இந்திய தேசிய இயக்கம் (1905 - 1916)
1916 ஆம் ஆண்டு இரண்டு தன்னாட்சி கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஏப்ரல் மாதத்தில் பூனாவில் திலகர் தன்னாட்சி கழகத்தை தொடங்கினார். செப்டம்பரில் அன்னி பெசன்ட் அம்மையார் சென்னையில் மற்றொரு தன்னாட்சி கழகத்தை நிறுவினார். தன்னாட்சி இயக்கத்தின் முக்கிய குறிக்கோள் பிரிட்டிஷ் பேரரசுக்குள்ளேயே இந்தியாவுக்கு தன்னாட்சி பெறுவதாகும். சுதந்திரம் என்பது அனைத்து நாடுகளுக்கும் உள்ள இயற்கையான உரிமை என்று இருவருமே நம்பினர். மேலும், இந்தியாவின் வளங்கள் அதன் முன்னேற்றத்துக்காக பயன்படுத்தப்பட வில்லை என்று தன்னாட்சி இயக்கத் தலைவர்கள் கருதினர்.
இரண்டு தன்னாட்சி கழகங்களுமே தங்களுக்குள் கூட்டுறவு மனப்பான்மையோடு நடந்து கொண்டன. காங்கிரசுடனும், முஸ்லிம் லீக்குடனும் சேர்ந்து போராடின. திலகரின் தன்னாட்சி இயக்கம் மகாராஷ்டிரத்தில் கவனத்தை செலுத்தியது. அன்னி பெசன்டின் இயக்கம் இந்தியாவின் இதர பகுதிகளில் செயல்பட்டது. தன்னாட்சி இயக்கம் இந்திய தேசிய இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்தது எனலாம். சுதேசி இயக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. பெண்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
1917 ஆகஸ்டு 20 ஆம் நாள் இங்கிலாந்து அயலுறவு அமைச்சர் மான்டேகு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்தியாவின் எதிர்கால அரசியல் சீர்திருத்தங்கள் பற்றி இந்த அறிக்கை குறிப்பிட்டது. இந்தியாவில் படிப்படியாக தன்னாட்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார். இந்த ஆகஸ்டு அறிக்கை தன்னாட்சி இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
புரட்சிகர குழுக்கள்
19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வங்காளம், மகாராஷ்டிரம், பஞ்சாப், சென்னை ஆகிய பகுதிகளில் புரட்சிவாத குழுக்கள் தோன்றின. மிதவாத, தீவிரவாத கொள்கைகள் இரண்டிலுமே இவர்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே, பல ரகசிய புரட்சி அமைப்புகளை அவர்கள் தோற்றுவித்தனர். வங்காளத்தில் 'அனுசிலான் சமிதி', 'ஜுகந்தர்' ஆகிய ரகசிய இயக்கங்கள் நிறுவப்பட்டன. மகாராஷ்டிரத்தில் சவார்க்கர் சகோதரர்களால் 'அபினவ பாரத் சங்கம்' தோற்றுவிக்கப்பட்டது. சென்னை மாகாணத்தில் நீலகண்ட பிரம்மச்சாரி 'பாரத மாதா' சங்கத்தை தோற்றுவித்தார்.
பஞ்சாபில் இளைஞர்களிடையே புரட்சிக் கருத்துக்களை பரப்புவதற்கு அஜித் சிங் ஒரு ரகசிய அமைப்பை ஏற்படுத்தினார். லண்டனிலிருந்த இந்தியா ஹவுசில், ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா இந்திய தேசியவாதிகளான மதன்லால் திஸ்ரா, சவார்க்கர், வி.வி.எஸ். அய்யர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றோரை ஒன்று திரட்டினார். அமெரிக்காவில் லாலா ஹர் தயாள் என்பவர் காதர் கட்சியைத் தோற்றுவித்து இந்தியாவிற்கு வெளியே புரட்சியாளர்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கம் (1905 - 1916) , தன்னாட்சி, இந்திய, இயக்கம், வரலாறு, இந்தியாவின், தேசிய, ரகசிய, இந்தியா, அறிக்கை, சென்னை, குழுக்கள், சவார்க்கர், இங்கிலாந்து, ஆகிய, மகாராஷ்டிரத்தில், கழகத்தை, இரண்டு, அன்னி, பகுதிகளில், மீண்டும், ஆகஸ்டு