திருக்குறளில் மனிதநேயக் கூறுகள்
- சு. மாதவன்
மனிதனின் உணர்வு, சிந்தனை, கருத்து, செயல்பாடுகளோடு பின்னிப்பிணைந்த நற்பண்புகளை பத்து உடைமைகளாகத் திருவள்ளுவர் பகுத்துள்ளார். இந்தப் பத்து உடைக்கூறுகளும் வாழ்க்கையின் இயக்கத்தோடு, ஒருங்கிணையும் போது அவை எவ்வாறு மனிதநேயத்தின் படிநிலைகளாகும் என்பதை திருக்குறளின் வழிநின்று ஆராய்கிறது இக்கட்டுரை.
உடைமை
'உடைமை' எனப்படுவது இன்று பெரும்பாலும் பொருள் அதாவது செல்வ உடைமையைக் குறிப்பதாகவே அறியப்படுகிறது. உடைமை என்பதற்கு, "செல்வம்; உடையபொருள்; உடையனாந்தன்மை; அணிகலன்; உரிமை; உரியவை" ஆகிய சொற்பொருள் விளக்கங்கள் குறிப்பிடப்படுகின்றன. (கழகத் தமிழ் அகராதி; 1965, ப.151) இவ்வுடையனாந்தன்மை" என்பது சிந்தனைக்குரியது. எனவே, ஒரு மனிதனின் புறத்தேவைகளுக்கும், அகத்தேவைகளுக்கும் உரியனவாய் விளங்கும் எந்தவொன்றையும் உடைமையாகக் கொள்ள முடியும்.
சமூக வரலாற்றில் முதலில் உடைமையாகக் கருதப்பட்டவள் பெண். (பிறன்பொருளாள் - குறள் 15:1) பெண்ணின்று உருவாகிய அடுத்த தலைமுறையினருக்கென சேர்க்கப்பட்ட நிலம், விளைபொருள் போன்றவை. இதைத் தொடர்ந்து உடைமைகளாகக் கொள்ளப்பட்டன. இவை சொத்துடைமைச் சமூகம் உருவாகிய காலத்தில் எழுந்த கருத்தாக்கங்களாகும். இவற்றிலிருந்து மனிதனுக்குரிய உடைமைகளை இரு வகையாப் பகுக்கலாம:
1. மனிதன் உயிர்வாழத் தேவையான புற உடைமைகள் இவற்றை மனிதனிடமிருந்து பிரித்துவிட முடியும்.
2. மனிதனின் உயர்வுத் தேவைக்கான; இயல்புகளை நெறிப் படுத்தி, வாழ்வியலைச் செம்மையாக்கும் அக உடைமைகள் (நுண்பொருளுடைமை) இவற்றை மனிதனிடமிருந்து பிரிக்க இயலாது.
மனிதநேயம்
மனிதநேயம், அறிவியல் ஒழுகலாறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் செயல்முறைகளால் சமூகத்தில் ஓர் சமனியத் தன்மையைக் காணமுடிகிறது. எனவே, "மனிதநேயமும் ஒரு தத்துவம் தான். ஏனென்றால் அது மனிதனின் மதிப்பீடுகள் அல்லது உணர்வுகளை அங்கீகரிக்கிறது. எல்லாப் பொருள்களையும் பற்றிய அளவீடுகளை அவனிடம் உருவாக்குகிறது. மனிதனின் இயற்கையான குணங்களை; அவற்றின் எல்லைகளை அல்லது விருப்பங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்துகிறது". (The Encyclopedia of Philosophy. vol.3 & 4., 1972, Rs.69.70) இதனால் இது ஒரு பயன்பாட்டுத் தத்துவமாகவும் பண்பாட்டுத் தத்துவமாகவும் விளங்குகிறது.
