முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » செட்டிநாட்டு வாழ்வியல்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - செட்டிநாட்டு வாழ்வியல்

கட்டுச் செட்டாய் வாழப் பழகிவிட்டவர்களைப் பார்த்து, "செட்டிமகன் கெட்டான் போ!" என்று சொல்கின்ற வழக்கம் செட்டிநாட்டுப் பகுதியில் இன்றைக்கும் உண்டு. அந்த அளவுக்கு திட்டமிடலோடு வாழத் தெரிந்தவர்கள் செட்டியார்கள். அரண்மனை போன்ற வீடுகள், "போதும்" என்று சொல்லுமளவுக்கு அறப்பணிகள், சளைக்காத கோயில் திருப்பணிகள். இவை தான் செட்டியார் சமூகத்தை இன்றைக்கும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொண்டிருக்கிற விஷயங்கள்.
ஒரு காலத்தில் காவிரிப் பூம்பட்டினத்தில் தன வணிகர்களாக இருந்த ஒரு சமூகம் சோழ மன்னர்களால் பெரும் துயர் அடைந்தனர். தங்களை நிரந்தரமாக காத்துக் கொள்ள சோழமண்டலத்தை விட்டு பாண்டிய மண்டலத்தில் உள்ள செட்டிநாட்டில் குடியேறினார்கள். "தன வணிகர்" என்பது மாறி "நாட்டுக் கோட்டை செட்டியார்கள்", "நகரத்தார்கள்" என்ற பெயர்களே இவர்களுக்கு நிலைத்துப் போனது.
இவர்களது குலத்தொழில் உப்பு வணிகம் தான். கப்பல் போக்குவரத்து இல்லாத காலத்திலேயே பாய்மரக் கப்பல் மூலம் வியாபாரத்தை தொடர்ந்தனர். நம் நாட்டு நவதானியங்கள், பஞ்சு ஆகியவற்றை பர்மா, உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டு சென்று விற்று காசாக்கினர். பர்மா வளம் கொழிக்கும் நாடாக இருப்பதற்கு செட்டியார்களும் ஒரு விதத்தில் காரணமாய் இருந்தனர். விளைநிலங்கள் இருந்தும் பயன்படுத்த வழி தெரியாமல் பர்மிய மக்கள் இருந்த போது அவர்களுக்கு லேவாதேவிக்கு (வட்டி) பணம் கொடுத்து விவசாயம் பண்ண வைத்தது செட்டியார்கள் தான்.
அரண்மனை போல் வீடுகட்டி நாமும் அரசர்களுக்கு சமமாக வாழவேண்டும் என்று நினைத்து, பர்மாவிலிருந்து உயர் ரக தேக்குகளைக் கடல் வழியாகவே கொண்டு வந்தனர். பல்வேறு நாட்டு கட்டடக்கலைகள் அனைத்தையும் அரண்மனை வீடுகளுக்குள் புகுத்தினார்கள்.
வியாபாரத்துக்காக வெளிநாடு செல்லும் செட்டியார்கள் நல்லபடியாக திரும்ப வேண்டும் என ஆச்சிமார்களும், "தனியே இருக்கும் ஆச்சிக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது", என்று செட்டியார்களும், கடவுளை வேண்டுவார்கள். இந்த வேண்டுதல் தான் இவர்களை கோயில் திருப்பணிகளைச் செய்யத் தூண்டிவிட்டது. தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை தான தர்மங்களுக்காகவே ஒதுக்கினர்.
பர்மாவில் மட்டுமே 62 கோயில்களைக் கட்டி வைத்திருக்கும் செட்டியார்கள் தாங்கள் பிழைக்கப் போன சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் கோயில்களைக் கட்டினர். இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிறகு பர்மாவை விட்டு முற்றிலுமாய் வெளியேறிவிட்டார்கள். யுத்தத்தில் சிதைந்து போன முருகன் கோயில் ஒன்றை மறுபடியும் இங்கிருந்து போய் புதுப்பித்துக் கும்பாபிஷேகம் நடத்திவிட்டுத் திரும்பினர்.
ஆரம்பத்தில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த தொண்ணூற்றாறு ஊர்களில் வசித்து வந்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இன்றைக்கு 74 ஊர்களில்தான் இருக்கிறார்கள். அத்தனை ஊர்களிலும் இவர்களுக்கு சிவன் கோயில் உண்டு. செட்டியார்களில் ஒன்பது பிரிவு உண்டு. ஒரே கோயில் கும்பிடுபவர்கள் தங்களுக்குள் கல்யாண சம்பிரதாயம் வைத்துக் கொள்வதில்லை. காரணம், அவர்கள் அண்ணன் - தங்கை உறவாகிவிடுவார்கள்.
செட்டியார் வீட்டுத் திருமணங்களெல்லாம் அந்தக் காலத்தில் ஐந்து நாட்கள் நடக்கும். இப்போது அதுவே சுருங்கிப்போய் ஒரே நாளில் முடிந்துவிடுகிறது. இவர்களின் குல தொழில் உப்பு வணிகம் என்பதால் தோளில் வள்ளுவ பை (அதற்குள் உப்பும், பிற வழிபாட்டு பொருள்களும் இருக்கும்) சுமந்து குதிரை மீது வந்துதான் மாப்பிள்ளை தாலி கட்டுவார்.
