புலவர் குழந்தையின் இலக்கணப் பணி
- சு. அழகிய நம்பி
உலக மொழிகள் அனைத்துள்ளும் தொன்மை, புதுமை, இடையறவுபடாத தன்மை என்ற எல்லாவற்றையும் ஒருங்கே பெற்ற மொழி தமிழாக இருப்பதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது அதன் கட்டுக்கோப்பான இலக்கணமே எனலாம். அத்தகைய இலக்கணப் பணியில் புலவர் குழந்தையின் பங்கை ஆய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
யாப்பிலக்கணங்களும் புலவர் குழந்தையும்:
தொல்காப்பியர் யாப்பிலக்கணத்தைச் செய்யுளியலில் கூறியுள்ளார். பின்னாட்களில் காக்கைப்பாடினியம், அவிநயம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, வீரசோழியம் முத்துவீரியம் போன்ற யாப்பிலக்கண நூல்கள் தோன்றின. அவ்வகையில் யாப்பதிகாரம், தொடையதிகாரம் என்ற இரு யாப்பிலக்கண நூல்களைப் புலவர் குழந்தை படைத்தளித்துள்ளார்.
யாப்பதிகாரம், யாப்பு உறுப்புக்களான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய ஆறு உறுப்புக்களை விரிவாகவும் விளக்கமாகவும் கூறி நிற்க தொடையதிகாரம் தொடை வகையை மட்டும் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. யாப்பதிகாரம் உறுப்பியல் செய்யுளில் புதிய செய்யுட்கள் கவியரங்கம் என்ற நான்கு பிரிவுகளை அடக்கிய முதற்பகுதி, உறுப்பியல் செய்யுளியல் என இரண்டு பிரிவுகளை அடக்கிய இரண்டாம் பகுதி, என இரண்டு பகுதிகளை உடையதாக விளங்குகின்றது. தொடையதிகாரம் முதலியல், எடுத்துக்காட்டியல், ஒழியில் என மூன்று இயல்களையும் இருபத்தேழு பெரும் பிரிவுகளையும், நூற்றேழு சிறு பிரிவுகளையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. யாப்பறிவுயில்லாதவரும் தாமாகவே கற்றுணரும் வண்ணம் எளிய நடையில் ஆக்கப்பெறல் வேண்டும் என்ற நோக்கத்துடன் யாப்பதிகாரத்தைப் படைத்தாகப் புலவர் குழந்தை குறிப்பிடுகின்றார்.
எளிய நடையில் இலக்கண நூற்பாக்கள்:
''அறுசீர் முதலன கழிநெடிலடியே'' (யாப்பதி. ப.30)
என்று குறிப்பிடுவதிலும் எளிய நடைகளைக் காணமுடிகின்றது.
சான்றுப் பாடல்களைப் படைத்தல்:
தாம் படைத்த இலக்கண நூற்பாக்களுக்குப் பொருத்தமான சான்றுப் பாடல்களைப் பிற இலக்கியங்களிலிருந்து தருவதுடன் அவரே பல சான்றுப் பாடல்களைப் படைத்தும் தந்துள்ளார். அடிமறி மண்டில ஆசிரியப்பாவிற்குச் சான்றாக அவர்,
''தாய்மொழி வளர்த்தல் தமிழர்தங் கடனே
வாய்மொழி புரத்தல் மற்றவர் கடனே
காய்மொழி தவிர்த்தல் கற்றவர் கடனே
ஆய்மொழி யுரைத்தல் அறிஞர்தம் கடனே'' (யாப்பதி. ப.61)
என்ற பாடலையும் கலிவிருத்தத்திற்குச் சான்றாக.
''மூவர் மன்னர் முறையொடு முன்புதம்
ஆவி யென்ன அருமையிற் போற்றிய
நாவின் மீது நடம்பயில் நாணயத்
தாவில் நற்றமிழ்த் தாயைப் போற்றுவோம்'' (யாப்பதி. ப.74)
என்ற பாடலையும் படைத்துத் தந்துள்ளார். அவர் இலக்கணப்புலவர் மட்டுமல்லர். தாம் ஓர் இலக்கியப் படைப்பாளியுமாக இருப்பதைக் கற்பவர் எண்ணிப் பார்க்கும் வகையில் அவருடைய சான்றுப் பாடல்கள் அமைந்துள்ளன எனலாம்.
