முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » ஆய்வுச் சிந்தனைகள் » தமிழ் நாவல்களின் முதலாளிகள் பற்றிய சித்திரிப்பு
தமிழ் நாவல்களின் முதலாளிகள் பற்றிய சித்திரிப்பு
- ப. கிருஷ்ணன்
முன்னுரை
புதினங்கள் வெறும் வாழ்க்கையை மட்டும் விளக்குவதோடு நின்றுவிடாமல் சமுதாய நிகழ்வுகளில் காணப்பெறும் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனின் விரிவான அறிவியல் வளர்ச்சிக்கேற்ப அமையும் பல்வேறு வடிவங்களையும் மாற்றங்களையும் விளக்குவதாகவும் அமையவேண்டும். இவ்வகையில் சமூக முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்வில் ஏற்படும் இன்பதுன்பங்களை விளக்கி அவற்றிற்குக் காரணமாகும் காரணிகளுள் ஒன்றாக முதலாளி வர்க்கத்தை தம் நாவல்களில் படைத்துக் காட்டுகின்றனர். இம்முதலாளி வர்க்கத்தின் செயல்பாடுகள் தமிழ் நாவல்களில் விளக்கப் பெறும் பான்மையினை இக்கட்டுரை ஆராய்கிறது.
முதலாளிவர்க்கம்
"முதலாளிகளை மார்க்ஸ், எங்கெல்ஸ், 'பூர்ஷ்வாக்கள்' என்றசொல்லால் குறிப்பிடுகின்றனர். அதாவது நவீன முதலாளிகளின் வர்க்கம் என்கின்றனர். இந்த நவீன முதலாளிகள் சமுதாய பொருளுற்பத்திச் சாதனங்களின் சொந்தக்காரர்கள்; கூலிக்கு ஆட்களை அமர்த்தி வேலை வாங்குபர்கள்" எனவும் குறிப்பிடுகின்றனர்.
மேலும், உழைப்பாளிகளைச் சரண்டி உபரி மதிப்பை உற்பத்தி செய்து, அதை அபகரித்து, அளவின்றிச் செல்வம் சேர்க்கும் நோக்கில் செயல்பட்டு முதலாளித்துவச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவதோடு உற்பத்தி சாதனங்களை உடைமையாகக் கொண்டு கூலி உழைப்பைச் சுரண்டி வாழும் வர்க்கமே முதலாளி வர்க்கம்" என்கிறார் கார்ல்மார்க்ஸ். இக்கூற்றுக்கள் முதலாளிகளின் பொருள் தேடும் நோக்கியையும் அதற்காக அவர்கள் கையாளும் வழிமுறைகளையும் காட்டுகின்றன. இவ்வகையில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கும் தன் மூலதனத்தைப் பெருகூகுவதற்கும் முதலாளிகள் கையாளும் வழிமுறைகளைத் தமிழ் நாவல்கள் பின்வருமாறு காட்டுகின்றன.
1. தொழிலாளர்களின் பொதுவான நலன்களைக் கருதாமை
தொழிலாளர்நலம் என்பது தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு உணவு வசதி, ஓய்வு நேரத்தில் ஓய்வு எடுப்பதற்குரிய இட வசதி, மருத்துவ வசதி, தொழிற்சாலைக்குப் போக வர வசதி, மகப்பேறுவிடுமுறை வசதி, கல்வி வசதி, சமுகக் காப்பீட்டு, ஓய்வு ஊதியத் தொகை, ஓய்வூதியம், சேமநலநிதி முதலிய வசதிகள் ஆகியவற்றை உள்ளடங்கியதாகும். தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் இயற்றப்பட்ட தொழிலாளர் நலச் சட்டம், முதலாளிகள் தொழிலாளர்களுக்குச் செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகளை வலியுறுத்துகிறது. ஆனால் இச்சட்டத்தில் கூறப்பெற்றிருக்கும் அடிப்படை வசதிகளைக் கூட முதலாளிவர்க்கம் செய்து கொடுக்காததால் தொழிலாளர்களின் நலன் பாதிக்கப்படுகிறது என்பதை நாவலாசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
நெசவு மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் தொழில்கள் வரன் முறைப்படுத்தப்பெறாமையால்ஆலைத் தொழிலாளர்களுக்கு உள்ள சட்டப் பாதுகாப்பு இத்தொழிலாளர்களுக்குக் கடைப்பதில்லை. எனினும், சட்டத்திற்கு அப்பாற்பட்ட மனிதநேயம், தனிமனித சுதந்திரம் ஆகியவை கூட இவர்களுக்கு முதலாளி வர்க்கத்தினரால் அளிக்கப் பெறுவதில்லை. எனவே, அன்றாடம் உணவுக்காகவும், வறுமை நிலையைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு உழைக்கின்றனர். இது முதலாளிகளுக்கு வாய்ப்பாக போய் விடுகிறது. இதனால் போதிய உணவின்றிக் கால்வயிற்றுக் கஞ்சியோடு வாழ்க்கை நடத்துகின்றனர். உழைப்பையும், உற்பத்தித் திறனையும் மிகுதியாகப் பெற்றுக் கொள்ளும் முதலாளிவர்க்கம் தொழிலாளர்களின் நலனில் சற்றும் கவனம் செலுத்துவதில்லை.
