முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » மாக்ஸ் பிளாங்க் (கி.பி.1858 - கி.பி.1947)
மாக்ஸ் பிளாங்க் (கி.பி.1858 - கி.பி.1947)

"ஒளி உமிழ்கின்ற ஆற்றலானது (radiant energy) அதாவது ஒளி அலைகளின் ஆற்றல் ஒரு தொடர்ச்சியான ஓட்டமாக வெளிப்படவில்லை. மாறாக, சிறு சிறு கீற்றுகளை அல்லது பத்தைகளைக் கொண்டதாக இருக்கிறது." இந்தத் துணிவான கருதுகோளை ஜெர்மன் இயற்பியலறிஞர் மாக்ஸ் பிளாங்க் 1900 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிட்டார். அவரது இந்தக் கருதுகோள் அன்றைய அறிவியல் உலகத்துக்கு வியப்பதிர்ச்சியாக அமைந்தது. இந்த ஒளி அலைகளின் ஆற்றல் கீற்றுகளுக்குக் "குவாண்டா" (quanta) என்று பிளாங்க் பெயரிட்டார். இந்தக் கருதுகோள், ஒளி மற்றும் மின்காந்தவியல் பற்றிய பழைய கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாக இருந்தது. அதே சமயம் இந்தக் கருதுகோள்தான் "கதிரியக்க அலைவீச்சு கோட்பாடுகள்" (quantum theories) உருவாவதற்கு முதற்படியாக அமைந்தது. இந்தக் கதிரியக்க அலை வீச்சுக் கோட்பாடுகள் இன்று இயற்பியலை புரட்சிகரமாக மாற்றியமைத்துள்ளன. பருப் பொருளின் தன்மை "கதிர்வீச்சு" ஆகியவற்றை ஆழமாக அறிந்து கொள்ளவும் இக்கோட்பாடுகள் நமக்கு உதவின.
ஜெர்மனியில் கீல் என்னும் நகரில் 1858 ஆம் ஆண்டில் பிளாங்க் பிறந்தார். இவர் பெர்லின் மூனிக் பல்கலைக் கழகத்தில் பயின்று, தமது 21 ஆம் வயதில் மூனிக் பல்கலைக் கழகத்தில் இயற்பியலில் "டாக்டர்" பட்டம் பெற்றார். சிறுது காலம் மூனிக் பல்கலைக் கழகத்திலும், பிறகு கீல் பல்கலைக் கழகத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1880 ஆம் ஆண்டில் பெர்லின் பல்கலைக் கழகத்தில் இவர் பேராசிரியரானார். அங்கு 1928 ஆம் ஆண்டில் தமது, 70 ஆம் வயதில் ஓய்வு பெறும் வரையில் பணிபுரிந்தார்.
வேறு பல விஞ்ஞானிகளைப் போலவே, பிளாங்க்கும் "கரும்பொருள் கதிர்வீச்சு" (black body radiation) பற்றிய ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு கலப்பற்ற கரும்பொருளைச் சூடாக்கும்போது அதிலிருந்து வெளிப்படுத்தப்படும் மின்காந்த கதிர்வீச்சுக்குக் "கரும்பொருள் கதிர்வீச்சு" என்ற பெயர் அளிக்கப்பட்டிருந்தது. (ஒளியைச் சிறிதும் பிரதிபலிக்காமல் தன்மீது விழும் ஒளி அனைத்தையும் முழுமையாக ஈர்த்துக் கொள்கிற ஒரு பொருள் "கலப்பற்ற கரும்பொருள்" எனப்படும்). இந்தத் துறையில் பிளாங்க் தமது ஆராய்ச்சியை தொடங்குவதற்கு முன்னரே பரிசோதனை இயற்பியலறிஞர்கள், கலப்பற்ற கரும்பொருள் வெளிப்படுத்தப்படும் கதிர்வீச்சைக் கவனமாக அளவீடு செய்திருந்தனர். கரும்பொருள் கதிர்வீச்சினை துல்லியமாக விரித்துரைக்கக் கூடிய சிக்கனமானதொரு இயற்கணிதச் சூத்திரத்தை (algebraic formula) இவர் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு பிளாங்கின் முதலாவது சாதனையாகும். இன்று கோட்பாட்டு இயற்பியலில் பெருமளவில் பயன்படுத்தப்படும் இச்சூத்திரம், பரிசோதனை முடிவுகளைத் தெளிவாகச் சுருக்கிக் கூறியது. ஆனால், இதிலும் ஒரு சிக்கல் எழுந்தது. ஏற்றுக் கொள்ளப்பட்ட இயற்பியல் விதிகள் முற்றிலும் வேறுபட்டதொரு சூத்திரத்தை ஊகித்துக் கூறின.
