முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » மன்னனுடன் நடந்த மோதல்-பட்டினத்தார் வரலாறு
அர்த்தமுள்ள இந்துமதம் - மன்னனுடன் நடந்த மோதல்-பட்டினத்தார் வரலாறு
யுக யுகாந்தரங்களுக்கு வாழப்போவது போல் தாய்க்கு மகளாகி, பின்பு மகனுக்குத் தாயாகி, `எல்லாம் இவ்வளவு தான்’ என்று சொல்லும்படி எரிந்து சம்பலாகி, யாக்கை நிலையாமையிலிருந்து தானே இறைவனின் நிலைத்த தன்மை தெரிகிறது.
இனி என் அன்னைக்கு இன்ப துன்பங்களில்லை. எனக்கு அந்த நிலை எப்பொழுதோ? ஆனால், தளதளவென்றிருக்கிற இந்த உடம்பு சாம்பலான பின்னால், மீண்டும் ஒரு வயிற்றில் பிறக்கும் துயரத்தை, இறைவா எனக்குத் தராதே என்று திருவிருப்பைச் சிவனை நான் வேண்டிக் கொண்டேன்.
மாதா வுடல் சலித்தாள்; வல்லினையேன் கால்சலித்தேன்
வேதாவுங் கைசலித்துவிட்டானேநாதா
இருப்பையூர் வாழ்சிவனே, இன்னுமோ ரன்னை
கருப்பையூர் வாராமற் கா!
நான் தெற்கே நகர்ந்தேன். சோழ நாட்டுத் திருப்பதிகளை எல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு இறுதியில் சிதம்பரம், சீர்காழி மார்க்கமாக திருவொற்றியூர் சென்று, அங்கே அமைதி பெற்று விடுவதென்று முடிவு கட்டினேன்.
சோழ நாட்டில் நான் சுற்றி வரும்போது என்னுடைய இறுதிக்காலம் திருவொற்றியூரில் இல்லை என்பதை முடிவு கட்டினேன். எங்கள் செல்வத்தின் மீதே கண்ணாக இருந்த என் தமக்கையின் கணவர், என்னைப் பின் தொடர்ந்து பல ஆட்களை அனுப்பி இருந்தார்.
ஒரு சத்திரத்தில் ஒருவர் என் பக்கத்திலேயே வந்து உட்கார்ந்தார். அங்கிருந்த பிற அன்னக் காவடியினருக்கு நான் சொன்னபோது, அவர்கள் அவனைத் துரத்தியடித்தார்கள்.
பொன்னுக்கு வேலை செய்கிறவர்களைவிட, அன்புக்குப் பணி செய்கிறவர்கள் ஆண்மை மிக்கவர்களாக இருப்பார்கள்.
திருக்காட்டுப் பள்ளியில் எனக்கு ஏராளமான சீடர்கள் சேர்ந்தார்கள். அவர்களிலே பலர் இளைஞர்கள். இளமையிலேயே லெளகீகத்தை வெறுத்தார்கள். ஆனால் உடல் வலுமிக்கவர்கள்.
அவர்களுடைய துணையோடு நான் சோழ நாட்டை விட்டு வெளியேற முயன்றேன். சிதம்பரம் எல்லை அருகே என் மைத்துனரின் அடியாட்கள் எங்களை வழி மறித்தார்கள். என்னுடன் இருந்த சீடர்கள் கடுமையாகப் போரிட்டார்கள். அவர்களைத் துரத்தி அடித்தார்கள்.
இனித் தெற்கே இருப்பதை விட வடக்கே சென்று உஜ்ஜைனி மாகாளியைத் தரிசிக்கலாம் என்று முடிவு கட்டினேன்.
உஜ்ஜைனி- ஊழித் தாண்டவத்தின் நாயகி, மாகாளி உலா வரும் பூமி. பரத கண்டம் முழுவதும் காளி வணக்கம் தோன்றுவதற்குக் காரணமான உஜ்ஜைனி.
சக்திதேவியின் ருத்திர வடிவம். தான் அழிப்பவள் மட்டுமின்றி அளிப்பவளும் என்பதைக் காட்டிக் கொண்டிருக்கும் உஜ்ஜைனி.
பல நூற்றாண்டுகளாகச் சோழ நாட்டு மக்கள் வடதிசையிலும், வடமேற்கிலும் சென்று கொண்டிருந்த நாடுகள் இரண்டு.
ஒன்று கலிங்கம்; இன்னொன்று உஜ்ஜைனி.
அகன்ற சாலைகள், கூடல் நகரத்தைப் போல் நான்கு மாடங்கள் இல்லை என்றாலும், இரண்டு மாட வீதிகள்.
வணிகர்களுக்கு கடமை (வரி) இல்லாத காரணத்தால் பாரத கண்டத்தின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வாணிப வண்டிகள்.
கடைகளில் குவிந்து கிடக்கும் பல்வேறு பொருட்களில் பாண்டிய நாட்டு முத்துக்கள், மலைநாட்டு யானைத்தந்தங்கள், அகில், நன்னாரி வேர்கள், சுக்கு, மிளகு வகைகள் இவற்றைக் காணலாம்.
நான்குக்கு ஒரு கடையிலாவது தமிழ் பேசுகிறவர்களைக் காணலாம்; அவர்களிடம் பழகிப் பழகிப் கொச்சைத் தமிழ் பேசும் உஜ்ஜைனி மக்களையும் காணலாம்.