பொதுவாக, மனிதர்களில் அடிப்படைத் தேவைகள் ஒரே திறத்தன. இத்தேவைகளின் நுகர்வு நிலைகளில் முரண்பாடுகள் ஏற்படும் பொழுது அவர்களுக்கிடையே மனமுறிவுகள் ஏற்படுகின்றன. காலப்போக்கில், இம்மனமுறிவுகள் பரிணாம வளர்ச்சி பெற்ற மோதல்களில் முடிகின்றன. இதன், விளைவாய் மனித உயிர்ப்பலிகளும் நிகழ்கின்றன. இவை தனி மனிதர்களுக்கிடையிலோ, ஒரே குழுவுக்குள்ளோ, இரு குழுக்களுக்கிடையிலோ அல்லது ஒட்டுமொத்த சமூகத்திற்குள்ளோ நிகழலாம். இவற்றைத் தடுக்கவும், சமநிலைப்படுத்தவும் சமூக வளர்ச்சியின் படிநிலைகளில் ஒவ்வொரு சமூக அமைப்பும் தனக்கென பல்வேறு மதிப்பீடுகளை உருவாக்கி, செயல் வடிவங்களையும் தீர்மானித்துக் கொண்டன. இச்செயல் வடிவங்களை 'அறநெறி' என்று அழைக்கிறோம்.
மதிப்பீடுகள் மனிதர்களின் நல்ல இயல்புகளையும் சமூகத்தின் தேவையையும் உள்ளடக்கியனவாகவும், உருவாக்கித் தருவனவாகவும் அமைகின்றன. நல்ல இயல்புகள் என்பவை புரைதீர்ந்த நன்மை பயப்பனவாக அமைதல் வேண்டும். எந்தவொரு பயன்மிக்க விளைவுகளை ஏற்படுத்தும் சிறந்த இயல்புகளின் பல்வேறு கூறுகளையும் வெளிப்படுத்துவதாக மனிதநேயக் கோட்பாடு விளங்குகிறது. சிறந்த இயல்புகளின் பல்வேறு கூறுகளாக மனிதனின் உள்ளார்ந்த நற்பண்புகள் குறிப்பிடப்படுகின்றன. எனவே, மனிதனின் நற்பண்புகளின் கூட்டுத் தொகுதியாகவும், செயல்பாட்டு வெளிப்பாடாகவும் மனிதநேயம் விளங்குகிறது எனலாம்.
மனிதனின் அறச்செயல் வளர்ச்சிக்கான மூன்று நிலைகள் முறையே
(அ) இயல்பூக்க நிலை (ஆ) மரபொழுக்க நிலை (இ) மனச்சான்று நிலை ஆகியன. (அறிவியல் - ஓர் அறிமுகம், 1984, ப.78) இவற்றுள், இயல்பூக்க நிலையைத் தன் அடிப்படையாகக் கொண்டுள்ளது மனிதநேயம்.
திருக்குறள் சுட்டும் மனித உடைமைகள்
அறநெறியின்றி செல்வம் திரட்டப்பட்ட காலகட்டத்தில் எழுந்தது திருக்குறள். இவ்வாறு ஒரு புறத்தில் சிலரால் செல்வம் குளிக்கப்படுவதால் இன்னொரு புறத்தில் மிகப்பலரும், இன்னலுறுவதைக் கண்ட திருவள்ளுவர், பொருள் வேட்கையின் பொருட்டு நிகழ்ந்த நெறிபிறழ் நடவடிக்கைகளைக் கண்டிக்கிறார். இதற்கெனவே கள்ளாமை, வெஃகாமை, நன்றியில் செல்வம் போன்ற அதிகாரங்களைப் படைத்துள்ளார். (அமுதம் - கட்டுரைத்தொகுப்பு, 1996 ப.53) தீயோரிடம் செல்வம் சேர்வதும், நல்லோரெல்லாம் வறுமையில் துன்புறுவதுமான நிலை மாற வேண்டுமெனில் 'உடைமை' பற்றிய சமூகத்தின் கண்ணோட்டத்தில் ஒரு புரட்சிகர மாற்றம் வேண்டும் என்று எண்ணுகிறார். பொருளுடைமையின் பொருட்டு ஆசை அதிகரிக்க அதிகரிக்க சமூகத்தில் குளறுபடிகளும் அதிகரிக்கும், மனிதனுக்குத் தேவையான நல்லியல்புகளை, மதிப்பீடுகளை உடைமைகளாகக் கொண்டால் பொருளுடைமையின்பாற்பட்ட சச்சரவுகளும், மோதல்களும் முடிவுக்குவரத் தொடங்கும். எனவே, 'உடைமை' என்பது பொருளுடைமை அன்று. அது நில்லாது நீங்கிவிடும் தன்மையது என்றும், "உள்ளம் உடைமை உடைமை" என்றும் அறிவிக்கிறார் வள்ளுவர் (குறள். 60:2)
