7. மார்க்கண்டேய புராணம் - பதினெண் புராணங்கள்
மார்க்கண்டேய புராணம். பதினெண் புராண வரிசையில் ஏழாவதாக உள்ளது. அது 9,000 பாடல் களைக் கொண்டது என்று சொல்லப்பட்டிருப்பினும், இன்று கிடைப்பது 6,900 பாடல்களே. மிகப் பழைய முதலாவதாக வைத்து எண்ணாமல், கிருத்திகையை ஒன்று என்று வைத்து எண்ணுகின்ற பழங்காலத்தைச் சேர்ந்தது. பல முக்கியமான பகுதிகளைக் கொண்டது இப்புராணம். இன்று பிரபலமாகச் செய்யப்படுகின்ற சண்டி ஹோமத்திற்கு அடிப்படையாக உள்ள துர்க்கா சப்தசதி என்ற பெயருள்ள துர்க்கையைப் போற்றும் 700 பாடல்கள் 81ஆம் அதிகாரத்தில் இருந்து 93ஆம் அதிகாரம் வரை உள்ளன. துர்க்கா சப்தசதி மிகவும் சக்தி வாய்ந்த ஒர் அறிவுரையைத் தருகின்றது. இந்த மாபெரும் சக்தியைப் பணிவு, அன்பு, வணக்கம் இவற்றோடு கூடிய மனத்துடன் வழிபட்டால், எத்தகைய துன்பத்தையும் எதிர்ப்பையும் வெல்லும் சக்தியைத் தருகின்றது. அஞ்ஞானம், ஆணவம் முதலியவற்றால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் அழிக்கப்படுகிறார்கள். கருணையே வடிவான அந்த மாபெரும் சக்தி நல்லோரைக் காக்கத் தயாராக இருக்கின்றது. 'யாதேவி! சர்வபூதேவி. என்று தொடங்கும் பாடலில், "எல்லா மனிதருடைய இதயக் கமலங்களில் தங்கி இருப்பவளான அந்த மகாசக்தியை நான் வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்” என்ற ஒரு நம்பிக்கையோடு கூடிய பெரும் சக்தியை நமக்கு அளிக்கின்றது. சப்தசதி.
மனிதனிடத்தில் பேராற்றல் உள்ளே மறைந்து நிற்கின்றது. உலக நன்மைக்காக ஒருவன் அதனைப் பயன்படுத்த விரும்பினால் அது வெளிவந்து தொழிற்படும். ஒருவேளை அந்த முயற்சி பயன் தரவில்லையானால், பெண்சக்தி அதனை வெளிப்படுத்தி அந்தப் பயனைப் பெறுமாறு செய்கிறது. இந்தச் செய்தியை ஒர் உருவகமாகத் தருவதுதான் துர்க்கா சப்தசதி. ஆணுக்குப் பெண் எவ்விதத்திலும் குறைந்தவள் அல்லள் என்பதையும், மிக முக்கியமான நேரத்தில் ஆண் சக்தி தொழிற்பட முடியாமல் திகைக்கும் பொழுது, பெண்சக்தி போரில்கூட வெளிப்பட்டு ஆண் சக்திக்கு உதவி புரியும் என்ற மாபெரும் தத்துவத்தின் உருவகக் கதையே துர்க்கா சப்தசதி ஆகும்.
துர்க்கையைப் பற்றி உள்ளது என்பதால் சாக்தர்கள் மட்டும் இதனைப் பாராயணம் செய்கிறார்கள் என்று சொல்லமுடியாது. சைவர்கள், வைணவர்கள்கூட துர்க்கா சப்தசதியைப் பாராயணமாகச் செய்வது, ஹோமமாகச் செய்வது என்ற பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். தசரா பண்டிகைக்கு முன்னர் 9 நாட்கள் துர்க்கையை வணங்கும் பழக்கம் இருந்து வந்தது. இப்புராணம் 137 அதிகாரங்களை உடையது.
ஜெய்மினியும் மார்க்கண்டேயனும்
மிகப் பெரிய முனிவராகிய ஜெய்மினி ஒருமுறை மார்க்கண்டேயரைப் பார்க்க வந்தார். வந்தவர், “முனிவரே! எனக்கு அடிப்படையில் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள விடை கூறக் கூடியவர் தாங்கள் ஒருவரே. விஷ்ணு எங்கும் நிறைந்தவர். வடிவமும் உருவமும் அற்றவர். அப்படி இருக்க, அவர் ஏன் பூலோகத்தில் மனிதனாக கிருஷ்ணர் என்ற பெயருடன் பிறக்க வேண்டும்? பாண்டவர்கள் ஐவரையும் திரெளபதி ஏன் மணக்க வேண்டும்? அவருடைய பிள்ளைகளாகிய இளம் பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் ஒரே நேரத்தில் ஏன் கொல்லப்படவேண்டும்? இவைகளுக்கு விடைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார். அதற்கு விடையாக மார்க்கண்டேயர் கூறியதாவது: "முனிவரே! பிரார்த்தனை செய்யவே எனக்கு நேரம் போதவில்லை. உம்முடைய கேள்விகளுக்கு விடை அளிக்க எனக்கு அவகாசம் கிடையாது. இவ்வினாக்களுக்கு விடை கூறக் கூடியவர்கள் யார் என்று மட்டும் கூறுகிறேன். அவர்களிடம் சென்று உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். விந்தியமலையில் நான்கு பறவைகள் வாழ்கின்றன. அவை பிங்கக்ஷா, விவோதா, சுபுத்ரா, சுமகா என்ற பெயர்களால் அழைக்கப் படுகின்றன. அவை துரோணரின் பிள்ளைகள். அங்கே செல்லலாம்." இப்படிக் கூறியவுடன், ஜெய்மினி இடை மறித்து, “முனிவரே! பறவைகள் வேதம், சாஸ்திரம் இவற்றை நன்கு அறிந்துள்ளன என்கிறீர்கள். பறவைகள் எப்படி இவற்றை அறிய முடியும்? பறவைகள் எப்படிப் பேச முடியும்? அவற்றின் தந்தை என்று சொல்லப்படும் துரோணர் யார்?’ என்று கேட்டார். மார்க்கண்டேயர் கூறிய விடை வருமாறு:
தேடல் தொடர்பான தகவல்கள்:
7. மார்க்கண்டேய புராணம் - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, துர்க்கா, சப்தசதி, விடை, பறவைகள், எனக்கு, ", மாபெரும், சக்தி, இப்புராணம், அந்த