திருமணம் நிச்சயமான உடனேயே பெண், மாப்பிள்ளை இரு வீட்டாரும் தங்களது குலக்கோயில்களுக்கு தனித்தனியே போய் பதிவேட்டில் திருமண விவரத்தை எழுதி வைக்க வேண்டும். திருமணத்துக்கு முதல் நாள், மணமகன், மணமகள் வழிபடும் கோயில்களில் இருந்து சாமி கழுத்திலுள்ள பூமாலையை கோயில் பணியாளர்கள் கொண்டு வந்து கொடுப்பர். மறுநாள் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் அந்த மாலை தான் முதலில் கழுத்தில் ஏற வேண்டும்.
இவ்வாறு திருமணம் செய்தால்தான் செட்டியாரும் ஆச்சியும் ஊர் "புள்ளி" கணக்கில் சேர்க்கப்படுவர். அந்த காலத்திலெல்லாம் செட்டியார் சமூகத்தில் பெண்கள் மிகக் குறைவு. இதனால் செட்டியார்களே வராகன் கணக்கில் வரதட்சணை கொடுத்து ஆச்சிகளைக் கைப்பிடித்திருக்கின்றனர்.
ஆனால், இன்றைக்கு எந்த சமூகத்தைக் காட்டிலும் அதிகமான அளவு வரதட்சணை கொடுக்கிற சமூகம் - செட்டியார் சமூகம்தான். இந்த சமூகத்தை இப்போது கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிற விஷயமும் இதுதான்.
செட்டியார் வீட்டுத் திருமணம் என்றால் அதில் வைர நகை நிச்சயம் இருக்கும். எத்தனை நகை வேண்டுமானாலும் அவரவர் வசதிக்கேற்ப கூட்டிக் கொண்டே போகலாம். படுக்கும் மெத்தையிலிருந்து மருந்து இடிக்கும் உரல் வரைக்கும் ஏற்றிக் கொண்டுதான் புகுந்த வீட்டுக்குள் வலது காலை எடுத்து வைக்க வேண்டும். மாமியாருக்கெனவும் குறிப்பிட்ட சில சீர்வரிசைகளை அந்த பெண் கொண்டு போக வேண்டும்.
திருமணத்தைப் போலவே செட்டியார் வீடுகளில் நடக்கும் இன்னொரு சுப வைபவம் - "சுவீகாரம்" எடுப்பது. பொருளீட்டுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்வதால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. "புள்ள கூட்ட" நினைப்பவர்கள் தங்கள் குலக்கோயிலைச் சார்ந்த ஒருவரைத்தான் சுவீகாரம் எடுத்துக் கொள்ள முடியும்.
ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு சுவீகாரம் போய்விட்டால், பிறந்த வீட்டுச் சொத்தில் அந்தப் பையன் எந்த உரிமையும் கொண்டாட முடியாது. அதே நேரம், புதிதாகப் போன வீட்டில் எந்த விசேஷமாக இருந்தாலும் அந்த பையனுக்கே முதலுரிமை.
பணம் சம்பாதித்து தரவேண்டியது மட்டுமே செட்டியார்கள் பொறுப்பு, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதிலிருந்து அனைத்துப் பொறுப்புகளையும் ஆச்சிகள் தான் கவனித்துக் கொள்கிறார்கள்.
விரல்விட்டு எண்ணிப் பார்த்தால், நாட்டுக் கோட்டை செட்டியார் இனத்தின் மக்கள் தொகை ஒரு லட்சத்தைத் தாண்டாது. இருந்தாலும், பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் செய்து வந்துள்ள கல்விப் பணிக்குச் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும் அழிக்க முடியாத ஆதாரங்கள். தவிர அரசியல், அறிவியல், கலை என பல துறைகளிலும் வேரூன்றி நிற்கிறார்கள்.
அந்தக் காலத்தில் வெளிநாடுகளுக்குப் போய்ப் பொருளீட்டி, அரண்மனை வீடுகளைக் கட்டி வாழ்ந்தவர்களின் வாரிசுகள் பலர், இன்றைக்குத் தினசரி சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மூதாதையர்கள் கட்டி வைத்துவிட்டுப் போன மாளிகை வீடுகளையும், மரம் உள்ளிட்ட பொருட்களை விற்றுச் சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதுதான் வேதனைக்குரிய விஷயம்.
"கெட்டாலும் செட்டி, கிழிஞ்சாலும் நெய்(யும்) புடவை" என்று ஒரு பழமொழி செட்டிநாட்டுப் பகுதியில் உண்டு. சுக்கு நூறாகக் கிழிந்து போனாலும் தறியில் நெய்யும் புடவைக்கு உள்ள மவுசே தனிதான். அதுபோல, வாழ்ந்து கெட்டுப் போனாலும் தங்களுடைய பண்பாட்டையும் பழக்க வழக்கத்தையும் விட்டு விலகாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் செட்டிமார்கள் உண்மையிலேயே மேன்மக்கள்தான்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
செட்டிநாட்டு வாழ்வியல் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ", செட்டியார், கோயில், தான், செட்டியார்கள், அந்த, வேண்டும், கொண்டு, உண்டு, எந்த, அரண்மனை, கட்டி, திருமணம், காலத்தில், விட்டு, உள்ளிட்ட, இருக்கும்