தன்படைப்புக்களிலிருந்து சான்று காட்டல்:
யாப்பதிகாரத்தில் நேரிசை வெண்பாவிற்குச் சான்றாக அவருடைய புலவர் குழந்தையின் பாடல் என்னும் தொகுப்பிலிருந்து,
''ஒன்று கரும்பினடி ஓங்குநுனி யேயிரண்டு
துன்றுபுளிப் பேமூன்று தோகாய்வேம்-பொன்றதன்மேல்
பின்னும் பலபிள்ளைப் பேறுடையா ரின்விருப்பிற்
கென்னுவமை சொல்வே னினி'' (யாப்பதி. ப.50)
என்று காட்டும் அவர் தொடையதிகாரத்தில் வஞ்சிவிருத்தத்திற்குச் சான்றாக அதே நூலிலிருந்து,
''அருவி யாடி யருஞ்சுனை
மருவி யாடி மணிக்கதிர்
இருவி யாடி இளங்கதிர்
ஒருவி யோட வுவப்பரே'' (தொடையதி. ப.69)
என்றும் அவருடைய படைப்புக்களிலிருந்தே எடுத்துக் காட்டியுள்ளமையை அறிய முடிகின்றது.
எளிமையும் தெளிவும்:
தளை தட்டுதலைக் குறித்து விளக்கும் புலவர் குழந்தை ஐகாரத்தை எப்படிக் குறுக்கமாகவும் அதற்குரிய இரண்டு மாத்திரை அளவாகவும் கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகின்றார்.
ஐகாரம் நெடிலேயாயினும் தளை தட்டுமிடத்துக் குறிலாகவும் தட்டாத விடத்து நெடிலாகவும் கொள்ளப்பெறும் என்று கூறி,
''புன்னைப் பொழிலருகே போயினான் பூங்கொம்பர்
தன்னையருங் காணத் தளர்ந்து''
என்று வெண்பாவைச் சான்று காட்டி அவ்வெண்பாவில் தன்னையரும் என்ற சீரை தன் னைய ரும் - நேர் நிரை நேர் - கூ விளங் காய் என்று அலகிட வேண்டும் என்கிறார். அவ்வாறன்றி ஐகாரத்தை நெடிலாகக் கொண்டால் தேமாங்கனியாக வருமாதலால் அவ்வாறு கொள்ள வேண்டாம் என்கின்றார். மேலும்,
''யானையைக் கண்டஞ்சி னாள்'' என்றதில் யா னை யைக் தே மாங் காய் என ஐகாரம் நெடிலாகச் செயற்படுவதை அவர் எளிய காட்டுக்களால் தருகின்றமையை அறிய முடிகின்றது.
சொல்லாராய்ச்சி:
புலவர் குழந்தை சொல்லாராய்ச்சியில் வல்லவராகவும் திகழ்கின்றார். யப்பதிகாரம் செய்யுளியலில் கலிப்பாவின் உறுப்புக்களுள் ஒன்றான அராகம் என்பதைப் பற்றி அவர் குறிப்பிடுகையில் ''அராகம் என்ற தனித்தமிழ்ச் சொல்லே முதலெழுத்தை இழந்து ராகம் என வடசொல் வடிவு பெற்றுப் பின் இராகம் என வழங்கி வருகின்றது'' (யாப்பதி, பக்.24-25)
என்கின்றார் மேலும் ''பல்லவம் தளிர் இது தமிழ்ச் சொல். பல்லவி தளிர்த்தல் பாட்டின் தொடக்கமாதலால் இப்பெயர் பெற்றது என்கிறார்''. இதன் வழி அவருடைய சொல்லாராய்ச்சித் திறனை அறிய முடிகின்றது.
பாவமைப்பை மாற்றியாளும் திறன்:
ஒரு பாவமைப்பை மற்றொரு பாவமைப்பாக மாற்றும் திறனுடையராகப் புலவர் குழந்தை விளங்குகின்றார் என்பதை,
''பட்டூர் குழல்மங் கையர்மை யல்வலைப்
பட்டூ சல்படும் பரிசென் றொழிவேன்
தட்டூ ரடவேல் சயிலத் தெறியும்
நிட்டூ ரநிரா குலநிர்ப் பயனே'' (தொடையதி, ப.127)
என்ற கலிவிருத்தப் பாடலை,
''பட்டூர்குழல் மங்கையர் மையல்வலைப்
பட்டூசல் படும்பரி சென்றொழிவேன்
தட்டூர வேல்சயி லத் தெறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே'' (தொடையதி, ப.150)
என்று வஞ்சி விருத்தமாக மாற்றிக் கையாளுகின்றார்.