ஆலை முதலாளிகளான ரங்கசாமி (மெ.பூ) ஜாட்டியா (சித) ஆகியோர் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எவ்விதக் காரணமும் இன்றி முன்னறிவிப்புச் செய்யாமல் ஆலையை மூடிவிடுகின்றனர். இதனால் தொழிலாளர்களிடையே எதிர்காலம் ஏறித்த அச்ச உணர்வும், மாற்று வேலை தெரியாத காரணத்தால் வறுமையும் உண்டாக்கப் பெறுகின்றன. மேலும், தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையோ, இழப்பீட்டுத் தொகையோ, வழங்கப் பெறுவதில்லை. என்பதும் நாவல்களின் எடுத்துக்காட்டப் பெறுகின்றன.
"உற்பத்தி செய்யும் முறைகளின் ஏற்பட்ட மாறுதலாலும், அல்லது உற்பத்திப் பொருள்களின் விளைவாகவும் அல்லது புதிய உற்பத்தி முறைகளை, சாதனங்களை அல்லது பொருள்களைப் பயன்படுத்துவதால் அந்த உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்குச் சுகக்கேடு உண்டாகக்கூடும் என்று கருதுகின்றபோது தொழிலாளர்களுக்குத் தேவைப்படும் மருத்துவ வசதி அளிக்கப்பற வேண்டும்" என்பது தொழிலாளர் நலச்சட்டம் சுட்டிக் காட்டுவதற்கு நேர்மாறாக உப்பளத் தொழிலாளர்கள் வெயிலின் கொடுமைக்கும், வெண்மையின் சூட்டுக்கும் இடையில் வேலை செய்கின்றனர். இதனால் கால்கள் பாதிக்கப்படுவதோடு கண் பார்வையும் இழக்க நேரிடுகிறது. இத்தகைய உடல்நலச் சீர்கேட்டைத் தடுப்பதற்கான மருத்துவ வசதியும், செய்து கொடுக்கப் பெறாமல் வேலை வாங்குகின்றனர். உப்பளத்தில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதியோ, மகப்பேறு கால விடுப்போ, அளிக்கப் பெறுவதில்லை என்பதை 'கரிப்புமணிகள்', 'உப்புவயல்' போன்ற நாவல்களில் கூறப்பெறுகின்றன.
மேலும், " ஒரு தொழிற்சாலையில் ஒரு நாளில் நான்கரை மணிநேரங்களும் மேலும் இரவு நேரங்களிலும் ஒரு குழந்தையை வேலையில் ஈடுபடுத்தக்கூடாது" என வரையறை செய்யப்பெற்றிருப்பினும், தீப்பெட்டித் தொழிலகத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்குப் பதினான்கு மணி நேரம்வேலை செய்கின்றனர். இதனை, 'காத்தமுத்து' என்பவர்
காலை நான்கு மணிக்குத் தொழிலகத்துக்குள் வந்தால் ஏழிலிருந்து எட்டு மணி வரையிலான காலைக்கடன்களுக்கான விடுப்பு நேரம்தவிர, இரவு ஒன்பதை அல்லது பத்து மணி வரையிலும் தொழிலகத்துக்குள் தான் வாழ்வு கழிகிறது" (கூ.கு., ப. 65)
எனத் தொழிலாளர்கள் கூடுதலான நேரம் வேலை வாங்கப் பெருவதை எடுத்துரைக்கிறார்.
