அவன்

- சி.வி. வடிவேலு
வானம் நீலமாய் தெளிந்திருக்க, திருதிருவென கீழ் இறங்கிய சித்திரை மாத வெயில் பூமியை வறுத்தெடுத்துக்கொண்டிருந்தது. அகன்றதொரு அத்தி மரத்தின் நிழலில் அந்த 'அன்னை தெரஸா' என்கிற முதியோர்களுக்கான இல்லம் சற்றே குளிர்ந்திருந்தது. மரத்தடியிலிருந்த நீண்ட சிமெண்ட் இருக்கையில் சுந்தரமூர்த்தி உட்கார்ந்திருந்தார். மெலிந்த தேகம். நிறைய நரைத்திருந்தார். குறுக்கும், நெடுக்குமாக கீறல்கள் விழுந்த மூக்கு கண்ணாடிக்குள் அவருடைய பார்வை அமைதியாய் விழித்திருந்தது.
அருகாமையில் 'தெரஸா' இல்லத்தின் மானேஜரான ஜோசப், கருணையோடு அவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
"என்னோட மனைவி இருந்திருந்தா, நான் இங்க வந்திருக்கவே மாட்டேன். ஆச்சு... அவ செத்துப் போயி மூணு வருஷமாச்சு, ஆனா நான் துளிகூட நினைச்சே பார்க்கலே. எனக்கு இந்தகதி வரும்னு. அவ இறந்த அடுத்த வருஷமே என்னோட மூத்த பையன் சண்டை போட்டுக்கிட்டு யாரோ ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளிநாட்டுக்குப் போயிட்டான். கடைசி காலத்தில் என்னோட அவன் இருப்பான்னு ரொம்பவே எதிர்பார்த்தேன்.
சுந்தரமூர்த்தியின் கண்களில் நீர் கசிந்தது.
"ஏதோ எனக்கு கிடைச்சிட்டிருந்த பென்ஷன் பணத்தை வெச்சுகிட்டு இரண்டாவது பையனோட இருந்திட்டுருந்தேன். காலேஜ்ல படிச்சிட்டிருந்தான். அவனும் இப்ப என்னோட இல்ல."
"ஏன் சார்!" ஆதங்கத்தோடு ஜோசப் கேட்டார்.
"அவன் இப்ப இருக்கிற இடமே தெரியல. போதை பொருளுக்கு அடிமையாகி, புத்தி பேதலிச்சுப் போச்சு, ஆஸ்பிடல்ல சேர்த்து பார்த்தேன். எல்லா ட்ரீட்மென்ட்டும் கொடுத்தாங்க. திடீரென்று ஒரு நாள் அவன காணல. எங்க போனான்னு தெரியல. எல்லாமே திசை மாறிப்போச்சு. அதுக்கப்புறம், என்னால - தனியா..."
சுந்தரமூர்த்தியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அழ ஆரம்பித்துவிட்டார்.
"சார், உங்களோட கவல எனக்கு புரியறது. கடவுள் உங்கள கை விடமாட்டார் சார். காட் இஸ் கிரேட்."
ஜோசப் ஆறுதல் அளித்தார். சுந்தரமூர்த்தி கைக்குட்டையால் கண்களைத் துடைத்தபடி தன் பேச்சை தொடர்ந்தார்.
"ஆனா... ரொம்பப் பெரிய அதிசயம் என்னன்னா, நான் இங்க உள்ள நுழைஞ்ச உடனே கவனிச்சிட்டேன். என்னோட உயிர் நண்பன் பக்கத்தில இருக்கானேன்னு ரொம்ப சந்தோஷமா போச்சு. ஆச்சரியமாக் கூட இருந்துச்சி."
ஜோசப்பிற்கு ஒன்றும் புரியவில்லை.
"சார். நீங்க யாரை சொல்றீங்க?"
"வாங்க காட்றேன்." சுந்தரமூர்த்தி இருக்கையை விட்டு எழுந்தார். கூடவே ஜோசப்பும் எழுந்தார்.
நான்கு அடி உயரத்தில் எழுப்பப்பட்டிருந்த மதில் சுவர் ஒன்று இல்லத்தைச் சுற்றி வளைத்திருந்தது. சுந்தரமூர்த்தி மெல்ல நடந்து அந்த சுவரருகே சென்றார். மதிலின் மறுபக்கம் ரயில் தண்டவாளங்கள் இருந்தன. தெற்கே செல்லும் டீசல் ரயில் ஒன்று பெருத்த இரைச்சலோடு வேகமாக கடந்துபோனது.
சற்று தொலைவில் உபயோகத்தில் இல்லாத நீராவி ரயில் இன்ஜின்கள் ஐந்தாறு ஓரங்கட்டப்பட்டிருந்தன. சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்து கொண்டிருந்த அந்தப் பழைய நீராவி ரயில் கூட்டத்தின் மீது சுந்தரமூர்த்தியின் பார்வை விழுந்தது.
"அதோ நிக்கறானே அவன்தான்!"
