முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஹென்றி ஃபோர்டு (கி.பி.1863 - கி.பி.1947)
ஹென்றி ஃபோர்டு (கி.பி.1863 - கி.பி.1947)

ஹென்றி ஃபோர்டு உலகப் புகழ்பெற்ற அமெரிக்கத் தொழிலதிபர். இன்றையத் தொழில் துறையில், பேரளவு உற்பத்தி உத்திகளைப் புகுத்தியதில் வேறெந்தத் தனிமனிதரையும் விட அதிகம் பொறுப்பாளியாக விளங்கினார். அவ்வாறு செய்ததன் மூலம், அவர், தம் நாடு முழுவதிலும் மட்டுமின்றி, இறுதியில் உலகமெங்கணும் வாழ்க்கைத் தரத்தை வெகுவாக உயர்த்தினார்.
ஹென்றி ஃபோர்டு, மிக்சிகன் மாநிலத்திலுள்ள டியர்போர்ன் அருகே பிறந்தார். இவர் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றதில்லை. ஒரு தொடக்கப் பள்ளியில் படித்தபின், டெட்ராய்டில் ஓர் எந்திரத் தொழிலாளியாகப் பயிறசிப் பெற்றார். பின்னர் ஒரு பழுது பார்ப்பவராகப் பணியாற்றினார். அதன் பின் ஒரு பொறியாளர் ஆனார். கார்ல் பென்ஸ், காட்லியப் டெயிம்லர் இருவரும் தனித்தனியே பணியாற்றி, 1855 -இல் தங்கள் முதல் உந்து ஊர்திகளைக் கண்டுபிடித்து, விற்பனை செய்யத் தொடங்கிய போது ஃபோர்டு இன்னும் சிறுவனாகவே இருந்தார்.
ஃபோர்டுக்கு விரைவிலேயே இந்தக் "குதிரை பூட்டாத ஊர்திகளில்" ஆர்வம் பிறந்தது. 1896-இல் தாமே வடிவமைத்து ஓர் உந்து ஊர்தியைத் தயாரித்தார். எனினும், இவருக்குத் திறமைகள் இருந்தும், இவரது முதல் இரு வாணிக முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஃபோர்டு தம் 40 ஆம் வயதில் இறந்து போயிருந்தால், அவர் ஒரு தோல்வியாளராகவே கருதப்பட்டிருப்பார்.
ஆனால், ஃபோர்டு மனமுடைந்து போகவில்லை. முயற்சி திருவினையாக்கும் என்பதை மனதில் இருத்தி 1903-இல் மீண்டும் முயன்றார். இந்த மூன்றாவது முயற்சி மூலமாகத்தான் அவரது ஃபோர்டு மோட்டார் நிறுமம் உதயமாகியது. இந்த நிறுவனத்தின் வாயிலாகவே அவர் பெருஞ்செல்வம் குவித்தார். பெரும்புகழ் ஈட்டினார். அழியா முக்கியத்துவம் பெற்றார். இந்நிறுவனத்தின் விரைவான வெற்றிக்கு ஃபோர்டின் அடிப்படைக் கோட்பாடே பெரும்பாலும் காரணம். இந்தக் கோட்பாட்டினை முந்திய விளம்பரம் ஒன்றில் அவர் உரைத்திருந்தார். அந்தக் கோட்பாடு வருமாறு:
........ வாணிகம், தொழில், குடும்பம் ஆகியவற்றின்
அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்புடையதாக ஓர்
ஊர்தியை - அதன் அடக்கம், எளிமை, பாதுகாப்பு,
எல்லா வகையான வசதிகள், அனைதிற்கும் மேலாக,
பெரும்பாலான உந்து ஊர்திகளுக்குக் கேட்கப்படும்
வானளாவிய விலைகளைக் கொடுக்க இயலாதிருக்கும்
பல்லாயிரம் மக்களுக்கு எட்டக்கூடிய வகையில் நியாயமான
விலை ஆகியவை அமைந்த, ஆடவர், பெண்டிர், குழந்தைகள்
அனைவரும் ஒரே மாதிரி விரும்பக் கூடிய ஓர் எந்திரத்தைத்
தயாரித்து, விற்பனைக்கும் கொண்டு வருதல்........
அவர் முதலில் தயாரித்த ஊர்தி மாதிரிகள் ஓரளவு சிறப்பாக இருந்த போதிலும், அவருடைய உயர்ந்த குறிக்கோள்கை எட்டக்கூடியனவாக இல்லை. ஆனால், அவர் 1908 -இல் தயாரித்த புகழ் பெற்ற "மாடல் -T" (model -T) என்ற ஊர்தி அவருடைய குறிக்கோள்களுக்கு மிக நெருக்கமாக வந்தத. இது அதுவரைத் தயாரான உந்து ஊர்திகள் அனைத்தையும் விட மிகச் சிறப்பாக அமைந்து, பெரும்புகழ் பெற்றது. இந்த மாதிரி ஊர்திகள் 1.5 கோடிக்கும் மேல் விற்பனையாயின.
