பதிப்புரை - பதினெண் புராணங்கள்
பாரத தேசத்தின் பழம் பெருமையைப் பாருக்குப் பறை சாற்ற வந்தவை இரண்டு இதிகாசங்கள். இவை பிறக்க மூல கர்த்தாவாய் அமைந்தவை புராணங்கள். இப்புராணங்களில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை பதினெண் புராணங்கள். இப்புராணங்கள் வேதகாலத்திற்கும் வெகுகாலம் முற்பட்டவை என்று இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இப் புராணங்கள் பெரும்பாலும் வடமொழியிலேயே வழிவழியாக வாய்மொழியாக வழங்கப்பட்டு வந்துள்ளன. இவர்தான் நூலாசிரியர் என்று அறியப்படவில்லை.
வடமொழியிலிருந்த இந்தப் புராணங்களைத் தமிழ் மக்களுக்குத் தரவேண்டுமென்னும் பேரவா கொண்ட பேராசிரியர் அ. ச. ஞா. அவர்கள் தமக்கே உரிய இலக்கிய நயத்தோடும் சொல்லாட்சித் திறத்தோடும் நூலைத் தமிழில் படைத்துத் தந்துள்ளமையை அவர்தம் முன்னுரை நமக்கு நன்கு விளக்குகிறது.
மும்மூர்த்திகள் என்று இந்து சமயத்தினரால் வணங்கப் பெறும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அளப்பரிய ஆற்றல்களைப் பற்றிப் பேசும் பதினெண் புராணங்கள் இந்நூலில் இடம் பெறுகின்றன.
வளமான பாரதத்தை உருவாக்கும் வேளையில், நலம் தரும் நற்சிந்தையோடும், தெய்வ பக்தியோடும், தேச பக்தியோடும், சத்திய நிலையோடும் இன்றைய இளைஞர்கள் திகழ வேண்டும் என்னும் எண்ணத்தைத் தம் வாழ்நாள் முழுக்கக் கொண்டிருந்த தமிழாசான் அ. ச. ஞா. அவர்கள், அவ்வெண்ணத்தை இலக்கிய - ஆன்மிகச் சொற்பொழிவுக் கூட்டங்கள் வாயிலாகவும், பல நூல்களின் வாயிலாகவும் வெளிப்படுத்தி வந்தார்கள்.
'வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்” என்று அறிவியல் புரட்சியில் இந்தியர் இறங்குவர் என்பதற்குக் கட்டியம் கூறிய மகாகவி பாரதியார், ஆன்மிக எழுச்சியிலும் ஞானம் தேடும் முயற்சியிலும் இந்தியர் முதன்மை பெற்று உலகத்தார்க்கு வழிகாட்டியாக விளங்குவர் என்ற தீர்க்க தரிசனத்தையும் வெளிப்படுத்தினார். அதனை பேராசிரியர், அமரர் அ. ச. ஞா. அவர்கள் தம் வாழ்நாளில் மெய்ப்பித்துப் பெரும்புகழ் ஈட்டிவிட்டார்கள்.
தமிழ்ப் பெரியாரான அ. ச. ஞா. அவர்கள் தமிழ்ப் பெருங்குடி மக்களை விட்டுப் பிரிந்துவிட்டாலும், அவர்கள் ஆக்கித் தந்துள்ள ஆன்மிக - இலக்கிய நூல்களின் மூலமாக தமிழர் நெஞ்சத்தை விட்டு நீங்காமல் இருக்கின்றார்கள். அவர்கள் தொகுத்துத் தந்துள்ள பதினெண் புராணங்கள் என்னும் அரிய ஆன்மிக நூலை கங்கை புத்தக நிலையம் வெளியிட்டுப் பெருமை கொள்கிறது.
அமரர் அ. ச. ஞா. அவர்களின் மகளார் திருமதி ஞா. மீரா அவர்களுக்கு கங்கை புத்தக நிலையம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்நூலுக்கு நல்ல முறையில் கணினி ஒளிஅச்சு செய்து தந்த எஸ்.பி.எம். கிராபிக்ஸ் பெ. மணி அவர்களுக்கும் எங்கள் நன்றி.
- கங்கை புத்தக நிலையத்தார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிப்புரை - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, புராணங்கள், இலக்கிய, புத்தக, பதினெண், கங்கை, ஆன்மிக, நிலையம், பேராசிரியர்