முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு
தேர்தல்கள் நெருங்கிவிட்டால் போதும் - பல்வேறு விதமான சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் மீது அரசியல் கட்சிகளுக்குக் கரிசனை சுரந்து விடும். இவ்வாண்டு இறுதிவாக்கில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, சத்தீஸ்கர், மிஜோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன அல்லவா? அதைக் குறியாக வைத்து மூன்று முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாகக் கொண்டு வருவதென்று மத்திய அரசு திடீரெனத் தீர்மானித்துள்ளது. முன்னேறிய சாதிகளில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு மசோதா, பசுவதைத் தடை மசோதா, தில்லிக்கு மாநில அந்தஸ்தை அளிக்கும் மசோதா ஆகியவையே - அந்த மூன்றும்.
தற்போதைய நாடாளுமன்றக் கூட்டம் முடிவடைய இன்னும் ஒருவார காலமே இருக்கிறது. அப்படியிருக்க இம்மூன்று விதமான மசோதாக்களைத் தயாரித்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வைக்க முடியுமா என்பது கேள்விக் குறியே.
இம்மூன்றிலும் அவசரமாக எதையும் செய்ய முடியாத சங்கடமான பிரச்சினை, ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு. இதுகுறித்து ஆராய அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு நிறுவியுள்ளது. தற்பொழுது அரசியல் சட்டத்தில் இத்தகைய இட ஒதுக்கீட்டு முறைக்கு இடமில்லை. அரசியல் சட்டத்தைத் திருத்தினால்தான் இந்த இடஒதுக்கீடு முறையைச் செயல்படுத்த முடியும். அத்தகைய திருத்தத்துக்கு மக்களவையில் மூன்றில் இரு பகுதியினரின் ஆதரவு தேவை. அந்த அளவுக்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்களவையில் பலம் இல்லை. அதனால் இப் பிரச்சினையில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசின் ஒத்துழைப்பு இல்லாமல் வாஜ்பேயி அரசால் எதையும் செய்ய முடியாது.
சமூக, கல்வி ரீதியாகப் பின்தங்கிய வகுப்புகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு செய்ய அரசியல் சட்டம் வகை செய்கிறது. இந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையின் முதன்மையான நோக்கம் - கல்விக் கூடங்களிலும் அரசு நிர்வாகப் பணிகளிலும் வாய்ப்பு அளிப்பது மட்டுமல்ல, காலங்காலமாக ஆட்சிப் பொறுப்பிலும் சமூக - கலாசார நீரோட்டங்களிலும் ஒதுக்கப்பட்டுக் கிடந்து வரும் சமுதாயத்தின் பெரிய பகுதிக்கு - அதற்குரிய பங்கையும் பொறுப்பையும் அளித்து சமூக ரீதியாக அதை மேம்படுத்துவதுதான்.
முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த ஏழைகளின் பிரச்சினை அடிப்படையில் வேறுபட்டது. இவர்கள் சமூக ரீதியாகவும், கல்வி அடிப்படையிலும் முன்னேறியவர்கள். ஆனால் பொருளாதார ரீதியாகப் பிற்பட்டவர்கள். இவர்களுக்கு, சில தலைமுறைகளுக்கு வாய்ப்பு அளித்து விட்டால் பொருளாதாரத்திலும் இவர்கள் முன்னேறிவிட முடியும்.
ஆனால் பிற்பட்ட வகுப்புகளின் நிலை வித்தியாசமானது. இவை சமூக ரீதியாக முன்னேறி, ஏனைய முன்னேறிய வகுப்புகளுக்கு இணையான அந்தஸ்தைப் பெறுவதற்குப் பல காலம் பிடிக்கும். எனவேதான் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான இடஒதுக்கீடு முறைக்கு அரசியல் சட்டமே அங்கீகாரம் அளித்துள்ளது. அதே அளவுகோல் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏழைகளுக்கும் பொருந்தக்கூடியதா என்பது சர்ச்சைக்குரியதே. ஆயினும் மனிதாபிமான அடிப்படையில் குறிப்பிட்ட கால அளவை வரையறுத்து - இத்தகைய இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது சாத்தியமே. அதையும் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின்றிச் செயல்படுத்த வழியில்லை. ஏனெனில் தலித் சமூகங்கள், பிற்பட்ட வகுப்புகள் ஆகிய இருதரப்புக்கும் ஒதுக்கப்படும் மொத்த இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது - என்பது உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே விதித்துள்ள நிபந்தனை. ஆக, இந்த இடஒதுக்கீடு திட்டம் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - அரசியல், இடஒதுக்கீடு, சமூக, செய்ய, மசோதா, அரசு, முன்னேறிய, என்பது