முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » மன்னனுடன் நடந்த மோதல்-பட்டினத்தார் வரலாறு
அர்த்தமுள்ள இந்துமதம் - மன்னனுடன் நடந்த மோதல்-பட்டினத்தார் வரலாறு
உடனே மற்றொரு பாட்டைப் பாடினார்.
செப்பளவு கொங்கைச் சேயிழை
யாரைத் திரட்டி வந்து
முப்பொழு தென்றும் முகத்தோடு சேர்த்து
முத்தமிட்டுக்
கொப்புளத் தொட்டிக் குளத்தினில்
மூழ்கிக் குளிப்பதைப்போல்
அப்பனைப் பாடித்துதிப்பதில் ஏது ஆனந்தமே!
…. நான் அவரை அடக்க விரும்பவில்லை.
உடனே நான் ஒரு பாட்டுப் பாடினேன்:
பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசம் பிடித்தெனையே
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக்
கடிதடத்துப் புண்ணாங் குழியிடைத் தள்ளி,என்
போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா!
கச்சி யேகம்பனே!
…. அந்தப் பாட்டைக் கேட்டவர் சிரித்தார்;
பதிலுக்கு நானும் சிரித்தேன்.
`ஒக்கச் சிரித்தால் வெட்கமில்லை!’ என்றார்.
`மாதொருத்தி இல்லை என்றால் நாம் பிறப்பதில்லையே!’ என்றார்.
`யாம் பிறந்த அவ்விடத்தை யாம் கலப்பதில்லையே!’ என்று கீழ்க்கண்ட வெண்பாவை பாடினேன்:
சிற்றமும் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம்தேடி விட்டோமே நித்தம்
பிறந்தஇடம் தேடுதே பேதை மடநெஞ்சம்
கறந்தஇடம் நாடுதே கண்.
`சிற்றம்பலத்திற்கும் சிவகாமி உண்டு’ என்றார்.
`சிவன் காமம், மண் படைக்கும்; இவன் காமம், என் படைக்கும்?’ என்றேன்.
`ரத்த அணுச் செத்தவன்தான் தத்துவத்தில் விழுவான்!’ என்றார்.
`தத்துவத்தை மறந்தவன் தான் ரத்தத்தால் எரிவான்!’ என்றேன்.
`ஆண்மை இலான் தத்துவங்கள் அவனுக்கே பொருந்தும்’ என்றார்.
`ஆண்மையினைச் சோதித்த அனுபவமே ஞானம்’ என்றேன்.
`நாளைக்கோர் பெண் கிடைத்தால் நான் கூடச் சம்சாரி’ என்றார்.
`வேளைக்கொன்று கிடைத்தாலும் வெறுப்பவனே சந்நியாசி’ என்றேன்.
`நதிமூலம், ரிஷி மூலம் நான் கேட்டதுண்டு; இது எவர் மூலமோ? அறியேன்!’ என்றார்.
`வாதற்ற பெண்டாட்டி வாய்த்ததுண்டு; என்றாலும், காதற்ற ஊசிதான் காட்டியது மூலம்!’ என்றேன்.
`ஊசியினால் ஆசை ஓடிவிட்டால், மீண்டுமொரு பாசியினால் இந்தப் பந்தம் திரும்பாதோ!’ என்றார்.
`வேசியினால் கெட்டால் விரைவில் திரும்பிவிடும்; மெய்ஞான மெய்யழுத்தம் விண் வரையில் கூட வரும்’ என்றேன்.
`சுற்றம் தவறு, துணை தவறு; அதனால்தான் முற்றும் தவறென்று முனிவர் புலம்புகிறார்.’
`கற்றும் தெளியாதான் காண்பதெல்லாம் தவறென்பான்! முற்றும் தெரிந்த பின்னே முழுச்சுமையை நான் துறந்தேன்!’ என்றேன்.
`பத்தினியாய் ஓர் மனைவி பாராதான் ஞானி’ என்றார்.
`சித்தர்கள் கதையல்ல; திருவருள்சேர் ஞானி’ என்றேன்.
`ஒரு மனது நமக்கிருந்தால் யாருக்கும் ஒரு மாது!’ என்றார்.
`எந்த ஒரு பெண்ணுக்கும் இரண்டு மனம் உண்டு!’ என்றேன்.
`மொத்தத்தில் சொல்வது முட்டாள்கள் ஞானம்’ என்றார்.
`முட்டாள்தனமே முழு ஞானம்!’ என்றுரைத்தேன்.
`சக்தி கதை அதுதானா? தத்துவமும் அதுதானா?’ என்றார்.
`சக்தி ஒரு ஞானக் கலை; சம்சாரக் கலை அல்ல’ என்றேன்.
`அரசனது பத்தினிகள்…?’ என்றார்.
`அவர்களுக்குப் பல மனது…!’ என்றேன்.
அப்போது அவர் நேரடியாகவே திரும்பினார்.
`அறிந்து பேசு!’ என்றார்.
`ஆண்டவனைக் காணுமிடத்தும் நான் அறிந்துதான் பேசுவேன்’ என்றேன்.
`மன்னர் குலத்தை இகழ்ந்ததற்கு மரியாதையாக மன்னிப்புக் கேள்’ என்றார்.
`மகேசனிடம்கூட அதை நான் கேட்டதில்லை’ என்றேன்.
`என்னைப் பார்!’ என்றார்.
பார்த்தேன்;
பர்த்ருஹரி மகாராஜா!
`துறவிக்கு வேந்தன் துரும்பு’ என்றேன்.
`வேந்தன் சீறினால்…’ என்றார்.
`வேதத்தை என் செய்ய முடியும்…?’ என்றேன்.
(இப்போது அவர் பக்கத்தில் இருந்த பத்ரகிரியார் பயத்தோடு அவர் பாதத்தை தொட்டார்.)
`இல்லை, சுய வரலாற்றில் உண்மையை மறைப்பவன், தான் ஏன் பிறந்தேன் என்பதையே அறியாதவன்’ என்று சொல்லி மேலும் தொடர்ந்தார் பட்டினத்தார்:
`வீடு விட்டவனுக்கு ஓடு எதற்கு?’ என்று சொல்லிக் கொண்டே போய்விட்டார்.
உடனேயே என் சீடர்களெல்லாம் என்னைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு என்ன நடக்குமோ என்று அஞ்சினார்கள்.
`அரசன் சீறினால் மரணம் கிடைக்கிறது; ஆண்டவன் சீறினால் நரகம் கிடைக்கிறது. மரணத்திற்குப் பயப்படாதீர்கள்; நரகத்திற்குப் பயப்படுங்கள்!’ என்றேன்.
அவர்கள் நினைத்ததில் தவறில்லை; எதிர்பார்த்ததும் நடந்தது.
சிறிது நாழிகைக்கெல்லாம் அரண்மனைக் காவலர்கள் எங்களைச் சிறைப்படுத்தினார்கள்.
சிறிதளவும் எங்கள் உடலுக்குத் துன்பம் தராமல் சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றார்கள்.
எங்களைத் தனித்தனி அறைகளில் அடைத்துப் பூட்டினார்கள்.
அடுத்தது என்ன நடந்தது?
பத்ரகிரியாரே சொல்வார்.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்றார், என்றேன், நான், என்று, அவர் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்