"உள்ளம் உடைமை உடைமை" என்ற குறள் ஊக்கமுடைமை என்ற அதிகாரத்துள்ள அடக்கப்பட்டு இருந்தாலும், மிகப்பரந்த பொருண்மைகளை உள்ளடக்கியதாக விளங்குகிறது. உள்ளம் மனித உணர்வுகளின், இயல்புகளின், பண்புகளின் நிலைக்களம், ஆகையால், அதைப் பற்றியிருக்கும் உடைமைகள் மட்டுமே உடைமைகளாக்க் கொள்ளத்தக்கன. ஏனெனில், அவை எளிதில் நீங்காத தன்மையன. மனிதனை விட்டு நீங்கிச் செல்லும் பொருளை உடைமை என்று வள்ளுவர் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே தான், "உடைமை" என்ற பொருளில் பொருளுடைமையை எந்த இடத்திலும் அவர் சுட்டவில்லை. மாறாக, மனிதனது வாழ்க்கை ஒழுகலாறுகளுக்குத் தேவையான நல்லியல்புப் பண்புகளையே 'உடைமை' என்று சுட்டுகிறார். இவ்வாறு குறிப்பிடப்படுவனவற்றை பத்து உடைமைகளாகக் பகுத்துள்ளார். அவை முறையே (1) அன்புடைமை (2) அடக்கமுடைமை (3) ஒழுக்கமுடைமை (4) பொறையுடைமை (5) அருளு€டைமை (6) அறிவுடைமை (7) ஊக்கமுடைமை (8) ஆள்வினையுடைமை (9) பண்புடைமை (10) நாணுடைமை ஆகியன. இவை மனிதனின்று பிரிக்க இயலாத உடைமைகள். இங்கு பிரிக்கவியலாத உடைமைகள், என்பவை முற்றிலுமாக நீக்க முடியாதவை; நீங்காதவை என்னும் பொருளில் குறிப்பிடப்படுகின்றன. காலம், இடம், சூழல், தேவை இவைகளில் அடிப்படையில் மேற்கண்ட இயல்பு உடைமைகளின் உணர்வு மட்டங்களில் ஏற்ற இறக்கங்கள் நிகழலாம். எனினும், முற்றிலும் நீங்காதவை.
மனிதனின் உடைமைகளான பத்தும் (அதிகாரங்கள்) மனிதனின் உள்ளார்ந்த நற்பண்பியல் கருத்தாக்கங்களாகவும், இதர அதிகாரங்களில் பெரும்பான்மையானவை இவற்றின் செயல்பாட்டு வெளிப்பாடுகளாகவும் அமைகின்றன. இவை இரண்டுக்கும் இடையே உயிர் நீரோட்டமாக நின்று இயங்குவதும், இயக்குவதும் மனிதநேயக் கோட்பாடாகும்.
அன்புடைமை
மனித நேய வெளிப்பாட்டிற்கான நற்பண்பியல் கூறுகளுள் முதன்மையானது அன்பு. சக மனிதனைத் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்வதற்கு முதலில் அவர் பால் அன்பு செலுத்த வேண்டும். முன்னைத் தொடர்புகள் ஏதுமற்ற ஒருவரோடும் உறவைச் செழுமைப்படுத்திக் கொள்ள அன்பு என்னும் ஊற்று இன்றியமையாததாகிறது. உறவைச் செழுமைப்படுத்திக் கொண்டவர்களிடையே உள்ள அன்பு உண்மை உடைத்தாயின் அவர்கள் தங்கள் உணர்வுகளின் கருத்துக்களை மாத்திரமல்லாது, அவர்களிடம் உள்ள எதையும் பகிர்ந்து கொள்ளும் தன்மையராய் விளங்குவர், (குறள். 8:2) "அன்பின் வழியது உயிர்நிலை" அவ்வுயிர் நிலை இல்லாத மனித யாக்கையின், "புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும்?" அவை உயிர்நிலையற்ற "என்புத்தோல் போர்த்த உடம்பாக"; பிணமாகவே கொள்ளப்படும். எனவே, "அகத்து உறுப்பாக" அன்பு என்னும் உயிர்நிலை செயல்படவேண்டும் என்கிறார் வள்ளுவர். (குறள் 8:10, 8:9) அன்பைப் போற்றினால் தான் வாழ்க்கை இனிமையானதாக அமையும். மனிதன்பால் செலுத்தப்படும் நேயம் அன்பிலிருந்து தொடங்கி வளர்கிறது என்பதால் அன்புடைமையை முதல் உடைமையாக முன் வைக்கிறது திருக்குறள்.