அந்தக் கடைத் தெருவுக்கு மத்தியில் நாங்கள் நடந்து சென்றபோது எங்களைக் கண்டு பலர் சிரித்தார்கள்!
காரணம் கோவணாண்டிகளாக அங்கே சாலையில் நடப்பவர் யாருமில்லை.
`கோவணமே சுமை’ என்று கருதுவது ஒரு வகை ஞானம். தலை முதல் கால் வரை மூடி இருப்பது ஒரு வகை ஞானம்.
திடீரென்று, `விலகுங்கள், விலகுங்கள்’ என்ற ஒலி கேட்டது.
எல்லாரும் விலகினார்கள். நாங்கள் விலகவில்லை. யாருக்காக விலகுகிறார்கள் என்பதைப் பார்க்க விரும்பினோம்.
மகாராஜா, அரண்மனையில் இருந்து ஆற்றங்கரை வசந்த மாளிகைக்குப் போகிறாராம். விஷயம் அவ்வளவுதான்.
அரசரின் ரதம் வந்தது. காவலர்கள் பிடித்துத் தள்ள முயன்றார்கள். கண்டு கொண்டார் மகாராஜா.
என்னைப் பார்த்துக் கேட்டார்: `யார் நீ?’
நான் சொன்னேன்: `மனித உயிர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்கின்ற கேள்வி!’
`எங்கிருந்து வருகிறாய்?’
`கருப்பையில் இருந்து!’
`எங்கே போகிறாய்?’
`இடுகாட்டுக்கு!’
`இங்கென்ன வேலை?’
`இடையில் ஒரு நாடகம்!’
`தங்குவது எங்கே?’
`வானத்தின் கீழே!’
`ஒழுங்காகப் பதில் சொல், கேட்பது அரசன்!’
`பதில் சொல்பவனும் அவனே!’
…. மகாராஜா யோசித்தார்.
`திமிரா உனக்கு?’ என்று சேவகர்கள் நெருங்கினார்கள்.
`அவனை விட்டு விடுங்கள்’ என்று சொல்லிவிட்டு மகாராஜா போய்விட்டார்.
அவர் போனதும் கடைத் தெருவே என்னை ஆச்சரியமாகப் பார்த்தது. அங்கிருந்த தமிழர்கள் எல்லாம் எங்கள் கால்களிலேயே விழுந்தார்கள்.அவர்கள் என்னைப் பார்த்து `பட்டினத்துச் செட்டி’ என்று அழைத்தார்களே, தவிர யாரும் `திருவெண்காடர்’ என்று அழைக்கவில்லை. வெகு நாளைக்கு முன்பே உஜ்ஜைனிக்கு வந்துவிட்டவர்கள் அவர்கள்.
தங்கள் இல்லங்களில் தங்கும்படி வேண்டினார்கள்.
`இருபது சீடர்களோடு இல்லங்களிலே தங்க விரும்பவில்லை’ என்று கூறி காளி கோயில் விடுதிக்கே போய்விட்டோம்.
அங்கேயும் செட்டியார்கள் கட்டிய விடுதி ஒன்றிருந்தது.
காவிரிப் பூம்பட்டினத்துச் செட்டியார் ஒருவர் தான் அங்கே கணக்காயராகவும் இருந்தார். நாங்கள் பெரும் உபசாரத்தோடு அங்கே வரவேற்கப்பட்டோம்.
இரவு நேரம் நான் உட்கார்ந்து ஏடு படித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சத்திரத்தின் கதவுகள் எப்போதுமே மூடப்படுவதில்லை. ஆகையால், வங்கதேசத்து சந்நியாசி ஒருவர் அந்த நேரத்திலும் அங்கே வந்தார். காவி ஆடையால் உடம்பில் முழுக்கப் போர்த்தி இருந்தார். சோளிய பிராமணர்களைப் போல் முன்குடுமி வைத்திருந்தார். நெற்றியில் சந்தனக் கோடுகள் போட்டிருந்தார். இரண்டு கன்னத்திலும் குங்குமம் பூசி இருந்தார். புருவங்களுக்கு மேலே கரும்புள்ளி செம்புள்ளி குத்தி இருந்தார்.
எனக்குக் கொஞ்ச தூரத்தில் அவர் வந்து உட்கார்ந்தார்.
நான் சிவபுராணம் படிக்கும் போது அவர் சிருங்காரப் பாட்டுபாட ஆரம்பித்தார்.
மூடிய ஆடை முற்றக் களைந்து முகம் தழுவி
சூடிய கொங்கை சுற்றிப் பிடித்துச் சுடர் பரப்பி
வாடிய ரோமக் கால்களை மெல்ல வருடிவிட்டு
நாடிய இன்பம் மாந்தருக் குண்டு
நமக்கில்லையே!
…. எனக்குக் கோபம் வந்தது; திரும்பிப் பார்த்தேன்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்று, நான், உஜ்ஜைனி, அங்கே, இருந்தார், மகாராஜா, இருந்து, இரண்டு, காணலாம், நாங்கள், அவர், விட்டு, அவர்கள், கட்டினேன், முடிவு, என்னைப், போல், ஒருவர், சென்று - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்