைய செய்கையினால், அவர் மனவருத்தம் அடைந்ததைக் காண என்னால் சகிக்கவில்லை.
அனுசூயா பென்னும், நண்பர்கள் பலரும், தொழிலாளரும், முதல் நாள் என்னுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்கள். ஆனால், அவர்கள் மேற்கொண்டும் உண்ணாவிரதம் இருப்பதைக் கொஞ்சம் சிரமத்தின் பேரிலேயே நிறுத்தி விடும்படி செய்தேன்.
இதனாலெல்லாம் ஏற்பட்ட பலன், எல்லோரிடமும் நல்லெண்ணச் சூழ்நிலை ஏற்பட்டதாகும். ஆலை முதலாளிகளின் மனமும் இரங்கியது. சமரசத்திற்கான வழியைக்காண அவர்கள் முன் வந்தார்கள். அனுசூயா பென்னின் வீட்டில் அவர்களுடைய விவாதங்கள் நடந்தன. ஸ்ரீ அனந்த சங்கர துருவாவும் இதில் தலையிட்டார். முடிவில் அவரையே மத்தியஸ்தராகவும் நியமித்தனர். நான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து மூன்று நாட்களுக்குப் பிறகு வேலை நிறுத்தமும் முடிவுற்றது. இந்த நல்ல முடிவைக் கொண்டாடுவதற்காக ஆலை முதலாளிகள், தொழிலாளருக்கு மிட்டாய்கள் வழங்கினர். இவ்விதம் இருபத்தொரு நாட்கள் வேலை நிறுத்தம் நடந்த பிறகு சமரச முடிவு ஏற்பட்டது.
இந்தச் சமரச முடிவைக் கொண்டாடுவதற்காக நடந்த கூட்டத்திற்கு ஆலை முதலாளிகளும் கமிஷனரும் வந்திருந்தனர். இவ்வைபவத்தில் தொழிலாளருக்குப் புத்திமதி கூறிய கமிஷனர், ‘ஸ்ரீ காந்தி கூறும் புத்திமதியை அனுசரித்தே நீங்கள் எப்பொழுதும் நடந்துகொள்ள வேண்டும்” என்றார். இந்தச் சம்பவங்களெல்லாம் முடிந்தவுடனேயே இதே கனவானிடம் நான் ஒரு தகராறில் ஈடுபட வேண்டியதாயிற்று. ஆனால், நிலைமையோ இதற்கு மாறானது; அந்த நிலைமையை அனுசரித்து அவரும் மாறுதல் அடைந்து விட்டார். அப்பொழுது அவர், என் புத்திமதியைக் கேட்டு நடந்துவிட வேண்டாம் என்று கேடா பட்டாதார்களுக்கு எச்சரிக்கை செய்தார்!
ஒரு சம்பவத்தைக் குறிப்பிடாமல் நான் இந்த அத்தியாயத்தை முடித்துவிடக் கூடாது. அச்சம்பவம் எவ்வளவு வேடிக்கையானதோ
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 517 | 518 | 519 | 520 | 521 | ... | 604 | 605 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், உண்ணாவிரதம், வேலை - Sathya Sothanai - சத்ய சோதனை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்