முல்லாவின் கதைகள் - முட்டாள் காவலர்கள்
முல்லா வாழ்ந்துவந்த நாட்டிற்கு அடுத்த நாட்டிலே சட்டம் ஒன்று போட்டிருந்தார்கள்.
அந்தநாட்டின் எல்லைக்குள் யாரும் கோழி முட்டைகளைக் கொண்டு சென்று வியாபாரம்
செய்யக்கூடாது. ஆனால் கோழிகளைக் கொண்டு செல்வதற்குத் தடை ஒன்றும் இல்லை. முல்லா
அந்த நாட்டுக்கு பிறர் அறியாமல் கோழிமுட்டைகளைக் கொண்டு சென்று வியாபாரம் செய்து
வந்தார்.
ஒரு நாள் முல்லா கோழி முட்டைக் கூடையுடன் அந்த நாட்டுக்குள் பிரவேசித்தபோது இரண்ட காவலர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர்.
மூடபப்பட்டிருந்த அவர் கையிலிருந்த கூடையைப் பார்த்து " கூடைக்குள் என்ன இருக்கிறது ?"
என்று காவலர்கள் கேட்டனர்.
" கோழிக்குஞ்சுகள் இருக்கின்றன" என்றார் முல்லா
" கோழிக்குஞ்சுகளை எடுத்துச் செல்வது குற்றமல்ல என்றாலும் சுங்க அதிகாரிகள் இந்தப் பக்கம் வரும்போது கூடையை அவர்களிடம் காண்பிக்க வேண்டும்!" என்று காவலர்கள் கூறினார்.
" அவ்வளவு நேரம் என்னால் தாமதிக்க முடியாதே! இன்று ஒரு நாள் என்னை நாட்டுக்குள் போக விடக் கூடாதா?" என்று கேட்டார் முல்லா
" அது எப்படி முடியும். உம்மை எதிர்பாராத விதமாக சுங்க அதிகாரிகள் பிடித்துக்கொண்டு உமது கூடையைப் பரிசோதிக்கும்போது இதிலே முட்டை இருந்து விட்டால் உமக்குத் தண்டனை கிடைப்பது மட்டுமல்ல எங்கள் வேலையும் போய்விடும் " என்றனர் காவலர்கள்.
" என்னுடைய கஷ்டம் உங்களுக்கு விளங்கவில்லை. நான் உடனே செல்லாவிட்டால் குடி முழுகிப் போய்விடும். தயவு செய்து இன்று என்னை விட்டு விடுங்கள் " என்றார் முல்லா. காவலர்கள் யோசித்தனர். பிறகு இருவரும் கலந்து பேசினர்.
பாவம், இந்தப் பெரியவர் அவசரமாகப் போக வேண்டும் என்கிறார். கூடைக்குள் என்ன இருக்கிறது என்று நாமே பரிசோதித்துப் பார்த்து விட்டு இவரை அனுப்பி விடலாமே என்று இருவரும் தீர்மானித்தனர்.
" கூடையை நாங்களே பரிசோதனை செய்து பார்த்துவிடுகிறோம்" என்று கூறியவாறு காவலன் ஒருவன் கூடையின் மூடியை அகற்றினான்.
கூடைக்குள் ஏராளமான முட்டைகள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
" பெரியவரே, பொய்சொல்லி அல்லவா எங்களை ஏமாற்றப்பார்த்தீர். சுங்க அதிகாரிகளிடம் நீங்கள் பிடிபட்டிருந்தால் எங்கள் வேலை போய்விட்டிருக்கும்" என்றனர் காவலர்கள்.
முல்லா கோபங்கொண்டவர்போலப் பாவனை செய்து " நீங்கள் இருவரும் அடிமுட்டாளாக இருக்கிறீர்களே! நான் பொய் சொன்னேன் என்று ஏன் அபாண்டமாகப் பேசுகிறீர்கள்?" என்று கேட்டார்.
" கூடைக்குள் கோழிக்குஞ்சுகள் இருப்பதாக அல்லவா நீர் சொன்னீர்?" என்றான் ஒரு காவலன்.
" ஆமாம், அப்படித்தான் சொன்னேன்!" என்றார் முல்லா.
" கூடைக்குள் கோழி முட்டைகள் அல்லவா இருக்கின்றன. இது பொய் அல்லவா!" எனக் காவலர்கள் வினவினர்.
" மோசமான முட்டாள்களாக நீங்கள் இருவரும் இருக்கிறீர்கள். இப்போது என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். கூடைக்குள் என்ன இருக்கின்றன?" என்று முல்லா கேட்டார்.
" கோழி முட்டைகள்" என்று காவலர்கள் பதில் கூறினார்கள்.
" கோழி முட்டைகளுக்குள் என்ன இருக்கின்றன?" என்று வினவினார் முல்லா. காவலர்கள் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திரு திருவென விழித்தனர்.
" என்ன முழுக்கிறீர்கள்? வேறு மாதிரியாகக் கேட்கிறேன் கோழிக் குஞ்சுகள் எங்கிருந்து வருகின்றன?" என்று முல்லா கேட்டார்.
" கோழி முட்டைகளுக்குள்ளிருந்து" என காவலர்கள் விடை கூறினர்.
" அப்படியானால் முட்டைகளுக்குள் கோழிக்குஞ்சுகள் இருக்கின்றன என்று ஆகிறதல்லாவா?"
என்று கேட்டார் முல்லா.
" ஆமாம் " என்று காவலர்கள் விடை கூறினர்.
" அதாவது கூடைக்குள் முட்டைகள் இருக்கின்றன அல்லவா" என்று வினவினார் முல்லா.
" இதைத்தான் நான் சொன்னேன். ஆக நான் கோழிமுட்டைகளுக்குள் உள்ள குஞ்சுகளைத் தான் எடுத்துச் செல்லுகிறேன். ஆகவே சட்டப்படி இது குற்றமல்ல" என்று முல்லா வாதித்தார். அந்த முட்டாள் காவலர்கள் முல்லாவுக்கு ஒரு கும்பிடு போட்டு நாட்டுக்குள் செல்ல அனுமதித்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முட்டாள் காவலர்கள் - முல்லாவின் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - முல்லா, காவலர்கள், கூடைக்குள், இருக்கின்றன, அல்லவா, கேட்டார், செய்து, முட்டைகள், இருவரும், நீங்கள், சொன்னேன், கொண்டு, என்றார், கோழிக்குஞ்சுகள், நாட்டுக்குள்