மருத்துவப் பேட்டி - காதை குடையாதீங்க..!
- என். ஜவஹர் Ms.,FRCS.,
* பொதுவாக காதில் என்ன மாதிரியான பிரச்சினைகள் தோன்ற வாய்ப்புள்ளது?
பிறவி காது கேளாமை,காதில் சீழ் வருவது, காதில் வலி, கேட்டுக்கொண்டிருந்த காது தனது பணிக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற பாதிப்பு காதில் வரலாம். காதை ஒரு அற்புதமாக நுணுக்கமான வகையில் இயற்கை படைத்துள்ளது. காதினை வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று 3 பிரிவாக பிரிக்கலாம். இந்த இடத்தில் மிக முக்கியமான ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். உடம்பிற்கு கண் அவசியமானது தான். ஆனால் மனிதர்கள் கண்ணிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவேணும் கூட காதிற்கு கொடுப்பதில்லை.
* காதில் சீழ் பாதிப்பு வருவதற்கு என்ன காரணம்? அதற்கு என்ன சிகிச்சை?
சிறுவயதில் ஏற்பட்ட கிருமி தொற்றினை கண்டு கொள்ளாமல் இருப்பது நாளடைவில் முற்றிப் போய் காதில் சீழாக மாறலாம். காதுப்பகுதியில் அடிபட்டாலும் காதில் சீழ் வைக்கலாம். இளம் பிராயத்தில் வருகின்ற காது வலியை அலட்சியப் படுத்துவதனாலும் காதில் சீழ் வைக்கலாம். மூக்கில் கிருமி தொற்றி அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டால் அது பின்னாளில் காதில் சீழாக மாறலாம். காதிற்கும் மூக்கிற்கும் இடையே ஈஸ்டீஸின் குழாய் ஒன்று உள்ளது. அதன் மூலம் மூக்கடைப்பு மற்றும் கிருமி தொற்று காதிற்கு பரவி காதில் சீழ் தோன்றி விடலாம்.
இதற்கு எடுத்தவுடனே சிகிச்சை செய்யமாட்டோம். முதலில் காதில் எந்த பகுதியில் சீழ் வைத்துள்ளது? காதின் கேட்கும் திறன் எப்படி உள்ளது? போன்றவற்றை சோதனை மூலம் கண்டறிவோம். காதில் சிலருக்கு எலும்பு அரிப்பு நோய் (Chole steatoma) வரலாம். இதனாலும் காதில் சீழ் ஏற்படலாம். எலும்பு அரிப்பு மூளைக்கும்கூட பரவிட வாய்ப்புள்ளது. இப்படி பரவியவர்கள் தலைவலி, காதுவலி, காதில் சீழ் என்று வருவார்கள். எனவேதான் நேரடியான சிகிச்சை செய்யாமல் சோதனைகளை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. சாதாரணமாக காதில் சென்ரல் பர்ப்பிரேசன் காரணமாக காதில் சீழ் என்றால் அதற்கு மருந்து மாத்திரை தந்து சிகிச்சை அளிப்போம். எலும்பு அரிப்பு ஏற்பட்டிருந்தால் அரிக்கப்பட்ட எலும்பை எடுத்துவிட்டு புதிய எலும்பு மற்றும் புதிய ஜவ்வு பொருத்தும் அறுவை சிகிச்சை செய்வோம். அந்த சிகிச்சைக்கு (Tympano mas toidectomy) என்றுபெயர். இந்த சிகிச்சை மூலம் சீழானது மூளைக்கு பரவாமல் செய்யவும், காது கேட்கும் திறனை அதிகப்படுத்தவும் முடியும்.
* பிறவியிலேயே காது கேட்காமல் போவதற்கு என்ன காரணம்? இதனை சரி செய்து மீண்டும் காதை கேட்க வைக்க இயலுமா?
பல காரணங்கள் இதற்கு உண்டு. அவற்றில் மிக முக்கியமானது- சொந்தத்தில் திருமணம் முடிப்பதாகும். மரபணுக் குறைபாடு காரணமாக பிறவி காதுகேளாமை ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் வேண்டாத மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதன் காரணமாகக்கூட இப்படி குழந்தை பிறக்கலாம். சில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல் இருக்கும். அந்த மாதிரியான குழந்தைகளுக்கு உடனடியாக சிறப்பு சிகிச்சை, பராமரிப்பு தேவைப்படும். இதை செய்யத் தவறினாலும் பிறவி காது கேளாமை நிகழலாம்.