தமது உந்து ஊர்திகளைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டுமானால், உற்பத்திச் செலவு மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என்பதை ஃபோர்டு உணர்ந்து கொண்டார். இதற்கு, அவர் தமது தொழிற்சாலையில், மிகவும் திறன் வாய்ந்த உற்பத்தி உத்திகள் பலவற்றைப் புகுத்தினார். இவற்றில், (அ) முழுமையாகப் பரிமாற்றம் செய்யக்கூடிய உறுப்புகளை பயன்படுத்துதல் (interchangeable parts), (ஆ) உழைப்பினை இயன்ற அளவுக்கு;g பகிர்ந்து விடுதல் (division of labour), (இ) உறுப்புகளை ஒருங்கிணைக்கும் பிரிவுகளை (assembly lines) உருவாக்குதல் ஆகியவை அடங்கும். இவையெல்லாம் தனிப்பட்ட தொழிலாளியின் திறம்பாட்டினை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை.
தொழிலாளிக்குத் தேவையான மூலப் பொருள்களையும், உறுப்புகளையும் கொண்டு வரும்படி அவனையே கட்டாயப்படுத்துவதும், அவன் வேலையைத் தொடங்கும் முன்பு, அவற்றைத் தரையிலிருந்து தூக்கும்படி செய்வதும், தொழிலாளியின் நேரத்தை விரயமாக்கும் செயல்கள் என ஃபோர்டு கருதினார். இந்த விரயத்தைத் தவிர்க்க வேண்டும் என விரும்பினார். இதற்காக, வேலையை, ஊர்திப் பட்டைகள் 9cpnveyor belts), சறுக்கிகள் (slides), மேல்நிலைத் தள்ளுவண்டிகள் ( overhead trolleys) மூலம் தொழிலாளியிடமே வரும்படி செய்தார். வேலைக்குரிய பொருள்கள், தொழிலாளியின் இடுப்பளவு உயரத்திற்கு வந்து சேர்ந்தன. இதனால் தொழிலாளி தன் பணியை மிக விரைவாகச் செய்ய முடிந்தது. மேலும் சிறப்பான, அதிகத் திறம்பட்ட உத்திகளைக் கண்டுபிடிப்பதற்காக, உற்பத்தி முறைகள் மிகக் கவனமாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டன. சிக்கலான பணிகள் பகுக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டன. இதனால் தேர்ச்சியற்ற தொலிலாளர்கள் (இவர்களில் சிலர் குறைந்த அறிவுத் திறனுடையவர்களாக, கல்வியறிவற்றவர்களாக, ஊனமுற்றவர்களாக இருக்கலாம்), நீண்ட காலம் பயிற்சி பெறாமலேயே இப்பணிகளைச் செய்ய முடிந்தது.
இந்த உத்திகளில் எதுவும் ஃபோர்டுக்குச் சொந்தமானதன்று. நூறாண்டுகளுக்கு முன்பே எலி விட்னி என்பவர் பரிமாற்றம் செய்யக்கூடிய திறம்பாட்டு வல்லுநர் ஃபிரடரிக் வின்ஸ்லோ டெய்லர் இந்த உத்திகள் அனைத்தையும் தரித்துத் தமது நூல்களில் எழுதியிருந்தார். பல சிறிய நிறுவனங்கள் தங்கள் செயல்முறைகளில் உறுப்புகளை ஒருங்கிணைக்கும் பிரிவுகளை ஏற்கெனவே ஏற்படுத்தியிருந்தன. ஆயினும், இந்த உத்திகளை முழுமனதோடு பயன்படுத்திய முதல் பெரிய உற்பத்தியாளர் ஃபோர்டே ஆவார்.
இந்த உத்திகளினால் வியக்கத்தக்க பலன்கள் விளைந்தன. 1908-இல் மிகவும் மலிவான "மாடல் -T" என்ற சீருந்து 825 டாலருக்கு விற்கப்பட்டது. 1913-இல் இதன் விலை 500 டாலருக்கு குறைந்தது. 1916இல் இதன் விலை 360 டாலருக்கு குறைக்கப்பட்டது. இறுதியில், 1926-இல் இதன் சில்லறை விலை 290 டாலருக்குக் குறைந்தது. விலைகள் குறைந்ததால், விற்பனை பன்மடங்கு பெருகியது. அமெரிக்க நாடே ஒரு "சக்கர நாடாக" மாறியது. ஃபோர்டு உலகிலேயே மிகப் பெரிய பணக்காரக் குடிமகன் ஆனார்.