இந்தச் சிக்கல் குறித்துப் பிளாங்க் ஆழ்ந்து சிந்தித்தார். இறுதியில் முற்றிலும் புதியதொரு கோட்பாட்டினை அவர் உருவாக்கினார். "ஒளியுமிழ் ஆற்றல் ஓர் அடிப்படை அலகின் துல்லியமான சடங்குகளில் மட்டுமே வெளிப்படுகிறது." என்பதே அந்தக் கோட்பாடாகும். அந்த அலகினைக் "குவான்டம்" என்று அழைத்தார். பிளாங்கின் கோட்பாட்டின்படி, ஒளியின் ஓர் அலகின் அளவானது, ஒளியின் அலைவெண்ணை அதாவது, அதன் வண்ணத்தைப் பொறுத்ததாக இருக்கிறது. மேலும், அது சடப்பொருளின் பரும அளவுக்குச் சரிசமவீத அளவில் இருக்கும். இந்தப் பரும அளவை பிளாங்க் சுருக்கமாக "h" என்று குறிப்பிட்டார். ஆனால், இன்று அந்த அளவு "பிளாங்கின் நிலை எண்" என அழைக்கப்படுகிறது. அப்போது நிலவிய இயற்பியல் கோட்பாடுகளுக்குப் பிளாங்கின் இந்தக் கருதுகோள் முற்றிலும் முரண்பட்டதாக இருந்தது. எனினும், இதனைப் பயன்படுத்தி கரும்பொருள் கதிர்வீச்சுக்குரிய துல்லியமா சூத்திரத்தின் சரிநுட்பமான கோட்பாடு வழியலகினைக் கண்டுபிடிக்க இவரால் முடிந்தது.
பிளாங்க்கின் கருதுகோள் மிகவும் புரட்சிகரமாக இருந்தது. பிளாங்க் மட்டும் நம்பகமான பழைமைப் பற்றுக் கொண்ட ஓர் இயற்பியல் விஞ்ஞானி என்று புகழ் பெறாமலிருந்தால் இவருடைய இந்தப் புரட்சிகரமான கருதுகோள், ஒரு பைத்தியக்காரக் கொள்கை எனத் தூக்கி எறியப்பட்டிருக்கும். இவரது கருதுகோள் மிகவும் விசித்திரமானதாகத் தோன்றினாலும், இந்தக் குறிப்பிட்ட நேர்வில் சரியான சூத்திரத்தைக் கண்டுபிடிப்பதற்கு இதுதான் வழிவகுத்தது.
முதலில், பிளாங்க் உட்படப் பெரும்பாலான இயற்பியலறிஞர்கள் பிளாங்கின் கருதுகோளை ஒரு வசதியான கணிதக் கற்பனை என்றே கருதினார்கள். எனினும், சில ஆண்டுகளுக்குப் பிறகு, கருப்பொருள் கதிர்வீச்சுக்கு மட்டுமின்றி, வேறுபல இயற்பியல் நிகழ்வுகளுக்கும் பிளாங்க்கின் கருதுகோளைப் பயன்படுத்த முடியும் எனபது கண்டறியப்பட்டது. ஐன்ஸ்டின் 1905 ஆம் ஆண்டில் ஒளியின் விளைவு பற்றி விளக்குவதற்கு இக்கருதுகோளைப் பயன்படுத்தினார். நீல்ஸ் போஹ்ர் 1913 ஆம் ஆண்டில் தமது அணுக்கட்டமைப்புக் கோட்பாட்டில் இதைப் பயன்படுத்திக் கொண்டார். 1918 ஆம் ஆண்டில் பிளாங்க்கிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட போது, அவரது கருதுகோள், அடிப்படையில் சரியானது என்பதும், இயற்பியில் கோட்பாட்டில் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் தெளிவாக உலகுக்கு மெய்ப்பித்துக் காட்டப்பட்டிருந்தது.