எனவே, முதலாளிவர்க்கம் மூலதனத்தைப் பன்மடங்கு பெருக்குவதிலும், உற்பத்தித் திறனை அதிகரித்து அதன் மூலம் இலாபத்தைக் குவிப்பதிலும் மட்டுமே ஆர்வம் கொள்வதால் உழைக்கும் தொழிலாளர்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன.
2. தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்தல்
தம்மை எதிர்க்கும் தொழிலார்களின் ஒற்றுமையுணர்வைக் கண்டு அச்சமுற்று முதலாளிகள் பின்வருமாறு செயல்படுகின்றனர்.
நெசவுத் தொழிலாளர்களின் ஒற்றுமையுணர்வையும் ஒருமித்த கருத்தையும் அறிந்த மைனர் முதலியார், தாதுலிங்க முதலாளி (ப.ப.) போன்றவர்கள் சுப்பையா என்ற தொழிலாளியைப் பயன்படுத்தி ஒற்றைமையைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இது போன்றே ராமசாமி ஐயர் (வே.தீ) என்பவர் முதலாளி வர்க்கத்தை ஒன்று சேர்த்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தையும் ஒற்றுமையையும் தடுத்துவிடுகிறார்.
விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து நிலவுடைமையாளர்களிடம் கூலியுயர்வு, மற்றும் அடிப்படைத் தேவைகள், உரிமைகள் ஆகியவற்றைப் பெறுவதற்கு முனைப்புடன் செயல்படுகின்றனர். ஆனால் தொழிலாளர்களிடையே பகைமை உணர்வை உண்டாக்கி ஒற்றுமை உணர்வைத் தடுத்து அதிகாரத்தைத் தன்வயமாக்கிக் கொள்ள முதலாளிகள் விழைகின்றனர். இத்தகைய செயல்பாடுகளுக்கு மாரப்பன் (தாகம்) சித்தையன், மொட்டையன் (கரி) போன்ற தீயப் பண்புடையவர்களைத் துணையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஆலைத் தொழிலாளர்கள் மூடப்பெற்றுள்ள ஆலையைத் திறக்கக்கோரி ஒன்றுபட்டுப் போராட்டம் நடத்த முயற்சிக்கும் வேளையில் ஆலை முதலாளியான 'ரங்கசாமி' (மெ.பூ) வன்முறைக் கும்பலைக் கொண்டு தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்துவிடுகிறார். தொழிலாளர்களுக்கு எதிராகச் செயல்படும் 'வேணுப்பிள்ளை' (பா.இ.ஓ.பா) என்பவரைத் தொழிற்சங்கத் தலைவராக்கித் தொழிலாளர்களின் நலன்களுக்காகக் குரல் கொடுக்கும் 'பரந்தாமன்', துரைசிங்கப் பெருமாள் போன்றவர்கள் அமைக்கும் சங்கத்தில் தொழிலாளர்களை இணையவிடாமல் தடுத்து, அச்சுறுத்துகின்றனர்.
மேலும் சிங்கக்கவுண்டர் (சர்) என்பவர் ஆலைத்தொழிலாளர்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு இருதரப்பினருக்குமிடையே மோதலை உருவாக்கி அவர்களிடையே நிலவும் ஒற்றுமையைச் சீர்குலைக்கின்றனர்.
இவ்வாறே இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் பாலன் ஆசிரியர், கணேசன் போன்றவர்களின் தலைமையில் தொழிலாளர்கள் ஒன்றுபடுவதை அறிந்த நிர்வாகத்தினர் 'குப்புச் சாமி' எனும் தொழிலாளரைப் பயன்படுத்தித் தொழிலாளர்களிடையே காணப்பெறும் கருத்தொருமையும் போராட்டத்திற்கான கூட்டு முயற்சியையும் தொழிற்சங்கத் தலைவர்களின் வாயிலாகவும், சுயநலத்தை விரும்பும் தொழிலாளர்களின் மூலமாகவும் தோல்வியடையச் செய்ய முயலுகின்றனர்.