பலர் காதிற்கும் பேச்சிற்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறார்கள். உண்மையில் காது நன்றாக செயல்பாட்டில் இருந்தால்தான் சரியாக பேசவே முடியும். ஆக ஒரு குழந்தைக்கு பேச்சு சரியாக வரவில்லை எனில் காதினை கவனிக்க வேண்டும். பேச்சிற்கு என்று மூளையில் ஒரு இடம் உள்ளது. அந்த இடம் 4(அ)5 ஆண்டுகள் வரைக்கும் காலியாகாமலே இருக்கும். சில குழந்தைகளுக்கு மற்ற பகுதிகளால் அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுவிடும். எனவே குழந்தை பிறந்த உடன் அழாமல் இருந்தால் அல்லது காது கேளாமல் இருந்தால் உடன் கவனிக்க வேண்டும். பிறவியில் காது கேளாமை இருக்கும் குழந்தைகளை ஒன்றரை வயதிலிருந்து மூன்று வயதிற்குள் கொண்டு வந்தால் அவர்களுக்கு இன்றைய நாளில் காது மருத்துவத்தில் புரட்சியாகவே வந்துள்ள காக்ளியர் இம்பிளாண்ட் என்கின்ற அதிநவீன சிகிச்சை மூலம் காதின் கேட்கும் திறனை முன்னேற்றமடையச் செய்யலாம். ஆனால் இந்த சரியான காலத்தை தவறவிட்டு குழந்தைகளை அழைத்து வந்தால் காக்ளியர் பொருத்தினாலும் கூட காதுதான் சரியாக கேட்கும் ஆனால் பேச்சு சரியாக வராமல் போய்விடலாம்.
இந்த காக்ளியர் இம்பிளாண்ட் ஆஸ்திரேலியாவிலிருந்து இன்றைய நாளில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனால்தான் இந்த சிகிச்சை முறை அதிக செலவாகும் சிகிச்சை போல தோன்றுகிறது. ஏகப்பட்ட இறக்குமதி வரியினை செலுத்தித்தான் இதனை வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் கண்ணிற்காக வரவழைக்கப்படுகிற எந்த சாதனத்திற்கும் எந்த வரியும் கிடையாது. கண்ணிற்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல அரசாங்கம் காதிற்கும் மானியம் மற்றும் சலுகைகள் கொடுத்தால் அனைவரும் பயன் பெறலாம்.
இந்த காக்ளியர் இம்பிளாண்டை எல்லா மருத்துவமனைகளிலும் பொருத்திக் கொள்ள முடியாது. காரணம் அந்த மருத்துவமனைகளில் ஆடியோ விஷ•வல் ரிஹாபிளிடேஷன் வசதிகள் இருக்க வேண்டும். சென்னையில் ஒரு சில மருத்துவமனைகளில்தான் இந்த வசதி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
* நன்றாக கேட்டுக் கொண்டிருந்த காது திடீர் என்று கேட்காமல் போவது எதனால்?