ஜெர்மன் நாஜிக்களின் கொள்கைகளைப் பிளாங்க் தீவிரமாக எதிர்த்தார். அதனால், ஹ’ட்லர் ஆட்சியின் போது பிளாங்கை பேராபத்து சூழ்ந்திருந்தது. ஹ’ட்லரைக் கொலை செய்வதற்கு அதிகாரிகள் மேற்கொண்ட சதியில் பங்கு கொண்டதற்காக இவரது இரண்டாவது மகன் தூக்கிலிடப்பட்டார். பிளாங்க் 1947 ஆம் ஆண்டில் தமது 89 ஆம் வயதில் காலமானார்.
கதிரியக்க அலை வீச்சு இயக்கவியல் கண்டுபிடிப்பு, 20 ஆம் நூற்றாண்டின் இறுதியின் அறிவியல் வளர்ச்சியில் மிக முக்கியமான சாதனையாகும். இது ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கைகளை விடவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிளாங்க்கின் நிலை எண் "h" இயற்பியல் கோட்பாட்டில் உயிர்நாடியாக விளங்குகிறது. மிக அடிப்படையான இரண்டு அல்லது மூன்று இயற்பியல் நிலை எண்களுள் இதுவும் ஒன்று என இப்பொழுது உணரப்பட்டுள்ளது. அணுக் கூட்டமைப்புக் கோட்பாட்டிலும், ஹெய்சின் பர்கின் உறுதியின்மைத் தத்துவத்திலும், கதிர்வீச்சுக் கோட்பாட்டிலும் வேறு பல அறிவியல் சூத்திரங்களிலும் பிளாங்க்கின் நிலை எண் இடம் பெற்றுள்ளது. பிளாங்க் முதலில் மதிப்பிட்ட இந்த நிலை எண்ணின் இலக்கிய மதிப்பு இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள இலக்க மதிப்பை விட 2% மட்டுமே குறைவு.
பிளாங்க் பொதுவாகக் கதிரியக்க அலைவீச்சு இயக்கவியலின் தந்தை எனக் கருதப்படுகிறார். இந்தக் கோட்பாட்டின் பிற்கால வளர்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை எனினும் அவருக்கு மிகத் தாழ்ந்த இடத்தை அளிப்பது தவறாகும். இத்துறையில் தொடக்கத்தில் இவரது கண்டுபிடிப்பு மிக முக்கியமான வழிகாட்டியாக அமைந்தது. முந்திய தவறான கோட்பாடுகளிலிருந்து இன்று நாம் பெற்றுள்ள செம்மையான கோட்பாட்டை உருவாக்குவதற்கு அவருக்குப் பிறகு வந்தவர்களுக்கு உறுதுணையாக இருந்ததும் இவரது கோட்பாடேயாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 90 | 91 | 92 | 93 | 94 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாக்ஸ் பிளாங்க் (கி.பி.1858 - கி.பி.1947), ", பிளாங்க், இந்தக், ஆண்டில், கருதுகோள், இயற்பியல், நிலை, தமது, கரும்பொருள், பிளாங்கின், பல்கலைக், இன்று, பிளாங்க்கின், முற்றிலும், கதிரியக்க, இவரது, ஒளியின், அறிவியல், கோட்பாட்டில், ஆற்றல், அமைந்தது, எனினும், கலப்பற்ற, மூனிக், இவர், கழகத்தில், வயதில், கதிர்வீச்சு", பிறகு, கண்டுபிடிப்பு, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்