அடக்கமுடைமை
அடக்கம் என்பது மன அடக்கம், புலனடக்கம், சொல்லடக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. புற உலகத்திலிருந்து புலன்களின் வழிப்பெறப்படும் கருத்துக்களின் மீது மனம் அவா, சினம் முதலிய குணங்களைப் பெறுகிறது. இவற்றினைச் சொற்கள் வெளிப்படுத்துகின்றன. எனவே, மனம், மெய், மொழிகளை நன்னெறியில் கட்டுவிக்க இவற்றை அடக்கியாளும் பண்பை உடைமையாகக் கொள்ளுதல் இன்றியமையாததாகிறது. இவை அடக்கம் பெற்றால் வெகுளாமை, வெஃகாமை, வினைத்தூய்மை, இனியவை கூறல் போன்ற நற்குணங்களை மனிதன் பெறுவான். இவற்றின் விளைவாய் அவனிடம் மனிதநேயம் மிளிரும். இதனாலேயே உயிருக்கே ஆக்கமாக விளங்குவது அடக்கமுடைமை என்கிறது வள்ளுவம். (குறள்.13:2)
ஒழுக்கமுடைமை
இங்கு பேசப்படும் மனிதநேயப் பண்புகளான இதர ஒன்பது உடைமைகளையும், அதன் செயல் வெளிபாடுகளையும் தனக்குள் உட்கொண்டுள்ள பொதுமையும் புரிதல் பரப்பும் கொண்டது ஒழுக்கமுடைமை. ஒழுக்கம் இருவகைத்து. ஒன்று நல்லொழுக்கம், பிறிதொன்று தீயொழுக்கம், வள்ளுவம் உடைமை என்று குறிப்பிடுவது நல்லொழுக்கத்தையேயாம். தீயொழுக்கம் மண்டிக் கிடக்கும் சமூகத்தில் நல்லொழுக்கமும், அதன் தொடர்ச்சியாக அறச் சிந்தனையும் தழைக்கவேண்டும் என்பதே வள்ளுவத்தின் குறிக்கோள். எனவே, சமூகத்தின் வளர்ச்சியையும், தனிமனிதனின் ஒழுகலாறுகளையும், சீர்மைப்படுத்தும் ஒழுக்கமுடைமை மனிதநேயத்தின் பாற்படுகிறது.
பொறையுடைமை
பொறுமையும், இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் சால்பும் உடையது பொறையுடைமை, ஒருவன் தன்பால் செய்யும் செயல்களின் விளைவுகளையும் அவ்விளைவுகளை உள்வாங்கிக் கொண்டு தான் அவன்பால் செய்யப்புகும் செயல்களின் விளைவுகளையும் ஆராய்ந்து பொறுமையுடன் செயல்படுவதால் இருவருக்கும் நன்மை பயக்கும் வழிகளைக் கண்டுணரலாம். இவ்வாறு நன்மைதரும் வழிகளை உருவாக்கித் தருவதால் மனிதநேய அணுகுமுறையைச் சார்ந்ததாக பொறையுடைமை விளங்குகிறது.
