மருத்துவப் பேட்டி - கர்ப்பத்தை உறுதி செய்ய...
- டாக்டர். கு. ஜீவித்ஐஸ்வர்யா, எம்.பி.பி.எஸ்.
கூபக பரிசோதனை
மருத்துவ ஆலோசனையை நாடும் போது மேற்சொன்ன அறிகுறிகளைப் பற்றிக் கேட்டறிந்த பின்னர் கூபக பரிசோதனையை மருத்துவர் மேற்கொள்வார். யோனி வழியாக குழல் நோக்கியைச் செலுத்தி கருப்பையின் கழுத்துப் பகுதியைப் பார்வையிடுவார். பிறகு ஒரு கையை வயிற்றின் மீது லேசாக வைத்து அழுத்திக் கொண்டு இரு விரல்களை யோனிக்குள செலுத்தி கருப்பையின் வடிவம் கவனிக்கப்படும். கர்ப்பத்தில் காணப்படுவதைப் போல கருப்பை விரிவடைந்திருக்கிறதா என்பது அப்போது தெளிவாகிவிடும். கருப்பையில் கட்டி இருந்தாலும் இப்பரிசோதனையில் தெரியும்.
சிறுநீர்ப் பரிசோதனை
கூபக பரிசோதனையில் கர்ப்பம் என்று தெரிந்தாலும் சிறுநீர்ப் பரிசோதனையில் அது உறுதிப்படுத்தப்படுகிறது. கடந்த மாத விலக்கு தேதியிலிருந்து 40 நாட்களுக்குள் கருவணுக்கூடு உருவாக்கும் எச்சிஜி (ஹெச்சிஜி) இயக்கு நீர் இரத்தத்தில் கலந்திருக்கும். பின்னர் இந்த இயக்குநீர் சிறுநீரில் கலந்து வெளியேறுகிறது. இதை சுலபமான பரிசோதனை மூலம் அறியலாம்.
இப்போது பெண்களே தங்கள் கர்ப்பத்தை கணித்துக் கொள்ள தயார் நிலையில் கருவி வந்துவிட்டன. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய இந்தக் கருவியில் 5 நிமிடத்தில் கர்ப்பத்தைக் கணித்து விடலாம்.
அல்ட்ரா ஒலி அலை பரிசோதனை
இயந்திரத்தால் உருவாக்கப்படும் அல்ட்ரா ஒலி அலைகள் வெவ்வேறு திசுக்களைப் பிரதிபலிக்கும். இது படமாக மொழி பெயர்க்கப்படும். கருத்தரிப்பு, கருக்குழாய் கருத்தரிப்பு, கர்ப்பகால இறுதியில் குழந்தையின் உடல் அமர்வு நிலை, குழந்தையின் வளர்ச்சி ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள இந்த அல்ட்ரா ஒலி அலைகள் உதவுகின்றன.
பிற்பகுதிக் கர்ப்பத்தின் அறிகுறி
கருப்பை வளர வளர அதன் அளவு கர்ப்பத்தை வெளிக்காட்டும். 16 வார கர்ப்பத்துக்கு பின்னர் மற்ற அறிகுறிகளும் தெரிய ஆரம்பித்துவிடும்.
குழந்தையின் அசைவுகள்
முதல் கர்ப்பத்தில் 18 முதல் 20 வாரங்களிலும், தொடர் கர்ப்பங்களில் இன்னும் இரு வாரங்களுக்கு முன்னரே குழந்தையின் அசைவுகள் தெரிய ஆரம்பித்துவிடும். கர்ப்ப காலம் ஏற ஏற இந்த அசைவுகள் வலுவடைந்து அடிக்கடி நிகழும். வெகு நேரத்துக்கு அசைவுகள் தெரியாவிட்டால் மருத்துவரை நாட வேண்டும்.
இயற்கை உபாதை
கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் இருக்கும் இந்த அறிகுறி இயக்குநீர் மாற்றங்களுக்கு ஏற்றவாறு உடல் தன்னைச் சரி செய்து கொள்வதால் 12 வாரங்களுக்குப் பிறகு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உபாதை குறையும். கர்ப்பத்தின் பிற்பகுதியில் குழந்தையின் தலை சிறுநீர்ப்பையை அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் மீண்டும் ஏற்படும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமாகத் தெரியும்.
மருத்துவப் பரிசோதனையில் தெரியும் அறிகுறிகள்
கருப்பையின் வளர்ச்சி
பெண்ணின் வயிற்றில் வளர்ந்து வரும் கர்ப்பத்தின் உயரத்தை வைத்து மருத்துவரால் ஓரளவுக்கு கர்ப்பத்தின் வயதைக் கணக்கிடலாம். தொப்பை போன்ற காரணங்களால் இந்தக் கணிப்பு சரியில்லாமல் கூடப் போகலாம்.
கருத்தரித்த 20 வாரங்கள் வரை அடிவயிற்றிலிருந்து 2 வாரங்களுக்கொரு முறை இரு விரற்கடையளவு வளர்ச்சி தெரியும். 20 வாரங்களுக்குப் பின்னர் 4 வாரங்களுக்கொரு முறை இரு விரற்கடையளவு வளர்ச்சி தெரியும். இவ்வாறு விரிவடைந்து கொண்டே செல்லும் கருப்பை கர்ப்பத்தின் இறுதி நாட்களில் மார்பெலும்பை முட்டிக் கொண்டு நிற்கும்.
அல்ட்ரா ஒலி அலைகள் மூலமும் கர்ப்பத்திலுள்ள குழந்தையின் வளர்ச்சியை அறியலாம். இதன் மூலம் குழந்தையின் பாலினத்தையும் அறிந்து கொள்ளலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கர்ப்பத்தை உறுதி செய்ய... - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - குழந்தையின், கர்ப்பத்தின், தெரியும், வளர்ச்சி, அல்ட்ரா, அசைவுகள், பரிசோதனை, பின்னர், அடிக்கடி, முறை, கருப்பையின், கருப்பை, பரிசோதனையில், கூபக, அலைகள்