தொழிலாளர்களிடையே ஒற்றுமையுணர்வு ஏற்பட்டுவிட்டால் முதலாளி மற்றும் நிலவுடைமையாளர்கள் தங்களது ஆதிக்கம் தகர்க்கப்படும் என்று அஞ்சுகின்றனர்.
3. தொழிலாளர்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தல்
முதலாளிவர்க்கம் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கும் இலாபத்தைப் பெருக்குவதற்கும் தொழிலாளர்களிடையே பிரிவினை ஏற்படுத்துதல், தொழிலாளர் சங்கத்திக் எதிராக முதலாளிகளே சங்கம் அமைத்து தலைவராகச் செயல்படுதல்; தொழிலாளர்கள் வேலைக்கு வர மறுக்கும் போது கூலியை உயர்த்தித் தருவதாகக் கூறிவிட்டு, உழைப்பைப் பெற்றுக்கொண்ட பின் குறைந்த கூலியைக் கொடுத்து ஏமாற்றுதல்; ஆகிய பல சூழ்ச்சித் திறன்களைக்க் கையாளுகின்றனர் எனலாம்.
'சர்க்கரை' எனும் நாவலில் ஆலை முதலாளி ஒரு டன் கரும்புக்கு பிற ஆலைகளை விட இரண்டு ரூபாய் உயர்த்திக் கொடுக்கிறார். ஆனால் எடை வைக்கும் இயந்திரத்தில் எடையைக் குறைத்துக் காட்டுமாறு செய்துவிடுகிறார். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட முதலாளிக்கு மிகுந்த இலாபம் கிடைக்கிறது. இதனை, நாச்சியப்பகவுண்டர் என்பவர்,
"அந்த எடை மிசினை கொண்டு வந்து பூட்டும் பொழுதுமெக்கானிக்கிடம் கணிசமான தொகை கொடுத்து டன் எடைக்கு அம்பது கிலோ கொறைச்சுக் காட்டும்படியா ஒழுங்கமச்சுவச்சுட்டேன். இதுதா அதனோட ரகசியம்" (சர்:ப. 175).
எனக்கூறுவதன் வாயிலாக ஒருபுறம் விலை அதிகமாகக் கொடுப்பதான தோற்றத்தை உருவாக்கி விட்டு மறுபுறம் எடைக்குறைப்புச் செய்து அதன் வழி இலாபம் சம்பாதிக்கும் முதலாளிவர்க்கத்தின் சூழ்ச்சித்திறம் வெளிப்படுத்தப் பெறுதலை அறியமுடிகிறது.
தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து கூட்டுறவு சங்கம் அமைத்துப் பணம் திரட்டித் தோட்டத்தை வாங்க முயற்சிப்பதைத் தொழிலாளர்களிடையே பொய் பிரச்சாரம் செய்து கூட்டுறவு சங்கத்தில் சேரவிடாமல் தடுப்பதற்காகத் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து வேலை கொடுப்பதாகக் கூறி கூட்டுறவு சங்கத்தினரின் முயற்சியை தடை செய்து விடுகின்றனர். (பா.ம.கா., ப. 47)
தொழிலாளர்கள் வறுமை காரணமாக அவ்வப்போதும், திருவிழாக்காலங்களிலும் திருமண நிகழ்ச்சிகளுக்கும் முன் பணம் பெறுகின்றனர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு குறைந்த கூலி கொடுப்பதும்; கடுமையான பணிச்சுமை அளிப்பதும்; கூடுதலான வேலை நேரம் உழைக்க வற்புறுத்துதலும் நாவல்களில் கூறப்பெறுகின்றது.
இவ்வாறு முதலாளி வர்க்கத்தினர் பல்வேறு வகையில் சூழ்ச்சித்திறனைக் கையாண்டு தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுகின்றனர் எனலாம்.