அருளுடைமை
அன்பின் கனிந்த; முதிர்ந்த நிலை அருள். இப்பண்பால் மண் உயிரையும் தன் உயிர்போல் எண்ணும் பாங்கும் (குறள்.25:4) வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் மன இயல்பும் கைவரப்பெறும். இவ்வுணர்வை ஒருவன் பெற்று மனிதநேயப் பண்புடன் விளங்கினால் வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, இனிளயவை கூறல், ஈகை ஆகிய செயல் வெளிப்பாடுடையதாக அவனது வாழ்க்கை அமையும். இவ்வாறு, மனிதநேயத்தில் விளைநிலமாக அருளுடைமை விளங்குகிறது.
அறிவுடைமை
அறிவு என்பது மெய்ப்பொருள் காணும் தன்மையது (குறள்.43:3) நன்மை எது தீமை எது என்பதைப் பகுத்தாராய்ந்து நன்மை பயக்கும் செயல்களின்பால் மனிதனை ஊக்கிச் செலுத்துவது அறிவு (குறள். 43:2) மனிதநேயமும் நன்மை பயப்பதையே தனது உயிர்நாடியாகக் கொண்டிருப்பதால் நல்ல செயல்களுக்கான விளையூக்கியாக உள்ள அறிவுடைமையும் மனிதநேயப் பண்புகளுக்குள் அடங்குகிறது. அறிவுடைமைத் தனது உடைமையாககக் கொண்டவனிடம் சான்றாண்மை, சொல்வன்மை, சிற்நினஞ் சேராமை, தீவினையச்சம், வினைத்தூய்மை, வெஃகாமை ஆகிய பண்புநலன்கள் அணிசேர்ந்து நிற்கும்.
ஊக்கமுடைமை
மனஊக்கம் இன்றேல் செயல் ஊக்கம் பெறாது. நற்செயல்களை வளர்க்கும் மன வேகத்தின் தன்மைக்கேற்பவே மனிதன் உயர்வடைகிறான் (குறள்.60:5) "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" (குறள் 60; 6) ஆயின் அவை செயல்வடிவம் பெற்ற மானுடத்திற்கும், தனிமனிதனுக்கும் நலம் பயப்பதாய் அமையும். எனவே, நலம்பயக்கும் ஊக்கமுடைமை மனிதநேயத்திற்குட்படுகிறது.
ஆள்வினையுடைமை
மனஊக்கமும், செயலூக்கமும், ஒன்றினையும்போது இடைவிடாத மெய் முயற்சியான ஆள்வினையுடைமையானது கிட்டுகிறது. இடைவிடாத மெய் முயற்சியால் கிடக்கும் பலனையும், அதன்பொருட்டு உண்டாகும் இன்பத்தையும் பெரிதும் விருமூபாத ஒருவனால் அவனது சுற்றத்தார்க்கு மிகுந்த பலனும், இன்பமும் சென்றடைகிறது. (குறள்.62:5). எனவே, நற்செயலைச் செய்துமுடித்து, பிறர்நலம் பேணும் தன்மையான ஆள்வினையுடைமையும் மனித நேயத்தோடு ஒன்றுகிறது. ஆள்வினையை உடைமையாகக் கொண்டவனிடம் மடியின்மை, இடுக்கண் அழியாமை, வினைத்திட்பம், வினை செயல்வகை போன்ற பண்புகளும் வளர்கின்றன.
பண்புடைமை
"பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்" என்கிறது சங்க இலக்கியம் (கலி.80) எனவே தான், வள்ளுவம், "பண்புடையார்ப்பட்டு, உண்டு உலகம்" (குறள். 100:6) என்றும், "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" (குறள் 14:10) என்றும் குறிப்பிடுகிறது. "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" எனவே, உயர்ந்த சான்றோர்களின் வாழ்க்கைப் பண்புகளை உடைமைகளாகக் கொள்ளவேண்டும் என்பது பெறப்படும். உயர்ந்த பண்பியல் கூறுகளான சான்றாண்மை, ஒழுக்கமுடைமை, பண்புடைமை ஆகியவை ஒன்றோடொன்று நெருங்கிய கருத்தியல் பிணைப்பைக் கொண்டுள்ளன. சிறந்த வாழ்வியல் பண்புகளைக் கொண்டவன் மனிதநேயத்தின் கொள்கலனாக விளங்குவான். ஆகையால், பண்புடைமையும் மனித நேயத்தின் முக்கியக் கூறுகளுள் ஒன்றாகத்திகழ்கிறது.