காதை சாவி, பேனா, பட்ஸ் போன்றவற்றை போட்டு குடைவது, காது குறும்பையை எடுக்கிறேன் என்று காதை புண்ணாக்கிக் கொள்வது, மேலும் வெளிக்காதில் மெழுகினாலும் அடைப்பும், கிருமி தொற்றும் காது கேளாமல் செய்யலாம். நடுக்காதில் குழந்தைகளுக்கு தண்ணீர் புகுந்து கொண்டாலும் காது கேட்காமல் இருக்கும். இன்னும் சிலருக்கு நடுக்காது பகுதியில் இருக்கிற Otosolerosis என்கின்ற குட்டி எலும்பு அதிராமல் இருக்கும். இதனாலும் காது கேட்காமலிருக்கும். உள் காதில் உள்ள நரம்பு தளர்ச்சியுற்று வயதானவர்களுக்கு காது கேட்காமல் போகலாம். வெளிக்காதில் மெழுகு இருந்தால் அதனை சுத்தம் செய்தால் போதும் அதுபோல நடுக்காதில் தண்ணீர் புகுந்திருந்தால் அதனை சுத்தம் செய்தாலும் காது கேட்கும். குட்டி எலும்பு அதிராமல் இருந்தால் அந்த எலும்பை எடுத்துவிட்டு செயற்கை எலும்பு பொருத்தி காதினை கேட்க வைக்கலாம். வயதானவர்களுக்கு உள்காது நரம்பு குறைபாடு காரணமாக காது கேட்காமைக்கு ஒரே தீர்வு காது மெஷின் பொருத்திக் கொள்வதுதான். முன்பு பழைய முறையில் இருந்த ஹ’யரிங் எய்டி சாதனத்தில் வெளியிலிருந்து வருகின்ற எல்லா சத்தங்களும் அதிக அளவில் காதுக்குள் கேட்டு கொண்டிருக்கும். இது பல வயதானவர்களுக்கு பிடிக்காது ஆனால் இன்றைய நாளில் அதி நவீன வடிவமைப்பாக டிஜிட்டல் ஹ’யரிங் எய்டு வந்துள்ளது. கம்ப்யூட்டரின் துணையோடு எவ்வளவு கேட்கும் திறன் இவருக்கு தேவை என்பதறிந்து இந்த டிஜிட்டல் ஹ’யரிங் எய்டை பொருத்துவதால் மற்ற சாதாரணமானவர்கள் போலவே இவர்களும் செவி இன்பத்தை பெறலாம்.
* காதில் ஏதாவது பாதிப்பு வந்தால் மக்கள் பலவிதமான உபாயங்களை செய்து கொள்கிறார்களே - இது சரிதானா?
சுயமருத்துவம் என்கின்ற பெயரில் காய்ச்சிய எண்ணெய் ஊற்றுவது, தண்ணீரை பீய்ச்சி அடிப்பது, சில பச்சிலைகளின் சாறினை பிழிவது, வெங்காயச் சாறினை ஊற்றுவது போன்ற வழக்கங்களை விட்டொழிக்க வேண்டும். அடுத்து இன்றைய நாளில் பலரிடம் பட்ஸ் உபயோகிக்கும் பழக்கம் உள்ளது. என்னை கேட்டால் இந்த பட்ஸை தடை செய்தால் கூட நல்லது என்பேன். அதிக சத்தத்தை வைத்துக் கொண்டு வாக்மேன் கேட்பது, அதிக ரேடியேஷன் உள்ள செல்போன்களை தொடர்ந்து பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஜலதோஷம், தொண்டை பாதிப்பு வந்தால் உடனடியாக எச்சரிக்கையுடன் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான விழிப்புணர்ச்சியுடன் இருந்தால் காதிற்கு வரும் கஷ்டங்களிலிருந்து தப்பிக்கலாம். இன்னொரு முக்கிய ஆலோசனை: காதில் சேரும் அழுக்கினை (குறும்பை) வெளியே எடுக்கிறேன் என்று பலர் பலவிதமான குச்சி, சாவி, பேனா, பின் போன்றவற்றை வைத்து குடைகிறார்கள். உண்மையில் நமது காதினை இயற்கை அதி அற்புதமாக படைத்திருக்கிறது. காதில் சேரும் அழுக்கினை நாம் எடுக்கத்தான் வேண்டும் என்பதில்லை. அது தானாகவே வெளியேறும் விதத்தில் காதினை இயற்கை வடிவமைத்திருக்கிறது. எனவே காதினை யாரும் குடைய தேவையில்லை.
அடுத்து ஒரு செய்தி: போலி மருத்துவர்களிடம் காட்டி அரை குறையாக கேட்டுக் கொண்டிருந்த காதினையும் செவிடாக்கி கொள்ளாதீர்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காதை குடையாதீங்க..! - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - காதில், காது, சிகிச்சை, வேண்டும், எலும்பு, அந்த, காதினை, கேட்கும், உள்ளது, இருக்கும், இருந்தால், நாளில், கேட்காமல், இன்றைய, போன்றவற்றை, என்ன, வந்தால், சரியாக, மூலம், காக்ளியர், காதை, பாதிப்பு, அதிக, கிருமி, குழந்தைகளுக்கு, என்கின்ற, வயதானவர்களுக்கு, இடம், ஹ’யரிங், கொள்ள, வைக்கலாம், காதிற்கும், அதற்கு, காரணம், காதிற்கு, எந்த, கேளாமை, காரணமாக, இயற்கை, அரிப்பு, பிறவி, உடன்