4. தொழிலாளர்களைப் பழிவாங்கும் போக்கு
தொழிலாளர்கள் குடும்பச் சூழல் காரணமாக முதலாளிகள் தரும் இன்னல்களைப் பொறுத்துக் கொண்டு உழைக்கின்றனர். ஆயினும் வரம்பு மீறிய செயல்பாடுகளை எதிர்க்கும் பொழுது முதலாளி வர்க்கத்தினர் தொழிலாளர்களைப் பழிவாங்கும் போக்கு பல நாவல்களில் காணப்பெறுகின்றது.
கைத்தறி முதலாளிகள் கூலியை உயர்த்திக் கேட்கும்போது நூல் கொடுக்க மறுத்து விடுகின்றனர். இதனால் நெசவுத் தொழிலையேநம்பி வாழ்க்கை நடத்தும் தொழிலாளர்கள் வறுமைச் சூழலுக்குட்பட்டு இறக்க நேரிடுகிறது. மைனர் முதலியாரின் (ப.ப) நெருக்குதலின் காரணமாக 'கைலாச முதலியார்' என்பவர் தற்கொலை செய்து கொள்கிறார். முதலாளிகள் நூல் தரமறுத்துவிடும் நிலையில் தொழிலாளர்கள் கடன் வாங்கி வாழ்க்கை நடத்துவதால் கடன் தொல்லைகளுக்கு ஆளாகி இன்னலுறுகின்றனர். நிலவுடைமையாளர் களான கண்ணையா நாயுடு (கு.பு), சேனாதிபதி கவுண்டர் (தாகம்) போன்றவர்கள் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தைப் பொறுத்துக்கொள்ள இயலாமல் குடிமைகளுக்குத் தீ வைத்துவிடுகின்றனர். இக்கொடிய வன்முறைச் செயலுக்குப் பல தொழிலாளர்கள் பலியாகின்றனர். மேலும் அநீதிகளை எதிர்த்துக் குரல் எழுப்பும் தொழிலாளர்களான வீரைய்யன் (கரி.), மாயாண்டி (தாகம்), முத்து (பா.ம.கா) ஆண்டியப்பன் (ஊ.ஒ.பு) போன்றவர்களைத்தாக்கிப் பொய் வழக்கு பதிவு செய்கின்றனர்.
உப்பளத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், கங்காணிகளின் தொல்லைகள் போன்றவற்றை எதிர்த்து, முதலாளிகளுக்கு எதிராகச் செயல்படும் 'ராமசாமி' (க.ம) என்பவன் வேலையைவிட்டு நீக்கப் பெறுகிறான். முதலாளியின் விருப்பத்திற்கு இணங்காத 'பொள்ளாச்சி' என்ற பெண் தொழிலாளரைக் கடுமையான வேலைப் பகுதியான மேட்டுப் பகுதியில் பாத்தி மிதிக்கவும், உப்புச் சுமக்கவும் செய்கின்றனர். இதனால் தொழிலாளர்களின் உடல்நிலை பாதிக்கப்பெறுகின்றது. மேலும் உப்பளத் தொழிலாளர் மதுரை வீரன் (உ.வ) முதலாளியின் ஆதரவாளர்களால் கொலை செய்யப்படுகிறான். முத்துப்பாட்டா, ஏலி, (அ.க.) போன்ற மீனவத் தொழிலாளர்கள் கோவில் நிர்வாகத்தினரின் வன்முறைக்குப் பலியாகின்றனர்.
இவ்வாறு முதலாளிவர்க்கத்தின் அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் தொழிலாளர்கள் பழிவாங்கப் பெறுவதாக நாவல்களில் காட்டப்பெறுகின்றன.
5. சாதிய உணர்வைத் தூண்டிவிடுதல்
விவசாயத் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு எழுதப்பெற்றுள்ள சாயாவனம், குருதிப்புனல், தாகம், கரிசல், ஊருக்குள் ஒரு புரட்சி, மூங்கில் காட்டு நிலா, சேற்றில் மனிதர்கள் போன்ற நாவல்களில் சாதிய வகையில் ஒடுக்கப்பட்ட மக்களே பண்ணையடிமைகளாகவும், விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும் இருப்பதாகக் காட்டப் பெறுகின்றன. இத்தொழிலாளர்களை நிலவுடைமையாளர்கள் அடிமையாகவும்இழிவாகவும் நடத்தும் போக்கு ஆகியன இந்நாவல்களில் சித்தரிக்கப் பெற்றுள்ளன. மேலும், சாதி உணர்வைத் தூண்டிவிட்டு ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு அபாயகரமான வன்முறைச் செயல்கள் ஏற்படுத்தப் பெறுகின்றன.