நாணுடைமை
நாணுடைமை என்பது அறம் அல்லாத செய்கையினால் நிகழும் தீமைகளைக் கண்டு அஞ்சி அவற்றைச் செய்ய நாணுதலாகும். (குறள். 102:5) மனித நேயச் சிதைவை உண்டாக்கும் செயல்களுக்காக நாணுதல், அறிவுடைமை, பண்புடைமை, சான்றாண்மை ஆகிய பண்புகளோடு ஒப்புநோக்கத்தக்கது. இவ்வுடைமையைத் தன்னகத்தே கொண்டவன் 'நன்றியில் செல்வம்' சேர்க்கத் துணியமாட்டான். இதனால் சமூக வாழ்க்கையைக் குலைக்கும் முயற்சிகள் நடைபெறமாட்டா.
திருக்குறள்: மனிதநேய வினையூக்கி
திருக்குறளில் மனித உடைமைகளாகக் குறிப்பிடப்படுவனவற்றுள் முதல்ஐந்து அறத்துப்பாலுக்கும், அடுத்த ஐந்து பொருட்பாலுக்கும் உரியனவாய் உள்ளது.
பொருளீட்டுவதும் அதனைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும் மானுட இயற்கை. இவை இரண்டையும் நெறி பிறழாது உயர்ந்த பண்புகள் அவசியப்படுகின்றன. இவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் எந்தவிதச் சிதைவுமற்ற மனிதநேயப் பெருவாழ்வு கிட்டும் என்பது வள்ளுவம். இவ்வாறு தேவைப்படும் உயர்ந்த பண்புக் கூறுகளையே திருவள்ளுவர், அறம், பொருள் என்னும் இரண்டு பெரும் பிரிவுகளுக்கு இடையிடையே உயிரோட்டமாக இணைத்துள்ளார். இவற்றுக்கிடையிலான பொருண்மைத் தொடர்புகளை இதர அதிகாரங்களோடு பொருத்தி மேலாய்வுகள் நிகழ்த்தினால் இவற்றை மட்டும் 'உடைமை' என்று குறிப்பிட்டுச் சொன்னதன் காரணங்கள் புலப்படக்கூடும்.
திருக்குறள் கூறும் பத்து அக உடைமைகளான உள்ளார்ந்த வினையூக்கிகளும், மனிதனுக்குள்ளே இயங்கி, புற உடைமைகளுக்கான தேடுதல்களில் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதால், மனிதநேயமிக்க வாழ்வியலை வளர்த்து, ஓர் சமூகத்தை நோக்கி அழைத்துச் செல்லும் தன்மையன என்பது கண்கூடு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குறளில் மனிதநேயக் கூறுகள், குறள், உடைமை, மனிதனின், மனித, என்பது, உடைமைகள், விளங்குகிறது, செல்வம், நிலை, ஒழுக்கமுடைமை, மனிதநேயம், நன்மை, இவ்வாறு, திருக்குறள், அன்பு, தான், உடைமைகளாகக், மனிதநேயப், பண்புடைமை, ஆகிய, உயர்ந்த, பொறையுடைமை, ஊக்கமுடைமை, பத்து, என்றும், என்னும், வள்ளுவம், வாழ்க்கை, இவற்றை, உடைமையாகக், சமூக, செயல், அமையும், மெய், அடக்கமுடைமை, அடக்கம், செய்யும், அறிவுடைமை, நாணுடைமை, சான்றாண்மை, உள்ள, வேண்டும், மனிதன், தேவையான, சமூகத்தில், குறிப்பிடப்படுகின்றன, பொருள், திருவள்ளுவர், மனிதநேயத்தின், அல்லது, பல்வேறு, உள்ளார்ந்த, வெஃகாமை, உள்ளம், இயல்புகளின், சிறந்த, நல்ல, சமூகத்தின், வள்ளுவர், Research Ideas - ஆய்வுச் சிந்தனைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்