சத்ய சோதனை - பக்கம் 100
ஸர் பிரோஸ்ஷா மேத்தா, கோர்ட்டுகளில் சிங்கம் போல் கர்ஜிப்பவர் என்று கேள்விப்பட்டிருந்தேன். அந்த வித்தையை இங்கிலாந்தில் அவர் எப்படிக் கற்றுக் கொண்டிருக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டேன். அவருடைய சட்டஞானத்தை, நான் என்றாவது அடைய முடியும் என்பதற்கே இடமில்லை. ஆனால், இந்தத் தொழிலில் என் ஜீவனத்திற்கு வேண்டியதாவது கிடைக்குமா என்பதே எனக்குச் சந்தேகமாக இருந்தது.
நான் சட்டம் படித்துக்கொண்டிருந்தபோது இந்தச் சந்தேகங்களும் கவலைகளுமே என்னைப் பிய்த்துக் கொண்டு இருந்தன. என்னுடைய இக்கஷ்டங்களை நண்பர்கள் சிலரிடம் கூறினேன். தாதாபாய் நௌரோஜியிடம் போய், அவர் யோசனையைக் கேட்க வேண்டும் என்று ஒரு நண்பர் எனக்குக் கூறினார். நான் இங்கிலாந்துக்கு சென்றபோது தாதாபாய்க்கும் ஓர் அறிமுகக் கடிதம் வைத்திருந்தேன் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். அதை வெகுகாலம் கழித்தே நான் பயன்படுத்திக் கொண்டேன். பேட்டி காண வேண்டும் என்று, அத்தகைய பெரியவரைக் கஷ்டப்படுத்துவதற்கு எனக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று எண்ணினேன். அவர் எங்காவது பேசப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டால், அக்கூட்டங்களுக்கு நான் போவேன். மண்டபத்தின் ஒரு மூலையில் இருந்துகொண்டு, அவர் பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு என் கண்களுக்கும் காதுகளுக்கும் கிடைத்த அவ்விருந்தோடு வீடு திரும்புவேன். மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ளுவதற்காக அவர் ஒரு சங்கத்தை ஆரம்பித்தார். அதன் கூட்டங்களுக்கு நான் போவேன். மாணவர்கள் விஷயத்தில் தாதாபாய் கொண்டிருந்த சிரத்தையையும், அவர்கள் அவரிடம் கொண்டிருந்த மரியாதையையும் கண்டு மகிழ்ந்தேன். நாளாவட்டத்தில் தைரியப்படுத்திக் கொண்டு என்னிடம் இருந்த அறிமுகக் கடிதத்தை அவரிடம் சமர்ப்பித்தேன்.
“நீர் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து என் புத்திமதியைக் கேட்கலாம்” என்று அவர் கூறினார். ஆனால், அவர் இவ்விதம் கூறியதைப் பயன்படுத்திக் கொண்டு, நான் ஒரு தரமும் அவரிடம் போகவில்லை. மிக முக்கியமான அவசியம் இருந்தாலன்றி அவருக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆகையால், எனக்குள்ள கஷ்டங்களைக் குறித்துத் தாதா பாயிடம் கூறுவது என்ற என் நண்பனின் யோசனையை ஏற்றுக் கொள்ள அச்சமயம் நான் துணியவில்லை. ஸ்ரீ பிரடரிக் பின்கட்டைச் சந்திக்குமாறு எனக்கு யோசனை சொன்னது இதே நண்பர்தானா, வேறு ஒருவரா என்பது எனக்கு நினைவு இல்லை. ஸ்ரீ பின்கட், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர், ஆனால், இந்திய மாணவர்களிடம் அவர் கொண்டிருந்த அன்போ புனிதமானது;
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 98 | 99 | 100 | 101 | 102 | ... | 604 | 605 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்று, நான், அவர், அவரிடம், கொண்டிருந்த, ஆனால், கொண்டு, எனக்கு - Sathya Sothanai - சத்ய சோதனை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்