'குருதிப்புனல்' எனும் நாவலில் கோபால், சிவா ஆகியோர்கள் தொழிலாளர்களை ஒன்று திரட்டி நிலவுடைமை ஆதிக்கத்திற்கு எதிராகப் போராட்ட உணர்வையும் விழிப்புணர்வையும், எழுச்சியையும், ஏற்படுத்தும் சூழலில் கண்ணையா நாயுடு தொழிலாளர்களிடம் சாதி உணர்வைத் தூண்டிவிட்டு நிலவுடைமை எதிர்ப்பாளர்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையே நிலவும் உறவைத் துண்டித்துவிட முயற்சிக்கிறார். இதனை,
"சேப்புக் கொடியைப் பிடிச்சுகிட்டு அலைஞ்சீங்க, ஒளிச்சுப் புடுவோன்
ஒளிச்சு... வடக்கேலேந்து பாப்பாத்திக்குப் பொறந்த மவன் ஒத்தன்
வந்து உங்க சாதிப்பொண்ணைக் கெடுத்துப்பூட்டான்... ஏண்டா
பரதைப் பயல்வுளா, சாதி ஒற்றுமை வேணாம் உங்களுக்கு?"
என்று கண்ணையா நாயுட, கோபால், சிவா போன்றவர்கள் மீது அவதூறு பரப்பிப் பொய் குற்றம் சுமத்தித் தொழிலாளர்களிடம் சாதிய உணர்வைத் தூண்டிவிடுகிறார்.
இவ்வாறு தொழிலாளர்களிடம் சாதி உணர்வினைத் தூண்டிவிட்டு அவர்களிடையே காணப்பெறும் ஒற்றுமையையும், நல்லுறவையும் சிதைப்பதன் மூலம் தொழிலாளர்களின் உழைப்பே தொடர்ந்து சுரண்டும் மனநிலையை முதலாளிகளிடத்தில் காணலாம்.
எனவே "முதலாளித்துவம், மனிதச் செயல்முறைகளின் அனைத்துத்துறையிலும் மீண்டும் மீண்டும் சுரண்டும் உறவுகளையும் வர்க்க வேறுபாடுகளையும் தோற்றுவித்துக் கொண்டிடேயிருக்கிறது. நிர்வாகத்தில் தொழிலாளர்கள் உண்மையான பங்கு வகிப்பதை வளர்ச்சியுறச் செய்யும் முயற்சிக்குப் பலவிதமான எதிர்ப்பை முதலாளி வர்க்கத்தினர் காட்டி வருகிறார்கள்" என்ற கூற்று முதலாளிவர்க்கத்தினரின் செயல்பாட்டை மெய்ப்பிப்பதாக உள்ளது எனலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நாவல்களின் முதலாளிகள் பற்றிய சித்திரிப்பு, தொழிலாளர்களின், தொழிலாளர்கள், முதலாளி, வேலை, மேலும், செய்து, முதலாளிகள், தொழிலாளர்களுக்கு, நாவல்களில், வசதி, தொழிலாளர்களிடையே, இதனால், கொண்டு, உணர்வைத், முதலாளிவர்க்கம், என்பவர், அல்லது, போன்றவர்கள், உழைப்பைச், தாகம், செய்கின்றனர், பெறுகின்றன, செய்யும், தொழிலாளர், மருத்துவ, தூண்டிவிட்டு, உற்பத்தி, விவசாயத், சாதி, பொய், கூட்டுறவு, காரணமாக, கண்ணையா, எனலாம், தொழிலாளர்களிடம், சாதிய, போக்கு, வர்க்கத்தினர், இவ்வாறு, உப்பளத், காணப்பெறும், வாழ்க்கை, பெறுவதில்லை, ஓய்வு, இதனை, ஒற்றுமையைச், தொழிலாளர்களை, குரல், எதிராகச், ஒன்று, எனும், Research Ideas - ஆய்வுச் சிந்தனைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்