சுந்தரமூர்த்தி கைநீட்டி குறிப்பிட்ட இடத்தில் ரயில் இன்ஜின்களைத் தவிர வேறு யாருமே இல்லை என்பதையறிந்த ஜோசப், குழப்பத்தில், "யாருமே அங்க இல்லையே சார்" என்றார்.
"அதோ அங்கே நான்காவதா நிக்கறானே, அவன்தான், ரைட் சைட்ல பாருங்க"
ஜோசப்பில் கண்கள் சற்று சுருங்கி விரிந்தது.
"நான் சதர்ன் இரயில்வேயில் லோகோமோடிவ் டிரைவராயிருந்து ரிடயர்ட் ஆயிட்டேன். நாலு வருஷமாச்சு." சுந்தரமூர்த்தி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது கூறியது ஜோசப்பின் நினைவுக்கு வந்தது.
அவர் அங்கே நின்று கொண்டிருந்த ரயில் இன்ஜின்களில் ஒன்றைத்தான் குறிப்பிடுகிறார் என்பதும் புரிந்தது.
"அந்த லோகோதானா சார் நீங்க ஓட்டிட்டிருந்தது!" மிகுந்த ஆச்சரியத்தோடு ஜோசப்பின் கேள்வி எழுந்தது.
"ஆமாம். அவனேதான்".
"நீங்க ஓட்டின லோகோ அதுதான்னு எப்படி உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சுது?"
ஜோசப்பை மெல்ல ஏறிட்டு பார்த்தார் சுந்தரமூர்த்தி.
"ஒரு வருஷம், ரெண்டு வருஷமில்ல. முப்பத்தி நாலு வருஷம் அவனோட நான் பழகியிருக்கேன். அவன நீங்க ஒரு இயந்திரமா பாக்காதீங்க. அவனுக்கும் உணர்வுகள் இருக்கு. இன்ச் பை இன்ச் அவன எனக்கு தெரியும்"
ஆத்மார்த்த நட்பின் புரிதலோடு சுந்தரமூர்த்தி தன்னுடைய பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தார்.
"அவனோட உழைப்பு ரொம்பப் பெரிசுங்க ஜோசப். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உழைப்பு. அவன் கடுமையா உழைச்சான். கூலியேயில்லாம!"
ஒரு பழைய நீராவி ரயிலை... இத்துப்போன இரும்பு மிஷினை.... வெறும் இயந்திரமாக மட்டுமே பாராமல், உயிருள்ள மனிதனாகவே மனதிற்குள் பாவித்து நேசம் கொண்டிருக்கும் சுந்தரமூத்தியை அதிசயித்து பார்த்துக்கொண்டிருந்தார் ஜோசப்.
"நான் ரிடயர்ட் ஆன இரண்டு மாசத்துல, அவனையும் டிபார்ட்மெண்ட் வயசாயிடுச்சுன்னு சொல்லி ஓய்வு கொடுத்துடுச்சி, டீசல், எலக்டிரிக் ட்ரெய்னெல்லாம் வந்திடுச்சில்ல. அதான் அவன ஒதுக்கிட்டாங்க. முதல்ல யார்டுக்குத்தான் அனுப்பிச்சாங்க. நானும் அப்பப்ப போயி பார்த்துட்டு வருவேன். தனியா... ஒரு மூலையில அனாதையா நின்னுட்டிருந்தான்."
சுந்தரமூத்தியின் குரல் கம்மியது.
ஜோசப்பின் முகத்தில் இறுக்கம்.
"அப்புறம் என்னாச்சு சார்!" என்றார்.
"அவனையும் ஒரு நாள் அங்க காணல. இட நெருக்கடியால யார்ட்ல இருந்து வேற எங்கேயோ கொண்டு போயிட்டாங்கன்னு தெரிஞ்சுது. நெஞ்சு பதறிப்போச்சு. எல்லாமே என்னவிட்டு போன மாதிரி ஒரு வேதனை. அவன தேடி அலைஞ்சேன். எங்கேயும் காணல. இரண்டரை வருஷமா அவன பார்க்கவே முடியாமப் போச்சு."
சுந்தரமூர்த்தியின் தொண்டைக்குழி, விம்மி அடங்கியது.
"அதுக்குப்பிறகு இப்பதான் அவன பார்க்கறேன். இங்க அவன சந்திப்பேன்னு நினைக்கவேயில்ல."
எங்கெங்கோ அலைந்து திரிந்து தேடிய அரியதொரு புதையல் கிடைத்துவிட்டது போல் சுந்தரமூர்த்தியின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது. மழை வருவதையுணர்ந்த மயில் குதூகுலத்தோடு தோகை விரித்தாடுவதைப்போல் அவர் நெஞ்சு ஆனந்தக் கூத்தாடியது. தரை தவழ்ந்து, தட்டுத்தடுமாறி எழுந்து நின்றுவிட்ட குழந்தையின் தெம்பில் அவர் திளைத்திருந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவன், ", சுந்தரமூர்த்தி, நான், ரயில், சார், ஜோசப், என்னோட, சுந்தரமூர்த்தியின், நீங்க, எனக்கு, அவர், நீராவி, ஜோசப்பின், இங்க, காணல, அந்த, போச்சு, அவன், Short Stories - சிறுகதைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்