ஃபோர்டின் தொழிலாளர்கள் அதிக உற்பத்தித் திறன் வாய்ந்தவர்களாக மாறியதால், அவர்களுக்கு ஃபோர்டு கூடுதல் சம்பளம் கொடுக்க முடிந்தது. 1914-இல் அவர் தமது தொழிற்சாலையில் குறைந்த அளவு ஊதியத்தை நாளொன்றுக்கு 5 டாலருக்கு உயர்த்தி தொழில் உலகத்தினருக்கு அதிர்ச்சியூட்டினார் .அந்தக் காலத்தில் இந்த ஊதியம் மிகமிக அதிகம். ஃபோர்டு நிறுமம் முன்பு கொடுத்து வந்த சாராசரி ஊதியத்தில் இது ஏறத்தாழ இருமடங்காகும். ஃபோர்டு வழங்கிய புதிய, உயர்ந்த அளவு ஊதியம் நாடெங்கும் பரவியதும், தொழிற்சாலைத் தொழிலாளர்கள் வறுமையிலிருந்து நடுத்தர வர்கக்கத்திர் நிலைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
ஃபோர்டின் புதிய உத்திகள் இன்னும் விரிவான தாக்கத்தை ஏற்படுத்தின. அவர் தமது பேரளவு உற்பத்தி உத்திகளை இரகசியமாக வைத்திருக்கவில்லை. மாறாக, அவற்றை விளம்பரப்படுத்த ஆர்வமாக இருந்தார். அவரது அமோக வெற்றியைக் கண்ட மற்ற உற்பத்தியாளர்கள், அவருடைய உற்பத்தி உத்திகளை அப்படியே அவர்களும் கையாண்டார்கள். இதனால், நாடு முழுவதிலும், இறுதியில் உலகெங்கும், உற்பத்தித் திறன் அபரிமிதமாக உயர்ந்தது.
நிதித்துறையில் வெற்றியடைந்ததும், ஃபோர்டு பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் தீவிர ஈடுபாடு கொள்ளலானார். எனினும், இந்நடவடிக்கைகளின் விளைவுகள் அவருக்கு ஏமாற்றமளித்திருக்க வேண்டும். முதலாம் உலகப் போரின் தொடக்க ஆண்டுகளில் அவர் சமரச முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், அவருடைய வேண்டுகோள்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே அமைந்தன. யூதர் - பினீஷியர் - அராபியர் - அசிரியர் ஆகியோர் உள்ளடங்கிய 'செமிட்டிக்' என்ற மனிதப் போரின எதிர்ப்பு இயக்கத்தில் 1920-களில் சேர்ந்து ஈடுபட்டார். ஆனால், இந்த முயற்சி அவருக்கு அவப்பெயரையே தேடித்தந்தது. இதனால், அவர் இந்த இயக்கத்திலிருந்து பகிரங்கமாக விலகிக் கொண்டார். 1930-களில் அவர், தமது நிறுவனத்தில் தொழிற்சங்கம் தொடங்குவதை எதிர்த்துப் போராடினார். அதனால் இவருடைய தொழிலாளர்கள் இவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். இதனால் நிறுவனத்திற்கும் ஒரு பயனும் ஏற்படவில்லை. எனவே, அவர் இந்தப் போராட்டத்தையும் கைவிட்டார்.
அவருடைய இந்தப் பிற்கால நடவடிக்கைகள் அவரது புகழுக்குச் சற்றே கேடு விளைவித்தபோதிலும், உலகின் மீது எந்தப் பாதிப்பையும் உண்டாக்கவில்லை. தொழில் உற்பத்தியைப் புரட்சிகரமாக மாற்றியமைத்து உற்பத்தித் திறனை அதிகரித்து, தொழிலாளர்களின் வருமானத்தைப் பெருக்கியதில் அவருடைய பங்குப் பணியின் முக்கியத்துவம் சிறிதும் குறைந்துவிடவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 91 | 92 | 93 | 94 | 95 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹென்றி ஃபோர்டு (கி.பி.1863 - கி.பி.1947), அவர், ஃபோர்டு, அவருடைய, தமது, உற்பத்தி, இதனால், உந்து, தொழில், டாலருக்கு, விலை, ", உற்பத்தித், தொழிலாளியின், உறுப்புகளை, முடிந்தது, இதன், உத்திகளை, தொழிலாளர்கள், உத்திகள், செய்ய, ஃபோர்டின், அவரது, முயற்சி, விற்பனை, கொண்டு, குறைந்த, வேண்டும், மிகவும், இறுதியில், திறன், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்