முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » மென்சியஸ் (கி.மு.371 - கி.மு.289)
மென்சியஸ் (கி.மு.371 - கி.மு.289)

கன்ஃபூசியசுக்குப் பின் வந்தவருள் மிகவும் முக்கியமானவர் சீனத் தத்துவஞானியான மென்சியஸ் ஆவார். "புக் ஆஃப் மென்சியஸ்" எனும் நூலில் காணப்படும் அவருடைய போதனைகள் பல நூற்றாண்டுகளாக சீனாவில் போற்றப்பட்டு வந்தன. அவரை மக்கள் "இரண்டாம் ஞானி" என்றனர். அதாவது அறிவில் அவர் கன்ஃபூசியசுக்குப் பிறகு ஏறக்குறைய 200 ஆண்டுகள் கழித்துத் தோன்றினார்.
இன்று சீனாவில் ஷாண்டுங் மாநிலமாக இருக்கும் த்சூ எனும் சிறு பகுதியில் கி.மு. 371-இல் மென்சியஸ் பிறந்தார். அவர் பிறந்த காலம் சூ வம்சத்தின் இறுதிக் காலம். அதைச் சீனர் "போர் புரியும் அரசுகளின் காலம்" என்றனர். ஏனெனில், அப்போது சீனா ஒன்றுபட்ட அரசாக இல்லை. மென்சியஸ் கன்ஃபூசியசின் மரபிலே வளர்ந்து, கன்ஃபூசிய கொள்கைகளையும், இலட்சியங்களையும் ஆர்வமுடன் ஆதரித்து வந்தாரெனினும், நாளடைவில் மக்கள் அவரை ஒரு தனிப்பட்ட அறிஞராகவும் தத்துவஞானியாகவும் மதித்தனர்.
மென்சியஸ் வயது வந்த பிறகு பெரும்பாலும் சீனா முழுவதும் பயணம் சென்று பல்வேறு அரசர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தார். பல மன்னர்கள் மதிப்புடன் அவருடைய சொற்கேட்டு வந்தனர். சிறிது காலம் அவர் ஷி அரசில் அதிகாரியாக இருந்தார். ஆனால், பொதுவாக அவர் நிலையான, கொள்கை வகுக்கும் எந்த அரசாங்கப் பதவியிலும் இருந்ததில்லை. கி.மு. 312-இல் அவர் 69 ஆம் வயதாக இருக்கும்போது, த்சூ எனும் தம் சொந்தப் பகுதிக்கு திரும்பி வந்தார். இறக்கும் வரை அங்கேயே இருந்தார். அவர் எந்த ஆண்டில் இறந்தாரெனத் திட்டாகத் தெரியவில்லை. ஒரு வேளை கி.மு. 289- இல் இறந்திருக்கலாம்.
மென்சியஸ் வாழ்நாளில் அவருக்குப் பல சீடர்கள் இருந்தனர். ஆயினும் அவருடைய முக்கிய கொள்கைகள் அடங்கியுள்ள "புக் ஆஃப் மென்சியஸ்" எனும் நூலே சீன வரலாற்றில் புதிய விளைவுகளை ஏற்படுத்தியது. அந்நூலில் அவருடைய சீடர்கள் ஓரிரு மாற்றங்களைச் செய்திருக்கக்கூடுமெனினும், அது மென்சியசின் சொந்தக் கருத்துக்களையே காட்டுகிறதென்பதில் ஐயமில்லை.
"புக் ஆஃப் மென்சியஸ்" எனும் நூல் இலட்சிய நோக்குடையது. நன்மையே எதிர்பார்க்கும் கொள்கையுடையது. அது மனிதன் இயல்பாகவே நல்லவன் என்று மென்சியஸ் எண்ணிய உறுதியான நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றனது. பலவகைகளில் அவருடைய அரசியல் கருத்துகள் கன்ஃபூசியசின் கருத்துகள் போன்றவை. குறிப்பாக, அரசன் அறநெறி வழி ஆள வேண்டுமேயன்றி வன்முறையால் ஆளக்கூடாது என்று மென்சியஸ் உறுதியாக நம்பினார். ஆயினும், மென்சியஸ், கன்ஃபூசியசை விட மிகுதியாக "மக்களின் மனிதனாக" இருந்தார். "மக்கள் பார்ப்பது போல் விண்ணகமும் பார்க்கின்றது; மக்கள் கேட்பது போலே விண்ணகமும் கேட்கின்றது" என்பது அவருடைய புகழ்மிகு கூற்று.
அரசின் முக்கிய கூற்று அரசனல்ல என்று மென்சியஸ் வலியுறுத்தினார். மக்களின் நலம் பேணுதல் மன்னனின் கடமை; குறிப்பாக அவர்களுக்கு அறநெறியில் வழிகாட்டி பிழைப்புக்குப் போதிய வசதிகளைச் செய்ய வேண்டும். மென்சியஸ் கீழ்கண்ட அரசாங்கக் கொள்கைகளைப் பரிந்துரைத்தார். தடையில்லா வாணிகம் பளுவில்லா வரிகள், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், நாட்டின் ஆக்கத்தை இப்போதிருப்பதைவிட இன்னும் அதிக சமமாகப் பகிர்தல், முடிதியோர், நலிந்தோர் ஆகியோரின் நலனை அரசாங்கம் பேணுதல், அரசன் தன் அதிகாகரத்தை விண்ணுலகிலிருந்து பெறுவதாக மென்சியஸ் நம்பினார். மேலும் மக்களின் நலத்தைப் புறக்கணிக்கும் மன்னன் "விண்ணுலகம் வழங்கும் உரிமை"யை இழந்து விடுவான் என்றும், ஆகவே ஆட்சியிலிருந்து வீழ்த்தப்படுவான் என்றும் அவர் கருதினார். இக்கூற்றின் பிற்பகுதி, முற்பகுதியை ஒதுக்கித் தள்ளி விடுவதால் மென்சியஸ் (ஜான் லாக்கின் காலத்திற்கு முன்பே) மக்கள் கொடுங்கோலார்க்கு எதிராகப் புரட்சி செய்ய உரிமை பெற்றுள்ளனர் என்பதை வலியுறுத்தினார். இக்கருத்தை பொதுவாகச் சீனர்கள் ஏற்றுக் கொண்டனர்.