சிறப்பின்மையைச் சுட்டும் பாங்கு:
மோனை வகைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்ற புலவர் குழந்தை அடிமோனை வருவதில் சிறப்பில்லை என்று குறிப்பிடுவதுடன் யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர் தந்துள்ள சான்றுப் பாடலான,
''மாவும் புள்ளும் வதுவையிற் படர
மாநீர் விரிந்த பூவுங் கூம்ப
மாலை தொடுத்த கோதையுங் கமழ
மாலை வந்த வாடை
மாயோ னின்னுயிர்ப் புறத்திறுத் தற்றே'' (யாப், ப.47)
என்ற பாடலையே தந்து இப்பாடலில் அடிமோனை அமைந்து அடியெதுகை அமையவில்லையாதலால் சிறப்பில்லை என்கின்றார். இப்பாடலைச் சான்றாகக் காட்டியுள்ள குணசாகரர் இந்நுட்பத்தைக் குழந்தையைப் போலக் குறிப்பிடவில்லை என்பது இவண் குறிப்பிடத்தக்கதாகும்.
பாவகையைச் சரியாகச் சுட்டல்:
புலவர் குழந்தை அவருடைய தொடையதிகாரத்தில் பா, பாவினங்களுக்குத் தந்தள்ள சான்றுப் பாடல்கள் மிகப் பொருத்தமானவைகளாக அமைந்துள்ளன. புலவர் குழந்தையின் இத்தன்மை குறித்துத் தினமணி நாளிதழின் இணைப்பான தமிழ்மணி கேள்வி அரங்கத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஏ.ஆர். இராமசாமி என்பவர். திருவாசகம் அச்சோப்பதிகம் கலி விருத்தம் என்றும் திருச்சாழல் நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா என்றும் குறிப்பிடப்பெற்றுள்ளன. இவ்விரண்டிலும் மூவசைச் சீர்களுடன் துள்ளலோசையும் கொச்சகங்களே என்று அவருடைய தொடையதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். விளக்கம் வேண்டுகிறேன் என்ற வினாவுக்கு புலவர் குழந்தையின் குறிப்பு சரியே என விடையிறுக்கப்பட்டுள்ளது. இது புலவர் குழந்தையின் யாப்பலிக்கண அறிவைப் புலப்படுத்துகின்றது எனலாம்.
மொழிப்பற்று:
யாப்பிலக்கணத்திற்குப் பழக்காலத்திலிருந்த மதிப்பைப் பாராட்டும் புலவர் குழந்தை அதன் இன்றைய நிலையை எண்ணி வருந்துகிறார். யாப்பதிகாரத்தில் மோனைத் தொடைக்குச்
''செந்தமிழைக் கற்றுத் தெளியா மகனொருவன்
செந்தமிழ னாவானோ தேமொழி'' (யாப்பதி, ப.2)
என்ற பாடலை அவரே சான்றாகப் படைத்துத் தந்துள்ளார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் தம் அறுவகை இலக்கணத்தில் ''தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதெனில் வெகுளி யற்றிருப்போன் வெறும்புல வோனே'' என்று தமிழ் மொழியின் பெருமையைப் பாராட்டுகின்றார். இந்தி எதிர்ப்பு இயக்கம், தனித் தமிழ் இயக்கம் பகுத்தறிவு இயக்கம் ஆகிய இயக்கங்கள் சிறப்புற்றிருந்த காலத்தில் புலவர் குழந்தை வாழ்ந்தவராதலாலும் அவ்வியக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவராதலாலும் அவருடைய யாப்பிலக்கண நூல்களிலும் தமிழுணர்வுக்கு இன்றியமையாத இடத்தை அவர் தந்தார் எனலாம்.
நன்றி: கட்டுரை மாலை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலவர் குழந்தையின் இலக்கணப் பணி, புலவர், குழந்தை, அவருடைய, அவர், யாப்பதி, சான்றுப், குழந்தையின், சான்றாக, கடனே, எளிய, எனலாம், தொடையதி, அறிய, மாலை, இயக்கம், என்கின்றார், முடிகின்றது, யாடி, என்றும், தந்துள்ளார், யாப்பதிகாரம், யாப்பிலக்கண, தொடையதிகாரம், இரண்டு, பாடல்களைப், வேண்டும், தொடையதிகாரத்தில், Research Ideas - ஆய்வுச் சிந்தனைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்