பொதுவாக வரலாறு முழுவதும் மென்சியஸ் எடுத்துரைத்த கொள்கைகளை மக்கள் விரும்பினார்களேயொழிய மன்னர்கள் விரும்பவில்லை. ஆகவே, மென்சியசின் திட்டங்களை அக்காலச் சீன மன்னர்கள் ஏற்கவில்லை என்பது வியப்பன்று. ஆயினும், நாளடைவில் அவருடைய கருத்துகளை கன்பூஃசிய அறிஞல்களும், சீன அறிஞர்களும் விரும்பி ஏற்றுக் கொண்டனர். 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் புதிய கன்ஃபூசியத் தத்துவம் எழவே, மென்சியசின் புகழ் சீனாவில் உயர் புகழாகப் பரவியது.
மேல் நாடுகளில் மென்சியசின் கொள்கைகள் எத்தகைய விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. அவர் சீன மொழியில் எழுதியது இதற்கு ஒரு காரணமாகும். "புக் ஆஃப் மென்சியஸ்" எழுதப்பெற்ற அதே காலத்தில் சீனாவில் லாவோ தசு எழுதிய "தாவோ தே சிங்" எனும் நூல் ஐரோப்பிய மொழிகளில் பலமுறை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அந்நூலிலுள்ள கருத்துகள் பலரின் ஆர்வத்தைக் கிளறியதே அதற்கு காரணம். ஆனால்,
"புக் ஆஃப் மென்சியஸ்" மேல் நாட்டினருக்குத் தனித்தன்மை வாய்ந்ததாகவோ, கருத்தாழமுள்ளதாகவோ தோன்றவில்லை.
முதியோர், நலிந்தோர் ஆகியோரின் நலன்களை அரசாங்கம் பேண வேண்டும் எனும் கருத்து கவர்ச்சியாக இருக்கலாம்; அது போலவே குறைந்த வரிகள் விதிக்க வேண்டும் எனும் கருத்தும் கவர்ச்சிகரமாக இருக்கும். ஆயினும், இவ்விரு கொள்கைகளையும் அறிவித்து, அவற்றைத் திட்டவட்டமாக விளக்காத எந்த அமெரிக்க அரசியல்வாதியையும் முற்போக்குவாதிகளும், பிற்போக்குவாதிகளும் நம்ப மாட்டார்கள் எனலாம். இதுபோலவே மென்சியசும் செல்வத்தைச் சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டுமெனக் கூறுவதுடன், தடையில்லா வாணிகத்தையும், குறைந்த வரி விதிப்பையும் ஆதரிக்கிறார். இவ்விரண்டிற்குமிடையே எழக்கூடிய முரண்பாடுகளை அவர் கருதவேயில்லை. இவ்வாறு கூறுவது மென்சியசைத் தவறாக குறை கூறுவதாகும். அவர் அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிடவில்லை. அவர் ஒரு தத்துவ அறிஞர்; சில பொதுவான தகுதியான (ஓரளவு முரணான) கொள்கைகளை வழங்கினார்; அவற்றிற்கிடையே எழக்கூடிய முரண்பாடுகளை எவ்வாறு தீர்ப்பது என்று தெளிவாகச் சொல்லாதிருக்கக்கூடும். ஆனால், மென்சியசை விட தம் கருத்துகளை திட்டவட்டமாகக் கூறிய மாக்கியவெல்லி போன்ற தத்துவ அறிஞர்கள் மக்களின் சிந்தனையைப் பெரிதும் பாதித்துள்ளனர்.
ஆயினும், மென்சியசின் கருத்துகள் சீனர்களின் சிந்தனையைப் பெரிதும் பாதித்தன. கிறிஸ்துவச் சமயத்தில் புனித பவுல் பெறும் சிறப்பிடம் போல் கன்ஃபூசியக் கொள்கையில் மென்சியஸ் அவ்வளவு சிறப்பிடம் பெறவில்லை என்பது உண்மைதான். (மென்சியஸ், பவுலைப் போல் மக்களின் மனதை மாற்றும் திறமை பெறவில்லை) ஆயினும், அவருடைய கருத்துகள் பெரும் விளைவுளை ஏற்படுத்தின என்பதில் ஐயமில்லை. உலக மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் வாழும் நிலப்பகுகதி முழுவதும் அவருடை கருத்துகளை ஏறக்குறைய 22 நூற்றாண்டுகளாக மக்கள் படித்து வருகின்றனர். ஒரு சில தத்துவ அறிஞர்களே இத்துணை செல்வாக்குப் பெற்றுள்ளனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மென்சியஸ் (கி.மு.371 - கி.மு.289), மென்சியஸ், அவர், ", எனும், மக்கள், அவருடைய, ஆயினும், ஆஃப், கருத்துகள், புக், மக்களின், மென்சியஸ்", மென்சியசின், சீனாவில், தத்துவ, போல், கருத்துகளை, வேண்டும், என்பது, முழுவதும், காலம், மன்னர்கள், இருந்தார், எந்த, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்